Sunday, April 12, 2015

முன்னேற்றத்தின் முகவரி

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று விரும்பாதவர் எவருமிலர். ஆனாலும், அனைவராலும் அதனை அடைய முடிவதில்லையே.
            ஏன்? 
.           பேருந்து நிலையத்தில், மனைவியுடன் நின்றிருந்த, என் நண்பரைக் கண்டதும் எனக்கு, அதிர்ச்சியாக இருந்தது எப்போதும்,. மலர்ந்த முகத்துடன் ஆரோக்கியமாக விளங்குபவர், உடல் இளைத்து, சோர்வாகக் காணப்பட்டார். மனைவியின் முகமும் வாடியிருந்தது.  அருகில் சென்று விசாரித்தேன்.
நண்பர் பத்தாம் வகுப்புடன், பள்ளிக்கல்வியை நிறுத்திக்கொண்ட இளைய மகன் தம்பித்துரை, வேலை வெட்டியில்லமால், ஊர் சுற்றிப் பொழுது போக்குவதாகவும், தான் சொல்வதை கேட்பதில்லை என்றும் சொல்லிவருத்தப் பட்டார்.
அவர் மனைவி, ‘அண்ணா, நீங்களாவது அவனுக்கு புத்தி சொல்லி, அவனுக்கு ஒருவழி காட்டக்கூடாதா? என வேதனையுடன், என்னை வற்புறுத்தவே, நானும் சம்மதித்து, மறு நாள் அவர் வீடு சென்றேன்.
தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த அவர் பையனிடம், ‘தம்பி, என்ன பண்ணிட்டுருக்கே? வேலை ஏதாவது கிடைச்சுதா?’  என்று கேட்டேன்.
’யார்கிட்டயும், கைகட்டி, அடிமையா வேலை செய்யறதுல எனக்கு இஷ்டமில்ல. சொந்தக் கால்லியே நின்னு முன்னுக்கு வரணும்னு நினைக்றேன், இது தப்பா?’ திருப்பிக்  கேட்டான்.
’இதுதான் சரியான லட்சியம். அரசும், இளைஞர்கள், சுய தொழில் செய்து, முன்னேறனும் சொல்றது’ என்றேன்.
’உங்க நண்பர் கிட்ட நல்லா புரியும்படியா சொல்லுங்க. நா பிசினெஸ் பண்ண அப்பாவ ஒரு வருஷமா ஒரு லட்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணு, சம்பாதிச்சு திருப்பிக் கொடுத்துடறேன்னு தெனமும் கேட்டுட்ருக்கேன். ஆனா,…….
’            இக்கட்டத்தில் இடைமறித்த நண்பர், ‘பத்தாவதே பாஸ்பண்ணத் துப்பில்லே, பிசினெஸ் பண்ணிக் கிழிச்சே. பாலு, இத்ன வருஷமா, அவன் ஊரை சுத்தறதுலேயும், டிவி முன்னால பழியா கெடக்கறதயும் விட்டுட்டு, ஏன் ஒரு வேலைய தேடிக்கலேன்னு கேளு’ சொல்லவும் நான் அவனைப் பார்த்தேன்.
‘அங்கிள், நாந்தான், ஒருத்தர்கிட்ட வேல செய்யறதுல எனக்கு இஷ்டமில்லென்னு சொல்றேனே. இவர் ஏன் எனக்கு பிஸினெஸ் பண்ண பணம் தரமாட்டேங்கிறார்னு அவரையே கேளுங்க. முதல் இல்லாம எந்த தொழிலாவது தொடங்க முடியுமா, நீங்களே சொல்லுங்க.’ அவன் எனக்கு நீதிபதி பொறுப்பு கொடுத்தான்.   
            இது நம் நாட்டில் பெரும்பாலான வீடுகளில் தினமும் காணும் நிகழ்வு தான்.   

பொதுவுடைமைச் சித்தாந்தம் உலகில் வித்துன்றி, இன்று பல நாடுகளில் ஆட்சிபுரியக் காரணமாகவிருந்தது, கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் எழுதிய ‘DAS CAPITA’ [’CAPITAL’] எனும் நூல் தான்.  இந்த சொல்லுக்கு தமிழில் ‘மூலதனம்’ என்பர்.
      மூலம் என்ற சொல்லுடன் தனம் எனற சொல்லை இணைத்து ஒரே சொல்லாக்கும்போது, அது ‘மூலதனம்’ என்றாகிறது.
       தனம் என்ற சொல்லிற்கு பணம் எனவும், மூலம் என்ற சொல்லிற்கு, ’ஆதி’, ’ஆரம்பம்’ எனவும் பொருள் கொண்டு, பணமில்லாமல், எந்த தொழிலும் செய்யமுடியாது, எனவே, தொழில் தொடஙக பணம் மிக மிக அவசியம் என்று, நண்பரின் மகன் மட்டுமல்லாமல், பெரும்பாலோர் உறுதியாக நம்புகின்றனர்.
       ’முதல் இலார்க்கு ஊதியம் இல்லை’ என்ற குறளையும், சான்றாகக் கூறுகின்றனர். ஆனால், முதல் என்ற சொல்லுக்கு, பணம் எனவும் பொருள் கொள்கிறார்கள்.
       இந்த கருத்து சரியா?
       முற்றிலும் தவறானது.
        அன்று விநாயக சதுர்த்தி. பூஜைக்கு பொம்மை வாங்க, என் பெயரனுடன் கிளம்பினேன். ஊரில், மூலைக்கு மூலை களிமண். பிள்ளையார் பொம்மை விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொம்மை வாங்க நிறையக் கூட்டம்.
         பெயரன் தேர்வு செய்த பொம்மையை வாங்கியவுடன், பத்து வயது கூட நிரம்பியிராத இரண்டு சிறுவர்கள் எங்களை சூழ்ந்து கொண்டு, என்னிடம், ‘எருக்கம்பூ மாலை வாங்குங்க ஸார், அஞ்சே ரூவாதான்’ என்றார்கள். 
         அவனை மாதிரி நிறைய சிறுவர்கள், இந்த எருக்கம்பூ மாலை விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். விநாயகருக்கு எருக்கம்பூ மாலை, அவ்விழாவின் போது அணிவிப்பது மரபானதால், வாங்கினேன்.
         மகிழ்ச்சியடைந்த அந்த பையனிடம், ‘ இந்த மாலைங்கள வித்து எவ்வளவு சம்பாதிப்பே?’ கேட்டேன்.
         ’ஸார் இது வர, நூறு ரூவா சம்பாதிச்சுட்டேன்’ என்றவன் தன் பையிலிருந்து, ஒரு கத்தை நோட்டுகளைக் காட்டினான். பின், தன் இடது கையை உயர்த்தி, முழங்கையிலிருந்து, உள்ளங்கை வரை, வளைகாப்பு சிறப்பு செய்யப்பட்ட பெண்கள் கைகளில் அணிவிக்கப்பட்ட வளையல்கள் போல் தொங்கிய எருக்கம்பூ மாலைகளைக் காண்பித்து, ’இத வித்து இன்னும் நூறு ரூவா சம்பதிச்சுடுவேன். மொத்தம் இரு நூறு ரூவா நிச்சயம்.’ என்றவன் குரலில், தன்னம்பிக்கை, ஆனந்தம், பெருமிதமும் அணி வகுத்து வெற்றி உலா வந்தன.
           மாலை தயாரித்து விற்பதும் ஒரு தொழில் தான். ஆனால், இந்த இரு நூறு ரூபாயைச் சம்பாதிக்க, அவன் போட்ட முலதனம் எவ்வளவு?
           ஓரு காசு கூடக்கிடையாது.
            ஊரில் தெரு ஓரங்களில் இருக்கும் எருக்கம்பூ செடிகளிருந்து, பூக்களைப் பறித்தான். வாழை மரங்களில் தொங்கும், காய்ந்த நார்களை, பிய்த்து, மாலைகளைக் கட்டி, பொம்மை வாங்குபவர்களிடம் விற்று இந்த பணத்தைச்





சம்பாதித்துள்ளான். அவனைப்போல் நிறைய சிறுவர்கள், எருக்கம்பூ மாலை மட்டுமல்லாமல், அருகம்புல் கட்டுகளையும் விற்று சம்பாதித்துள்ளார்கள். இன்றும் விழாக்காலங்களில் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
             
            இதற்கு, போடப்பட்ட ’முதல்’, பணமல்ல. உழைப்பு, உடல் உழைப்பு தான்.
            விறகு அடுப்பு உபயோகித்த காலங்களில், கிராமங்களில், பெண்கள் தெரு ஓரங்களிலுள்ள மரங்களின் அடியில் விழுந்துள்ள சுள்ளிகளையும், குச்சிகளையும் பொறுக்கிக் கட்டுகளாக் கட்டி, விற்றுப் பிழைப்பார்கள். ஆனால், இந்த தொழிலுக்கும், போடப்படும் மூலதனமும் பணமல்ல. உழைப்பு உழைப்பு தான்.
            இன்றும் நகரங்களில் தெருவில் எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை சேகரித்து, விற்று, நூற்றுக் கணக்கான ஏழைகள், வாழ்க்கை நடத்துவதை, நாம் தினமும் பார்க்கிறோம். இந்த தொழிலுக்கும் போட்ட மூலதனமும் பணமல்ல. வேறு என்ன?
             உழைப்பு.
             உழைப்பு,
             உழைப்பு ஒன்றுதான்.
            இவற்றிலிருந்து, ஒன்று தெளிவாகிறது.
            தொழில் தொடங்க தேவை பணமல்ல.
             அடிப்படை உழைப்புதான்.
             அதுமட்டும் இருந்துவிட்டால் போதும்,
             உழைக்கும் ஆர்வம் உள்ளவற்கு, தொழில் தொடங்க பணம் இன்றியமையாத தேவையே அல்ல.
            எனது நண்பர் தனது மகனை’வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றி பொழுதை வீணடிக்கிறான்; என்றபோது, பயன்படுத்திய இரண்டு வார்த்தைகளில், ஒன்று, வேலை, மற்றது வெட்டி என்பன தான்.
             வேலை, பொருள் புரிகிறது. வெட்டி என்ற சொல், வெட்டியாகக் கூறப்பட்டதா? இல்லை பொருள் உள்ளதா?
     ஆழ்ந்த பொருள் உண்டு, உழைப்பைக் குறிப்பது. உடல் உழைப்பால், நிலத்தைவெட்டுவது, குளம் கிணறு வெட்டுவது, மரம் வெட்டுவது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
       நாம் ஆழ்ந்து சிந்தனை செய்தோமானால், எந்த தொழிலானாலும், அதற்கு வித்தாகத் திகழ்வது உழைப்பு தான்., என்பதை உணரலாம்.எனவே உழைப்பு தான் மூலதனம்.
        இதனை கார்ல் மார்க்ஸ் தனது நூலில் விரிவாக கூறியுள்ளதை காணலாம். அதனால் தான், ’உழைக்கும் கரங்கள் தான், உலகை உருவாக்குகின்றன’ என்பர்.
      பொதுவாக, உழைப்பு எனப்படுவது, உடல் உழைப்பைத்தான் குறிப்பிடுகிறதென்று ஒரு கருத்து நிலவுகிறது.
     

உழைப்பை,
1.       மூளை உழைப்பு, மற்றும்,
2.       உடல் உழைப்பு என
            இரு வகையாகப் பிரிவினை செய்வர்.
     இவர்கள் கருத்துப்படி, மூளை உழைப்புதான், உயர்ந்தது எனவும்,போற்றுதலுக்குரியதென்றும், அது முறையாகக் கல்வி கற்றவர்களின் தனி உடமையாகவும் சிறப்பித்து, அவர்களை உயர்த்துவர்.
     அதனால் அத்தைகையோரிடம், மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வது மிகவும் அவசியமென்றும் அறிவுறுத்துவர்.
    ஆனால், கல்வி கற்காதவர்களால், வயிற்றுப் பிழைப்பிற்காக, மேற்கொள்ளப்படுவதுதான் உடல் உழைப்பு எனவும், அதற்குக் கேவலம் உடல் வலு மட்டும் இருந்தாலே போதும், மூளையே தேவை இல்லை,எனவும் விவரித்து, சுருக்கமாக, மூளையே இல்லாதவர்கள்தான் உடல் உழைப்பாளிகள் என்றும், அதனை தாழ்வானதாகவும் மதிப்பிடுவர்.
    அதனால், உடல் உழைப்பு, தாழ்ந்ததெனவும் கொண்டு, அவர்களுக்குரிய மரியாதையைத் தராது, நடத்துவதும், கண்கூடு.
      இது சரியல்ல.
      எந்த ஒரு செயலும், உடல் மற்றும் மூளை, இவ்விரண்டின் ஒத்திசைவால்தான் நடைபெறுகிறது.
      மருத்துவத்தில், அறுவை சிகிச்சை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் பட்டம் பெற அவர்களுக்கு, புத்தக அறிவுடன், செயல் முறையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
      இவர்கள் செய்யும் சில நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள், ஆறு, ஏழு மணி நேரம் வரை கூட நீடிக்கும் இச் சிகிச்சை, மூளை மற்றும் உடல் உழைப்பு இரண்டுமே, இணைந்தால் தான் நடைபெறும். அதிலும், உடல் உழைப்புதான் அதிக நேரம் எடுக்கிறது.
      மூளை உழைப்பாளர்கள், என்ற அடைமொழிக்குள் கொண்டுவரப்பட்ட, யாருடைய செயலையும், ஆராய்ந்தால், இந்த உண்மை விளங்கும்.
     உடல் உழைப்பை, தரம் தாழ்ந்ததாகக் கருதுபவர்கள், அந்த உழைப்பாளிகளின் பணிகளைக் கூர்ந்து கவனித்தால் அவர்களின் வேலை, உடல் வலுவினால் மட்டும் செய்யப்படுவதில்லை, மூளையின் ஒத்திசைவும் தேவைப்படுகிறது, என்பதை உணரலாம்.
     அந்த வணிகர் ஓட்டி வந்த இறக்குமதி செய்யப்பட்ட வெளி நாட்டு நாலு சக்கர வாகனம், நடுச்சாலையில் நின்றுவிட்டது. அவர் என்ன முயற்சித்தும், இம்மியும் கூட அசையாமல், சண்டித்தனம் செய்தது. எதிரில் இருந்த இரு
சக்கர, நாலு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைக்குச் சென்றார். பழுது பார்ப்பவரின் முரட்டுத் தோற்றம், தனது வாகனத்தின் பழுதை கண்டுபிடித்து, சரி செய்யும் திறன் கண்டிப்பாக இருக்காது என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தினாலும், வேறு வழியின்றி, அவரின் உதவியை நாடினார்.
     



அவரும் வாகனத்தின் ‘பானெட்டை’ திறந்து ஒவ்வொரு பாகத்தையும் உற்று நோக்கி, வணிகரை, வண்டியை ’ஸ்டார்ட்’ செய்யுமாறு கூறினார்.   வணிகர் முயற்சித்தும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. பழுது பார்ப்பவர், மீண்டும் ஒவ்வோரு பாகத்தையும் ஆராய்வதில் சில நிமிடங்களைச் செலவிட, வணிகர் நம்பிக்கை இழந்தார்.
      அப்போது, பழுது பார்ப்பவர், தன் கையிலிருந்த முடுக்கும் கருவியால், ஒரு பாகத்தின் தலையில் லேசாகத் தட்டி விட்டு, ‘இப்ப ’ஸ்டார்ட்’ பண்ணுங்க ஸார்’ சொல்லவே, வணிகர், நம்பிக்கையின்றி, தனக்குள் முணுமுணுத்தபடி, செயலில் இறங்க, வண்டி தான் புறப்படத் தயார் எனத் தன் மொழியில் தகவல் கொடுத்தது.
      ’ஏங்க, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி வண்டிகள ரிப்பேர் பண்ணியிருக்கீங்களா? ஆச்சர்யத்துடன் கேட்டார்.
      ’இது தான் முதல் தடவ. ஆனா ‘பேஸிக்ஸ்’ தெரிஞ்சதால, ‘டீப்பா’ கவனிச்சுதல பிராப்லத்தை கண்டுபுடிக்க முடிஞ்சது. முயற்சித்தா, முடியாததுன்னு எதுவுமே கிடையாதுங்க’ சிரித்தார்.
      பாராட்டிய வணிகர், ’எவ்வளவுங்க சார்ஜ்’, கேட்டார்.
      ’நூறு ரூவா’
      ’என்னங்க, ஸ்பானரால லைட்டா தட்டினதுக்கா, நூறு ரூவா?
      பிராப்லத்த கண்டுபிடிச்சுதுக்குத்தான் சார்ஜ். ரிப்பேர் ஃப்ரி’ சிரித்தான்.
       உடல் உழைப்பு என்பது, மூளைத் திறனையும் உள்ளடக்கியதுதான் என்பதை இது விளக்குகிற\து.
      இது தொடர்பாக, பிரபல விஞ்ஞானி, ந்யுடன் வாழ்வில் ஒரு சுவையான நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
      இவர் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, யாருடைய குறுக்கீடும் கூடாது என்பதற்காக, தன் பரிசோதனைச் சாலையின் கதவை
 உள்பக்கம் தாளிட்டுக் கொள்வார். மனைவியே தட்டினாலும் திறக்கமாட்டார். இதனால் அவர்களிடையே சண்டை அடிக்கடி ஏற்பட்டாலும், அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
      இவருக்கு பூனைகள் மீது கொள்ளை ஆசை. இவருக்கு பூனைகளின் மீதுள்ள ஆசையைக் குறிப்பிடும், ஓர் நிகழ்வு.
      இவர் தனது ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளை, உடனுக்குடன்  தாள்களில்  எழுதி அருகிலேயே வைத்துக் கொள்ளுவார்.
 ஒரு சமயம், அவ்வாறு எழுதிவைத்திருந்த கிட்டத்தட்ட நூறு பக்கங்களுக்கு மேற்பட்ட காகிதக் கட்டின்மீது, இவருடய பூனை, அருகில் எரிந்துகொண்டிருந்த  மெழுகுவத்தியை தள்ள, அத்தனை காகிதங்களும் எரிந்து சாம்பலாயின. தனது செயலுக்கு வருந்தியது போல், அந்த பூனை,
இவர் காலடியில் அமர்ந்து, ’மியாவ், மியாவ்,’ என தனது மொழியில், கத்தியபடி மன்னிப்பு கேட்டது.
 தனது நீண்டகால ஆராய்ச்சிகளை, தன் செல்லப் பூனை வீணாக்கியதைக் கூடப் பொருட்படுத்தாமல் அதைத் தூக்கி, முத்தமிட்டுக்


கொஞ்சி, ‘போனாப்போறது விடு.. உனக்கு அதோட மதிப்பு தெரியாததால, அப்டி செஞ்சே’ என்று சமாதானப்படுதினாராம்.
     பூனைகளின் மீதுள்ள அதீத பிரியத்தினால், அவைகளுக்கு மட்டும், தனது கொள்கைளிலிருந்து பூரண விதிவிலக்கு அளித்தார். தான் வளர்த்து வரும் ஒரு குட்டி பூனை, தன் அறைக்குள், கதவு தாளிட்டிருந்தாலும், அதன் இஷ்டம் போல எப்போது வேண்டுமானாலும் வந்து போக வசதியாக, கதவின் கீழ் பகுதியில், தச்சரின் உதவியால், ஒரு சிறு நுழைவாயிலை அமைத்துத் தந்தார்.
       ஒரு முறை, இவர் தனது காலை நடைப் பயிற்சியின்போது, தன் பின்னாலே தொடர்ந்து வந்த ஒரு பெரிய சாம்பல் நிற பூனையை வளர்க்க ஆசைப்பட்டு, வீட்டிற்குத் தூக்கிவந்தார். அதுவும், குட்டி பூனையைப் போல தன் அறைக்குள் வந்து போக, கதவில், ஒரு பெரிய நுழை வாயில் போடுமாறு தச்சரிடம் சொன்னார்.
      ’வேண்டாம் ஸார். இருக்கும் சிறிய ஓட்டையையே, பெரிதாக்கினால் போதும். புதிதாக துளை அவசியமில்லை’ என்ற தச்சர், அந்த துளையையே பெரியதாக்கினார். குட்டி பூனையும் பெரிய பூனையும் அதன் வழியாக எந்த சிரமமுமின்றி, வெகு எளிதாக வந்து போகச் செய்தும் காண்பித்தார்.
      மிகவும் வியந்த ந்யூடன் தச்சரின் அறிவுத் திறனைப் பாராட்டி, நிறைய வெகுமதிகள் தந்தார்.
      தனது கண்டுபிடிப்புகளால்,உலகையே பெரும் வியப்பிலாழ்த்திய, விஞ்ஞானிக்கு எப்படி இந்த மிகச் சிறிய விஷயம் தெரியாமல் போயிற்றே என்பது நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா.
     உடலுழைப்பும், மூளை உழைப்பும் பின்னிப் பிணைந்து செயல் படும்போதுதான், உலகில் எதுவுமே நடக்கிறது. இவற்றில், மூளை உழைப்பைமட்டும் பெருமைப் படுத்தியும், மற்றதை சிறுமைபடுத்தியும்
        நடந்து கொள்வது தவறென்பது புலனாகிறதல்லவா.
      எனவே, எந்த பணியானாலும், மூளை மற்றும், உடல் உழைப்பின், ஒத்திசைவு மிகவும் அவசியம். செய்யும் வேலைக்கேற்ப,, இவ்விரண்டின் விழுக்காட்டின் பங்கு வேறுபடலாமேத் தவிர, ஒன்றில்லாமால், மற்றொன்றால் தனித்துச் செயல் பட முடியாது.
      அதனால், இவ்விரண்டு உழைப்பினை தரம் பிரித்து, உயர்ச்சி, தாழ்ச்சி சொல்லுதல் பாபம். 
      ஆனால், இந்த உழைப்பு வெற்றி பெற வேண்டுமானால், அதனை ‘கை’     
 தூக்கிவிட ஒன்று அவசியமாகிறது.
      அது என்ன?

                                   2
           
            அந்த கையைத் தேடி, ஊரெங்கும் அலையவேண்டாம். அது தான்
        நம்பிக்கை. இந்த நம்பிக்கை பிறர் மீதோ, இல்லை பிற பொருள்கள் மீதோ
        சார்ந்திருப்பதில்லை.
       


ஆம். இது தன்னம்பிக்கை.
            தன் மீதுள்ள நம்பிக்கை.
            தன்னால் முடியும் என்ற நம்பிக்கை.
            அதை முடிக்கத் தேவையான திறமை தன்னிடமே உள்ளது என்ற
         உறுதியான மனத்திட்பம்.
            இதனையே, வள்ளுவர்,
            ’வினைதிட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
            மற்றைய எல்லாம் பிற’ என விளக்கியுள்ளார்.
           ஆனால், இந்த தன்னம்பிக்கை அநேகரிடம் இல்லையே. தன்னால்
         முடியுமா என்ற ஐயமும், கண்டிப்பாக தன்னால் முடியாது என்ற, தோல்வி
         உணர்வுந்தான் தாழ்வு மனப்பான்மையாக உள்ளத்தில் வேரூன்றி,
         அவர்களை, சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழவிடாமல் செய்கின்றன.
            இந்த தாழ்வு மனப்பான்மையை வெற்றிகொள்வது எப்படி?
            முதலில், இந்த தன்னம்பிக்கை என்ன என்பதைச் சரியாகப்
          புரிந்துகொள்வது அவசியம்.
            தன்னால் முடியும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் வருமா?
            சந்தேகமே வேண்டாம். அந்த நம்பிக்கையுடன் தான் நாம்
          ஒவ்வொருவரும்  இந்த மண்ணில் பிறந்துள்ளோம்.            
          நாம் மட்டுமல்ல. விலங்குகளும் பறவைகளும் கூடத்தான். 
          அவருடைய பெயரன் கோபு. வயது ஏழு. இரண்டாவது படிக்கிறான். கணிதத்தை தவிர மற்ற எல்லா பாடங்களிலும், அவன்தான் வகுப்பிலேயே, முதல்.ஆனால் கணிதத்ததில் மட்டும் மிகக் குறைந்த மதிப்பெண்களே அவனால் பெற முடிகிறது.
      அவன் வகுப்பு மாணவன் சிவா, பிற பாடங்களில் கோபுவைவிட குறைந்த மதிப்பெண்கள் பெற்றபோதிலும், கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவதால், ஆசிரியை, சிவாவைப் பாராட்டுவது அவனுக்கு வருத்தத்தைத் தந்தாலும், ஒன்றும் செய்ய இயலவில்லை.
            அரசு, ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களை, தேர்வில், பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மேல் வகுப்பிற்கு செல்வதை தடை செய்யக் கூடாது, என்று கட்டளையிட்டதால், அது வரை கவலை இல்லை.
             பிறகு என்ன செய்வது? கவலையுடன் தாத்தா சிந்தித்து, அவனிடம் தன்னம்பிக்கையை தோற்றுவிக்க முயற்சிகள் எடுத்தார். ‘
              ’கோபு, நீ என்னால் முடியும்னு நம்பறதுக்கு பேர் தான் தன்னம்பிக்கை’ பலமுறை விளக்கியும், அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
            அன்று அவர் மனைவி, ‘வாங்க, பக்கத்து வீட்டு பசு மாடு லக்ஷ்மி கன்று போட்டுருக்காம். அதை தரிசிக்கிறது, காமதேனுவையும், நந்தினியையும் தரிசித்த புண்ணியம் தருமாம், வாங்க’ அழைத்ததும், கோபுவையும் கூட்டிக்கொண்டு சென்றார்.
           




பழுப்பு நிற உடலுடன் தாயின் காலடியில் மண்டியிட்டு படுத்திருந்த அந்த சின்னஞ்சிறு கன்றைப் பார்த்ததும், கோபுவிற்கு கொள்ளை சந்தோஷம். அருகில் சென்று அதனைத் தடவிக் கொஞ்சி விளையாடத் துடித்தான்.
            ’டேய். கிட்டப் போகாதே, அதோட அம்மா முட்டித்தள்ளிடும்’ பாட்டி எச்சரிக்கவே நின்றான்.
             அப்போது, தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்ற கன்று, முடியாமல், தரையில் விழுந்துவிட்டது. சிறிது நேரம் சென்று மறுபடியும் முயற்சித்து, தோற்றது.. இது போன்று பலமுறை தோல்வியடைந்ததை கண்ட கோபு, ‘பாவம் தாத்தா, அதுக்கு நிக்கறதுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லு’ வேண்டினான்.
            ’பாத்துண்டேயிரு, அது தானாவே நிக்கும், துள்ளி ஓடும்’ என்றார்.
            ’எப்படி  தாத்தா?’
            ’அதுக்கு, தன்னாலே யார் உதவியுமில்லாம நிக்க முடியும், ஓடமுடியும்னு தன்னம்பிக்கையிருக்கு’
            நம்பாமல் ’என்னைக் கிண்டல் பண்றே’ சிணுங்கியவன், அந்த கன்று இந்த முறை எழுந்து நின்றதும் மட்டுமல்லாமல், சில அடிகள் நடப்பதையும் கண்டதும் ஆச்சரியத்துடன், வாய் விட்டு சிரித்து, கைகளைத் தட்டி, தன் ஆனந்ததை வெளிப்படுத்தினான்.
            அதை ரசித்தவர், ‘அது தன்னால் நிக்க, நடக்க முடியும்னு நம்பினது, ஜெயிச்சது பாத்தியா. இதுக்கு பேர் தான் தன்னம்பிக்கை. நீயும் இதை மாதிரி என்னாலும் கணக்ல நூறு மார்க் வாங்க முடியும்னு தன்னம்பிக்கையோட முயற்சி பண்ணினே, நிச்சயம் வாங்குவே’ ஊக்கப்படுத்தினார்.
            ஆனாலும் அவனுக்கு நம்பிக்கை வராமல், ‘போ தாத்தா, அதுவும் நானும் ஒண்ணா? அதுக்கு நாலு கால் இருக்கு, பேலன்ஸ் பண்ணி நின்னுது’ எதிர் வழக்காடினான்.
            பெயரனின் வாதத் திறமையை ரசித்தவர், ‘ கோபு, நீ பெரிய வக்கீலா வருவேடா’ பாராட்டிவிட்டு ‘அதுங்களுக்கு அஞ்சு அறிவுதான் இருக்கு. ஆனா, நாம மனுஷங்க. ஆறு அறிவு இருக்கு. அதனாலே அதால முடிஞ்சதெல்லாம், நம்மாலும் முடியும்டா. பறவையைவிட வேகமா, உயரத்லே, பறக்ற விமானத்த, ரைட்னு ஒரு மனுஷந்தான் கண்டு புடிச்சான்’
 மேலே அவரைத் தொடர விடாமல், ’போ தாத்தா’ சிணுங்கியபடி ஓடிவிட்டான். அவனுக்கு எப்படி தன்னம்பிக்கையை ஊட்டுவது எனத் தெரியாமல் விழித்தார்.
            அன்று, மும்பையிலிருந்த, அவருடைய இளைய மகள், ஒன்பது மாதக் குழந்தை பிரியங்காவுடன் வந்திருந்தாள்.  கோபுவிற்கு ஒரே குஷி. அவளுடன் விளையாடுவதும் கொஞ்சுவதுமாக இருந்தான். நாலைந்து பச்சரிசிப் பற்களைக்
காட்டி கை கொட்டி சிரித்து, அவள் அனைவரையுமே மகிழ்ச்சிக் கடலில் தள்ளினாள்.
      ஒவ்வொரு குழந்தை, எட்டாம் மாதத்திலியே, நடக்க தொடங்கியதைச் சொல்லி, ஆனால், தன் குழந்தைக்கு இன்னும் நிற்கக் கூடத் தெரியவில்லையே   எனத் தன் தாய், பாட்டியிடம், குறைபட்டுக் கொண்டதைப் புரிந்துகொண்டவள் போல்,



அன்று மாலை உட்கார்ந்திருந்த பிரியங்கா திடீரென எழுந்து நின்றதும், குடும்பமே ஆனந்ததில் கைகொட்டிச் சிரித்தனர்.
அவர்களை ஆச்சர்யப்பட வைத்த தனது திறைமையை தானே பாராட்டிக்கொள்வதைப் போல், கைகொட்டிச் சிரித்த குழந்தை, அடுத்த விநாடியே நிற்க முடியாமல் தொப் பென்று விழுந்தாள்.
      மற்றவர்கள் அதனைச் சிரித்தபடி ரசிக்க, கோபுவிற்கு மட்டும் வருத்தம்.
      ’பாவம் பாட்டி பிரியங்கா.’
      அவன் இரக்கப்பட, பாட்டி மட்டும், ‘இப்படி விழுந்து விழுந்துதாண்டா, நிக்கறது, நடக்கறதுன்னு எல்லாத்தையுமே கத்துக்கும், அதுவும் யாரோட உதவியும் இல்லாம தானாவே செய்யும்’ என்று விளக்க குறுக்கே புகுந்தார் தாத்தா.
      ’கோபு, விழறது அப்டியே கெடக்க இல்ல, மறுபடியும் எழுந்திருக்கத் தான்.’பிரியங்காவுக்கு தன்னம்பிக்கை இருக்கு, எத்தனைதடவை விழுந்தாலும், பயப்படமாட்டாடா. மறுபடியும், மறுபடியும் மறுபடியும் முயற்சி பண்ணி ஜெயிச்சுக் காட்டுவா. பாத்துண்டே இரு’
      தாத்தாவின் கூற்று, உண்மைதான் என நிருபித்துக் காட்டுவதைப் போல், பலமுறை விழுந்தும், சளைக்காமல், முயன்றாள்.
      அந்த முறை எழுந்தவள், கீழே விழாமல், நின்றதுடன், ஒரடி எடுத்துவைத்து விழுந்ததும், குடும்பமே, அவள் நோபல் பரிசு வாங்கியதுபோல, ஆனந்தத்துடன், அவளை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கி, கொஞ்சி முத்தமிட, குழந்தை படு குஷியில்.
      அதைப் பார்த்ததுந்தான், கோபுவிற்கு, ஓன்பது வயது குழந்தையால் முடிந்தது தன்னால் மட்டும் ஏன் முடியாமல் போகும்? எனவே, முயன்றால், தன்னாலும் கணிதத்தில் வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர் விட்டது.
      குழந்தைந்தப் பருவத்திலியே, சுடர் விடும் இந்த தன்னம்பிக்கை, குழந்தை வளர வளர, கூடுதல் ஒளியுடன் பிரகாசிப்பதை, அதன் வளர்ச்சியை, அலசி ஆராய்ந்தால் நன்கு விளங்கும்.
      குழந்தை, தன்னைச் சுற்றியுள்ளவற்றையும், மற்றவர்களையும் கூர்ந்து ஆர்வத்துடன் கவனிக்கும். ஆடு மாடு, நாய்,பூனை, பறவைகளை வியப்புடன் பார்க்கும். அப்போது, அதன் தாய், ஒவ்வொன்றின் பெயரைச் சொல்லி, அறிமுகப்படுத்துவாள். அப்பா, அண்ணா, அக்கா, பாட்டி, தாத்தா என உறவினர்களையும் பரிச்சயம் செய்து வைப்பாள்.
புரிந்து கொண்ட குழந்தை, அந்த பூனையையோ, நாயையோ கண்டதும், பூனை எது, நாய் எது, என்று அடையாளம் காட்டி அதன் பெயரையும் சொல்லியும், உறவினர்களை சுட்டிக்காட்டி, உறவு முறையைச் சரியாகச் சொல்லி, தாய்க்கே பாடம் நடத்தும். தாயும் மகிழ்வாள்.
      தன்னாலும், தாயைப்போல, இனம் காணும் திறன் உண்டு, என்ற, தன்னம்பிக்கையை, இவ்வாறு பிரகடனம் செய்கிறது.
மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது, தாயைப்போல, சொப்புகளை வைத்து, சமையல் செய்யும், உணவை பரிமாறும். தோளில் ஒரு பையை




மாட்டிக்கொண்டு அலுவலகம் செல்வதாக செய்து காட்டும். இவையெல்லாமே, தன்னம்பிக்கையையின் வெளிப்பாடுகள் தான்.
       பள்ளி செல்ல ஆரம்பித்ததும், இந்த வெளிப்பாடு, குழந்தை, டீச்சரைப்போல, வீட்டில், வகுப்பு நடத்துவதின் மூலமும், தொலைக்காட்சி, திரைப்படங்களில், தன்னுள், தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர்களைப் போல, நடித்துக் காட்டுவதின் மூலமும் பிரதிபலிக்கின்றன.
       அதன் வயது வளர்ச்சிக்கேற்ப, ஒவ்வொரு கட்டத்திலும், இத்
தன்னம்பிக்கை பல்வேறு பரிமாணங்களில் மிளிர்கின்றன.
      எடுத்துக்காட்டாக, தான் இட்ட முட்டைகளிலிருந்து குஞ்சு வெளிவர, தாய்க் கோழி அவற்றின்மீது அமர்ந்து, அடை காத்து. சூடேற்றுவதை மட்டுந்தான் செய்கிறது.
ஆனால், முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு, குஞ்சு தான், முயற்சி செய்து வருகிறதேயன்றி, வேறு யாருடைய உதவியாலுமல்ல.
      இதே போன்றுதான், பூமி, எவ்வளவு தான் கடினமானதாக இருப்பினும், அதில் புதைக்கப்பட்ட வித்து, பூமியைப் பிளந்து கொண்டு, தலை நீட்டி, எட்டிப் பார்ப்பதைபோல், பிறர் யாருடைய தயவுமின்றி. முளைக்கிறது.
      இதனை இயற்கையான நிகழ்வு தான் என்பர்.
     இதைத்தான், எல்லா ஜீவன்களும் தன்னம்பிக்கையுடந்தான் இவ்வுலகிற்கு வருகிறது, என்பதை இயற்கை நமக்கு நினைவுபடுத்தி, அந்த தன்னம்பிக்கை வலுப்பெற, அனைத்து நடவடிக்கைகளயும், செய்ய உணர்த்துகிறது. எனக்கொள்ள வேண்டும்.
             ஆனால், பெற்றோர்களோ, அந்த தன்னம்பிக்கையை, ஊக்குவிப்பதிற்குப் பதிலாக, இது உன்னால் முடியாது, உனக்கு ஒத்து வராது கைல கால்ல அடிபட்டுடும்’ என்ற தடைக்கற்களை, தன் மக்களின் வாழ்க்கைப் பயணத்தில், போட்டு, தாழ்வு மனப்பான்மை உருவாகிட வழி வகுப்பதுடன், அவர்களின் முன்னேற்றத்தை தடுத்தும் விடுகிறார்கள், என்பது கண்கூடு.
       இதனால், தனிப்பட்டவரின் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந் நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவு ஏற்படுகிறதென்பதை, அவர்கள் உணர்வதில்லை.
            ஐந்தறிவு படைத்தவை என நாம், தரம் தாழ்த்திக் குறிப்பிடும், பறவைகள், இந்த ஊக்குவிப்பில், ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு, நமக்கே பாடம் கற்றுத்தருகின்றன.
      பறவைகளுக்குச் சிறகுகள் முளைத்ததும், தானே, அவற்றைப், ’படபட’வென அடித்து, பறக்க முயற்சிக்கும்.  நிற்க, நடக்க முயலும் குழந்தை, ஆரம்பித்தில், விழுந்து எழுவதைப்போலவே, முதலில், பறவை, பறக்க முடியாமல், பலமுறை
முயன்று, தோற்றாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து, வெற்றி பெரும்வரை நிறுத்தாது.
      தாய்ப் பறவை, இதைப் பார்த்து ரசித்தபடி இருக்குமே தவிர, குறுக்கிடாது
      கழுகு, மிக உயரத்திலேதான் பறக்கும். உயர்ந்த மரங்களின் கிளைகளிலே தான் கூடுகட்டி, முட்டை இடும். குஞ்சு வெளிவந்து, அதற்குச் சிறகு முளைத்ததும்,



கூட்டின் வாயிலில் நின்று, உலகை வேடிக்கை பார்க்கும். தாய் பறப்பதைப் பார்த்து, தானும் அதுபோல் பறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாலும், கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது எனத் தயங்கும்.
      அப்போது, அதன் தாய், கூட்டிலிருந்து, குஞ்சைக் கீழே தள்ளிவிடும்.
      குஞ்சு, ‘ஏம்மா, என்னை தள்ளிட்டே, நா செத்துப் போகப்போறேனே’ என அலறுவதுபோலப் பரிதாபமாகக் கத்தும்.
      தாய் பறவை, குஞ்சு, பூமியில் விழுமுன், ‘விர்’ என்று வேகமாகப் பறந்து வந்து, குஞ்சை வாயினால், கவ்விக் கொண்டு, ’ஜிவ்’வென்று, மிக உயரத்தில் பறந்து செல்லும்.. குஞ்சுவும், அம்மாவை அவசரப்பட்டுத் திட்டியதற்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்பதுபோல, வித்தியாசமானக் குரலில், தன் நன்றியை வெளிப்படுத்தும்.
ஆனால் அடுத்த நிமிடமே, தாய், தன் வாயிலிருந்தக் குஞ்சை, கீழேத் தள்ளி, ‘என் கண்ணல்ல, அம்மா மாதிரி உனக்கும் இறக்கை இருக்கல்ல, அதை அடிச்சு பற’ எனத் தன் மொழியில் கூறும்.
      முதலில், குஞ்சு, ’என்னால் முடியுமாம்மா’ எனத் தயங்கி, பிறகு, தாய், தன்னை சாகவிடமாட்டாள், காப்பாற்றுவாள்’ என நம்பிக்கையுடன், பறக்க முயற்சி செய்யும். கொஞ்ச உயரத்திற்கு பறக்கவும் செய்யும்.
      ஆனால், மேற்கொண்டு பறக்க முடியாமல், பூமியை நோக்கி, வேகமாக விழுமுன், தாய் பறவை, ’கப்’பென்று, அதனைப் பற்றி, மேலே கொண்டு செல்லும்.
       இதே கதை நாலைந்து முறை நடந்ததும், குஞ்சுக்கு, தன் மீது முழு நம்பிக்கை பிறக்கும். அடுத்த முறை தாயைவிட உயரத்தில் பறந்து காட்டி, தாயை அசத்தும்.
      ஆனால் நாம் தான், குழந்தைகளை ஊக்குவிக்கத் தவறுவதுடன், ஆபத்து வருமென்று பயமுறுத்தவும் செய்கிறோம். ஒரு கவிஞர் பாடியபடி, குழந்தையின் தன்னம்பிக்கையை முளையிலியே கிள்ளிக் களைந்தெறிந்து, பிஞ்சு நெஞ்சில், தாழ்வு மனப்பான்மைக்கு வித்திடுகிறோம்.
  
      கோபு கணிதத்தில், தனிக் கவனம் செலுத்தினான். எப்போதும், கணிதத்தில், இருபது மதிப்பெண்களுக்கு மேல் தாண்டாதவன், அந்த முறை இருபத்தைந்து வாங்கினது, அவனுக்கே மகிழ்ச்சியாக இருந்தது. .
            ஆனால், அடுத்த மாதாந்திர தேர்வில், அவன் எதிர்பார்த்த நாற்பதுக்குப் பதிலாக, மதிப்பெண்  இருபத்தைந்திலியே நின்றுவிட்டது, அதற்கான காரணம் என்னவென்பதை ஆராயாமல், அவன் மீண்டும் நம்பிக்கை இழந்தான்.
           தாத்தா, அவனை ஊக்குவிக்க செய்த முயற்சிகள் தோல்விதான் கண்டன.
          முதல் நாள் பெய்த கன மழையில், வீட்டு வாசலிலிருந்த வேப்ப மரத்தின் ஒரு கிளை முறிந்து, கீழே விழாமல் சிறிது மரத்துடன் ஒட்டியபடி, தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்தபடி வாசலிலிருந்த தாத்தாவின் மடியில்,  உரிமையுடன் அமர்ந்தான் கோபு.
          அப்போது ஒரு காகம், தொங்கிய கிளையில் உட்கார்ந்தது.
        


அதைக் கண்ட கோபு, ‘ தாத்தா, இந்த காக்காய்க்கு மூளையே இல்லை’ என்றான்.
         ’ஏன் அப்டி சொல்றே?’
         ’கொஞசம் காத்து அடிச்சா போதும், அந்த கிளை ’தொப்’னு கீழே விழுந்துடும். அதோட, அந்த காக்காயும் சேந்து விழுந்து அடிபட்டு செத்துடும்’
         ’நா சொல்றேன், பலமா காத்து அடிச்சாலும் சரி, இல்லே, மரமே சாஞ்சு விழுந்தாலும் சரி, காக்காய்க்கு ஒண்ணுமே ஆகாது, பாக்கலாமா? சவால் விட்டார்.
   பாக்கலாம்’ சவாலை ஏற்றுக்கொண்டான்.           
         அடுத்த சில நிமிடங்களில் வீசிய காற்றில், அக்கிளை முறிந்து கீழே விழ, காகமோ, இறக்கை விரித்து, ’ஜிவ்’வென்று வானில் பறந்தது.
         ஆச்சர்யத்துடன்’ எப்படி தாத்தா காக்கா தப்பிச்சது?’ கேட்டான்.
         ’காக்கா, கிளையை நம்பி உக்காரல. தன்னோட ரெக்கையை நம்பித்தான் உக்காந்தது. அதனாலதான் கிளைக்கு என்ன, மரத்துக்கே என்ன ஆபத்து வந்தாலும், அதுக்கு கவலையே கிடையாது.  கோபு, நீ ,மத்த பாடங்கள்ல நல்ல மார்க் வாங்கற உன்னோட அந்த திறைமைலே நம்பிக்கை வச்சு, மேத்ஸுலெயும் வாங்க முடியும்னு முயற்சி பண்ணினே, நிச்சயம் செயிச்சுடுவே. செய்வியா? கேட்டார்.
        அடுத்த தேர்வில் அவனுக்குத்தான் கணிதத்தில் நூற்றுக்கு நூறு.
             
                                    3
           
          உடல் வலுவுள்ள ஒரு படித்த இளைஞன், மரத்தடியில் ‘இங்கு சோதிடம் பார்க்கப்படும் என்ற வரிகளுடனும், ரேகைகள் பளிச்சிட்ட உள்ளங்கை வரையப்பட்ட ஒரு விளம்பரப் படம் தொங்க, அமர்ந்திருந்த சோதிடரிடம் தனது உள்ளங்கையைக் காண்பித்து, அவர் சொல்வதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினான்.
            சோதிடர் சொல்வதைக் கேட்க அவன் முகத்தில் மகிழ்ச்சியும் கவலையும் மாறிமாறித் தோன்றின.
            கடைசியாக கால் மணி நேரம் கழித்து, சோதிடர் கேட்ட கட்டணத்தைக் கொடுத்துவிட்டு வந்தவனை, ஒருவர் நிறுத்தி, ‘அவரிடம் என்னங்க கேட்டீங்க?’ விசாரித்தார்.
            நீண்ட பெருமூச்சுடன், ‘என் எதிர்காலத்தப் பத்தி தெரிஞ்சுக்கத்தான் சோசியம் பாத்தேன்.  ம்ம்ம்.. அவர் சொன்னதைக் கேட்டதும், எனக்கு என் எதிர்காலத்த நெனச்சா பயமாத்தான் இருக்கு’ கவலையோடு சொன்னான்.
            அவனின் தோளில் தட்டிக் கொடுத்து, ‘தம்பி, இரண்டு கைகளுமே இல்லாதவங்களே, தங்களுக்கு ஒரு பிரகாசமான வாழ்க்கையை அமைச்சுண்டு
வளமா இருக்காங்க தெரியுமா.’என்றவர் சில மாற்றுத்திறனாளிகளின் சரிதங்களைகூறி , ‘உனக்கென்ன குறை?, வலுவான உடல் இருக்கு. பத்தாவது பாஸும் பண்ணியிருக்கே. உன்னால கண்டிப்பா வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.; ஊக்கமூட்டியதும், தன்னம்பிக்கை பிறக்க இளைஞன் அவருக்கு நன்றி கூறிவிட்டு நகர்ந்தான்.
           



அவனுக்கு நம்பிக்கையூட்டியவர்தான், நமது இளைஞர்களுக்கு ஒளிவிளக்காகத்திகழும் முன்னள் குடியரசு தலைவர், திரு.அப்துல் கலாம் அவர்கள்.
            இது பத்திரிகையில் படித்தது.  
                  இந்த தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளிடந்தான் அதிகம் காணமுடிகிறது என்பது மகிழ்ச்சி தரும் உண்மையாகும்.
          சான்றாக, உலகமே அறிந்த ஹெலன் கெல்லெர் போன்ற சாதனயாளர்களைக் கூறுவர். அவருக்கு நிகராக சாதித்தவர்கள் நம் தமிழ் நாட்டிலும் உண்டு.
         ஹெலன் கெல்லர் ‘OPTIMISM IS A FAITH THAT CAN LEAD TO ACHIEVEMENT. NOTHING CAN BE ACHIEVED WITHOUT HOPE AND CONFIDENCE’
   ‘வெற்றி நிச்சயம் என்ற உறுதியான நம்பிக்கை, சாதனைகளை படைக்கும். உழைப்புடன் கூடிய தன்னம்பிக்கையின்றி எதுவுமே நடக்காது, என்றார்
         சுதா சந்திரன் ஒரு பரத நாட்டியக் கலைஞர். நாட்டியத்தையே உயிர் மூச்சாக வாழ்ந்தவருக்கு ஏற்பட்ட கார் விபத்தில் ஒரு காலையே இழக்க நேர்ந்தது. நடனக் கலைஞருக்கு இது எத்தனை பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதை நாம் அறிவோம்.
 ஆனாலும், இவர் தன்னால், எப்போதும்போல் நாட்டியமாட முடியும் என உறுதியாக நம்பினார். ஆனால் எல்லோருமே, இது நடக்காத காரியம் என்றே விமர்சித்ததுடன், இந்த விஷப்பரிட்சயை, விட்டுவிட வற்புறுத்தினர்.
      ஆனாலும் இவர் தளர்வடையாமல், முயற்சித்தார். செயற்கை கால் பொருத்திக் கொண்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில், இது பெரிய வலியையும் வேதனையையும் உண்டாக்கினாலும், இவர் நம்பிக்கையுடன் தொடர்ந்தார், வெற்றியும் பெற்றார்.
நடன நிகழ்ச்சிகளை தந்து, வியக்க வைத்ததுடன், தன் வாழ்க்கையையே மற்றவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு காரணியாக அமைய, ‘மயூரி’ எனும் திரைப்படத்தில் வாழ்ந்து உலகப் புகழ் பெற்றார்.
      எத்தனை அரிய, போற்றத்தக்க சாதனை!
குட்டி என்ற நடனக் கலைஞரும், இதே போன்ற சாதனையை நிகழ்த்தினார்.
      இன்றும் ஊடகங்கள், கைகளை இழந்த ,மாற்றுத் திறனாளிகள், கால்களாலே, தங்களது அன்றாட வேலைகளைச் சிறப்பாகச் செய்வதை, வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன.
      தன்னம்பிக்கையுடன், தனக்கென ஒரு லட்சியத்தை
நோக்கி, விடாமுயற்சியுடன் உழைப்பவர் காலடியில் வெற்றிக் கனி தேடி வந்து விழும் என்பது சத்தியம்.
            ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
            திண்ணியர் ஆகப் பெறின்’ என்ற குறள் நினைவு கூறத்தக்கது.
            தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் வெற்றி கண்டு முன்னேறியவர்கள், அத்துடன் திருப்தியடைந்து ஓய்வெடுப்பதில்லை மேலும் சிகரங்களை எட்டமுடியும் என்று தீவிரமாக இறங்குகிறார்கள்.
         


அமெரிக்கா செல்பவர் எவரும் தவறாமல் செல்லும் முக்கிய இடம்,வால்ட் டிஸ்னியின், ‘டிஸ்னி லேண்ட்’. இது வெறும் பொழுதுப்போக்கு கேளிக்கை தலமல்ல.சாதனைகள் படைத்து வரலாற்றில் இடம்பெறத்தூண்டும் பல்கலைக் கழகமாகும்.
           இதனை நிறுவிய வால்ட் டிஸ்னி, ’அரைத்த மாவையே அரைப்பது போல், அதே வளையத்தில் சுற்றுவது எனக்குப் பிடிக்காது.  வேறு துறைகளில் கவனத்தைச் செலுத்துவேன். என்றார்
    ‘I DO NOT LIKE TO REPEAT SUCCESSES. I LIKE TO GO TO OTHER THINGS’.
          டாடா நிறுவனம் உருவாக வித்திட்ட, தாதாபாய் நெளரோஜி, அப்போது நம்மை ஆண்ட ஆங்கிலேயருக்கு, அவர்களுக்கு இணையாக இந்தியராலும் தொழில்கள் செய்து வெற்றியடைய முடியும் என்பதை உணர்த்திட ஆரம்பித்ததுதான், ஜாம்ஷெட்பூரில் அவர் நிறுவிய ‘டாடா உருக்கு தொழிற்சாலை’
          இன்று அது எல்லா துறைகளிலும் இறங்கி,டாடா சாம்ராஜ்யமாக திகழ்கிறது. அத்துடன் நில்லாமல், அயல்நாடுகளிலும் பல தொழிற்சாலைகளைத்  தொடங்கி, உலைகையே வியக்க வைத்தது.
          இது மேலும் எல்லை விரித்துக்கொண்டே போகிறது.
          நம் தமிழ்நாட்டிலும், டி.வி.எஸ். ஸிம்ப்சன் போன்ற நிறுவனங்களும் சாதனை படைத்து வருகின்றன.
ACHIEVEMENT IS A BONDAGE. IT PAVES WAY FOR A HIGHER ACHIEVEMENT’        சாதனை என்பது ஒரு தொடரும் பந்தம். அது ஒருவரை, அவர் சாதித்த முந்தைய சாதனையைவிட மகத்தான சாதனையைச் செய்ய ஊக்குவிக்கிறது என்றார் ஒர் அறிஞர். இதற்கு எடுத்துக்காட்டாகத்தான் டாடா போன்ற நிறுவனங்கள் விளங்குகின்றன.
            நம்மில் அநேகர், இது போன்று சாதனைகளைச் செய்திட முயற்சிக்கத்தான் செய்கின்றனர். ஆனால் தோல்வி கண்டால், துவண்டு ஒதுங்கி விடுகின்றனர்.
            இரண்டாம் உலகப் போரில், ஹிட்லரைத் தோற்கடிக்க, திட்டமிட்டு, வியூகம் அமைத்து, வெற்றியும் கண்டவர், அப்போதைய இங்கிலாந்து பிரதமர். வின்ஸ்டன் சர்ச்சில்.
             இவர் ஒரு இலக்கியவாதியும் கூட.
             இவர், ‘ SUCCESS CONSISTS OF FAILURE AFTER FAILURE WITHOUT LOSS OF ENTHUSIASM’  என்றார். தோல்விக்கு மேல் தோல்வி தொடர்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்தால் வெற்றி உறுதி என்று அடித்து சொன்னார்.   
          
அந்த தொழிற்சாலயின் நிறுவனர். அங்குள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் சென்று,
 அதனதன் பொறுப்பாளர்களிடம், ’ஏதாவது பிரச்னை உள்ளதா?’ எனக் கேட்டார்.
          ஒவ்வொருவரும், தொழிலாளர்களின் மீது புகார்கள், மூலப்பொருள்கள் உரிய நேரத்தில் வராமை என அடுக்கிக்கொண்டே போனார்கள்.
          ஆனால், ஒரு இளைஞர் மட்டுமே, தனக்கு எந்த பிரச்னையுமே இல்லை, சவால்கள் தான் உள்ளன, ஆனால் அச் சவால்களை தான் வரவேற்பதாகவும் கூறினார்.
     


         அதிசயித்த நிறுவனர் காரணத்தைக் கேட்டார்.
         ’ஸார். வாய்ப்புகளைத் தவறாக, பிரச்னைகள் என்கின்றனர். உண்மையில், அவை உனது திறைமைகளை வெளிப்படுத்த அருளப்பட்ட அருமையான வாய்ப்புகள். அவற்றை, சவால்களாக ஏற்று, வெற்றிதான் கண்டுள்ளேன்’ பெருமிதத்துடன் சொன்னார்.
         அவரைப் பாராட்டிய நிறுவனர், அவருக்கு உயர்நிலை பதவியை அளித்தார்.
         WE ARE CONTINUALLY FACED BY GREAT OPPERTUNITIES, BRILLIANTLY DISGUISED AS INSOLUBLE PROBLEMS’  என்றார்  LEE IAOCCA.
  நமது திறைமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள், தீர்வே காணமுடியாத பிரச்னைகளாக மாறுவேடமிட்டு நம்மை பயமுறுத்துகின்றன. அவற்றை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்’ என்றார் .
        சவால்களை வரவேற்று ஏற்கவேண்டும். அப்போதுதான், வெற்றியின்  உண்மையான ஆனந்தத்தை உங்களால் அனுபவிக்கமுடியும் என்றார் ஜார்ஜ் பேட்டன் என்ற ராணுவ உயர் அதிகாரி.
 ACCEPT CHALLENGES, SO THAT YOU CAN FEEL THE EXHILIRATION OF VICTORY’
        இவர்தான் சென்ற இரண்டாம் உலகப் போரில், நூற்றுக்கணக்கான எதிரி டாங்குகளை அழித்து, அந்த இடத்தையே, டாங்குகளின் புதைகாடாக மாற்றி,
உலகையே வியக்க வைத்து, வெற்றி, முன்னதாகவே கிட்டிடச் செய்தார்.
       
4    

   இன்று நாம், நலிவுற்றோர்க்கு, சிலர் தானாகவே முன்வந்து ஆதரவு கரம் நீட்டி, அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதைக் காண்கிறோம். அத்தகைய உத்தமர்கள், உருவாக்கிய பல சமூக அமைப்புகள் உலக அங்கீகாரம் பெற்று, விருதுகளும் பெற்றுவருவதை ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. 
   ஆனால், அதே நேரத்தில், சிலர் தீய வழிகளில் சென்று, வன்முறையிலும், ஊழலிலும், ஈடுபடுவதையும் காண்கிறோம்.
   ஏன் இப்படி, சிலருக்கு, பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த மனப்பான்மையும், வேறு சிலருக்கு, அதற்கு முற்றிலும் மாறாக, மக்களையும் நாட்டையும் சுரண்டும் மனப்பான்மையும் தோன்றுவானேன்?

ஒரே காரணம், எண்ணங்கள் தான்.
எண்ணங்களின் தாக்கம், சொற்களாக மலர்கின்றன.
அந்த சொற்கள்தான், செயலாக உருமாறுகின்றன.
இந்த மாற்றமே, அவரை, ஊர் போற்றும் நல்லவராகவோ, உலகமே, வெறுக்கும் தீயவராகவோ, முத்திரை குத்தக் காரணமாகின்றன.
அதனால்தான், சிறு வயதிலேயே, குழந்தைகளுக்கு, ஆத்திச்சூடி, நல்வழி, போன்ற நூல்களைப் போதித்தும், நல்லவரை கடவுள் காப்பாற்றுவதையும்,




தீயவர்களைத் தண்டிப்பதையும், கதைகள் வாயிலாகச் சொல்லியும், அவர்களை நன்மக்களாக விளங்கச் செய்வதில், ஆர்வம் செலுத்தினர்.
இதனால்தான், காந்தி போன்ற உத்தமர்களும், டாடா போன்ற சாதனையாளர்களும் உருவாகினர்.

                             5

    இந்த சாதனை எண்ணம் உருவாகிட, பல்வேறு துறைகளில், உலகம் வியக்கும் சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள், ஆன்மிகவாதிகள் அருளிய பத்து பொன்மொழிகளை, முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட உதவும் ஒளிவிளக்குகளாக, வழித் துணைக்குக் கொண்டு பயணத்தைத் துவங்குவோம்.

1.       NOTHING IN LIFE IS TO BE FEARED, IT IS TO BE UNDERSTOOD. ‘MARIECURIE’ இருமுறை நோபல் பரிசு பெற்ற கியூரி அம்மையார் ‘வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கண்டு பயமடையாமல், அவற்றை சரியாகப்புரிந்து கொள்ளவேண்டும், என்கிறார்.
        எய்ட்ஸ், என்ற உயிர்கொல்லி நோயைக் கண்டறிந்த விஞ்ஞானிகளின் அறிவிப்பு, உலகத்தையே, பயமுறுத்தியது. அத்தைகையக நோயாளிகளைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் அஞ்சி,உலகமே வெறுத்து ஒதுக்கச் செய்தது. இதன் காரணமாக, அந்த நோய்க்கு இலக்கானவர்களில் பலர் பயந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் சோக நிகழ்வுகளையும் நம் நாடு கண்டது.
         ஆனால், விஞ்ஞானிகள், அஞ்சாமல், இந் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் மூழ்கினர்.
         அதன் பலனாக, அந்நோயாளிகளைக் காண்பதற்கும் பயந்த நிலை மாறி, அவர்களுடன் சகஜமாக பழகும் முன்னேற்றம் ஏற்பட்டது. சமுகத்திற்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் பரிதாப நிகழ்வுகள் மறைந்து, தான் ஒரு ஹெச். ஐ. வி. நோயாளி என்பதைத் தயக்கமில்லாமல், அறிவிக்கவும், தனக்கேற்பட்டநிலை மற்றவர்களுக்கு நேரக் கூடாது என்ற நல்ல உள்ளத்துடன் அந்நோய் பற்றி,  விழிப்புணர்வு பிரசாரத்திலும் பலர் ஈடுபடும் நிலைமையை இன்று  நாடு காண்கிறது.
          அத்துடன் நின்று விடவில்லை.
          ஹெச் ஐ வியுடன் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயந்து இயலாமையால் தவித்தவர்களுக்கு நிம்மதியை அளித்திட, விஞ்ஞானிகள் உரிய
சிகிச்சை முறையைக் கண்டுபிடித்ததுடன், ஒரு குழந்தையையும் குணப்படுத்தி வியத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
           இது, கியூரி அம்மையாரின் பொன்மொழி மெய்பட்டதற்குச் சரியான எடுத்துக் காட்டாகும்.





2.2. DON’T HESITATE, TO EXPRESS YOUR ECCENTRIC OPINION, BECAUSE THE PRESENT DAY DEVELOPMENTS IN EVERY FIELD WERE ONCE CONSIDERED AS ECCENTRIC.
            மற்றவர்கள், பைத்தியக்காரத்தனம் எனப் பரிகசிப்பார்கள், என்று தயங்கி, உங்களுக்கு சரியென்று தோன்றுவதை வெளியிடத் தயங்காதீர்கள். முன்பு, கேலிக்குள்ளான சிந்தனைகளின் விளைவுகள் தான் இன்று உலகம் அனுபவித்து வரும் வசதிகள். 

            வானத்தில் பறவைகள் இறக்கைகளை விரித்து, உல்லாசமாகப் பறப்பதைப் பார்த்து ரசிப்பதுடன் நிறுத்திக் கொண்டவர்களின் மத்தியில், ரைட் சகோதரர்கள் வித்தியாசமானவர்கள்.
            பறவைபோல், நம்மால் பறக்க முடியாது என மற்றவர்கள் எண்ணி வாளாவிருக்க, இவர்கள் மட்டும் ‘ஏன் நம்மால் முடியாது? என்று எதிர் கேள்வியை எழுப்பியதுடன் நிற்கவில்லை. அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
             இவர்கள், தோள்களில் இறைக்கைகளை கட்டிக்கொண்டு பறக்க முயற்சி செய்து, காயமடைந்ததை எல்லோரும் எள்ளி நகையாடினர்.
             ஆனால், இவர்கள் அசரவில்லை. தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டும், தளராமல், தன்னம்பிக்கையுடன், ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். வெற்றி கண்டனர்.
            இதைதான், கண்ணதாசனும்,’பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ என பாடினார்.
             ஏளனம் செய்தவர்கள், இவர்களைப் பாராட்ட, கைகளில், பூங்கொத்துகளுடன், இவர்கள் வீட்டு வாசலில், நீண்ட வரிசைகளில் காத்து நின்றனர்.
            இன்று பேருந்துகள்போல், விமானங்களை மக்கள் பயன்படுத்துவது, இந்த பொன்மொழியும், பின்பற்றுவதற்கு, சாத்தியமானதுதான் என்பதை நிரூபித்துள்ளது.
          
         3  WHEN YOU HAVE DECIDED, WHAT YOU BELIEVE, WHAT YOU FEEL MUST BE DONE, HAVE THE COURAGE TO STAND ABOVE, AND BE COUNTED- ELENAAR ROOSEVELT.
         அவசியம் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை, என உறுதியாக, நீங்கள் நம்புவதை தைரியமாக எடுத்துக் கூறுங்கள்.
             இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர், ராஜாஜி அவர்கள்.
             ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கை, இந்தியாவின் விடுதலைக்குத் தடையாகவிருந்தபோது, நாட்டை இரண்டாகப் பிரிப்பது, தவிர்க்கமுடியாதது, என்று
கூறி, அனைவரின் கண்டனத்திற்கும் உள்ளானார், அவர் தன் கருத்திலிருந்து சிறிதும் பின் வாங்கவில்லை. அவர் கருத்து மெய்ப்பட்டதை இந்நாடே கண்டது.
              அதே போல், ரஷ்யாவைப் பின்பற்றி, தேசியமயமாக்கும் கொள்கையை இந்திய அரசு பின்பற்றியபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து, தன் கொள்கையை வலியுறுத்த, சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்.  நாட்டின்



பொருளாதார முன்னேற்றத்திற்கு, தனியார் துறையின் முக்கிய பங்கின்றி முடியாது என்று தீவிரமாக பிரசாரம் செய்தும், எழுதியும் வந்தார்.
              முதலாளித்துவத்தின் கைப்பொம்மை என்று அவமானப்படுத்தினர். ஆனாலும், அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
              இன்று நம் நாடு, உலக மயமாக்குதலை ஏற்றதுடன், இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என அழைப்பிதழ்கள் கொடுத்தும், சிவப்புக் கம்பளம் விரித்து, பூங்கொத்துகளுடன், அவர்களின் வருகைக்காகத் தவம் கிடப்பதையும் காண்கிறோம்.

4.  IF YOU WAIT UNTIL THE WIND AND WEATHER ARE JUST RIGHT, YOU WILL                              NEVER PLANT ANYTHING AND NEVER HARVEST ANYTHING- BIBLE  
      சரியான வேளை வரவில்லை என, செய்ய வேண்டியதைச் செய்யாமல், காத்திருந்தீர்களானால், உங்களால் எதையுமே சாதிக்கமுடியாது.- புனித வேதாகம நூல்.
      அந்த சோளக்கொல்லையில், குருவி கூடு கட்டி, குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. ஒரு நாள், தாய் குருவி, குஞ்சுகளுகளுக்கான இரையுடன் கூட்டிற்கு திரும்பியதும், ‘அம்மா, அம்மா, நமக்கு ஆபத்து, நாம இந்த இடத்தை விட்டு உடனே போகணும்’ என்று பயந்த குரலில் முறையிட்டன.
      ‘குழந்தைகளா, அம்மா நா இருக்கேன் இல்ல, பயப்படாம சொல்லுங்க’
     ‘ அம்மா, இன்னிக்கு, இந்த சோளக்கொல்லை சொந்தக்காரர் வந்தார். கதிர் நல்லா முத்திருக்கு. நாளைக்கே கூலி ஆளுங்களை வச்சு அறுவடை பண்ணிடனும்னு சொன்னார், அப்ப நமக்கு ஆபத்துன்னு தானே அர்த்தம்’
      ‘ப்பூ, இவ்வளவு தானா. நாளைக்கு அறுவடை கண்டிப்பா நடக்காது. இப்ப சாப்டுங்க’ தைரியமூட்டி, இரையை  ஊட்டியது.
       தாய் சொன்னது பலித்தது.
       ஆனால், இரண்டு நாள் கழித்து, மீண்டும் குஞ்சுகள் தாயிடம், ‘அம்மா, நாளைக்கு சொந்தக்காரங்க உதவியோட அறுவடை செய்யப்போறதா சொல்லிட்டு அவரு போனாரு,. இப்ப என்ன பண்றது? கவலையுடன் கூறவே, தாயோ, முன்பு சொன்னதையே திரும்பச் சொல்லியது.
        அது சொன்னபடியே அறுவடை நடக்காதது கண்டு குஞ்சுகள், தாயின் அறிவாற்றலை நினைத்துப்  பெருமைப் பட்டன.
        மறுநாளும் அதே பிரச்னையை தெரிவித்த குஞ்சுகள், இந்த முறை அவர் தன் மனைவி, மக்களுடன் வேலையை முடிக்கவிருப்பதாகத் தகவல் தந்தன. தாயும்
அதே பதிலைச் சொல்லிற்று. இந்த முறையும் சொன்னது பலித்ததை கண்டு குஞ்சுகளுக்கு தாயின் மீது மிகுந்த மதிப்பு உண்டாயிற்று.
        இரண்டு நாள் சென்று, தாய் குஞ்சுகளிடம் ‘ இன்று ஏதாவது விசேஷம் உண்டா? வினவிற்று.
        குஞ்சுகளோ, ‘ அம்மா, பழைய தமாஷ் தான். நாளைக்கு நிச்சயம் அறுவடை பண்ணிடுவானாம். அதான் நடக்கப்போறதில்லையே’ கேலியாகச் சிரித்தன.





        தாயோ, அலட்சியப்படுத்தாமல், ஆர்வத்துடன் ‘ உதவிக்கு யாரு வராங்களாம்? கேட்டதும், குஞ்சுகள், ‘அவரே தனியா செய்யப்போறாரம். நடக்கற காரியமா? அலட்சியமாகச் சொல்லின.
        ‘இப்பதான் நமக்கு ஆபத்து. எப்ப அவரு, பிறரை நம்பாம, தானே செய்ய முடிவு பண்ணிட்டாரோ, அப்ப நிச்சயம் அறுவடை நடக்கும். இப்பவே இடத்தை  காலி பண்ணனும்’
         சொன்னதுமல்லாமல், காலியும் செய்தது.
     இது கதையாகயிருந்தாலும், இந்த பொன்மொழியின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுகிறது.        
5  WITHIN ME IS INFINITE POWER, BEFORE ME IS ENDLESS POSSIBILITY,
AROUND ME, BOUNDLESS OPPERTUNITIES, THEN WHY SHOULD I FEAR?
   என்னிடம் உச்சவரம்பில்லாத ஆற்றலுண்டு. என் எதிரில் முடிவில்லாத
 சாத்தியக் கூறுகள் விரிந்துகிடக்கின்றன. என்னைச்சுற்றி, எல்லையற்ற   வாய்ப்புகளும், வரிசையாகச் சூழ்ந்திருக்கின்றன. நான் ஏன் எதிர்காலம் குறித்து பயப்படவேண்டும்?
       இதனை மெய்படுத்தி, சரித்திரம், படைத்த சாதனையாளர்கள், இருவர்.
       ஒருவர், சத்ரபதி வீர சிவாஜி. மற்றவர்,
       கப்பலோட்டிய தமிழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள்.
       மராட்டிய மாநிலத்தின் சில பகுதிகளை ஆண்டுவந்த மகமதிய மன்னர்களைத் தீடீரென, தாக்கி, அவர்களின் பிடியில் சிக்காமல், தப்பி மலைகளுக்குள் மறைந்து கொள்ளும் சிவாஜியை, அவர்கள், மலை எலி என கேலி செய்தனர்.
       அந்த மலை எலி தான், கிராமங்களிலிருந்த, போர்முறைகளையே அறியாத இளைஞர்களை ஒன்று திரட்டி, ஊக்குவித்து, போர்ப்பயிற்சிகள் அளித்தார். போரில் மகமதிய அரசர்களைத் தோற்கடித்து, அவர்கள் வசமிருந்த மகாராஷ்ட்டிரத்தின் எல்லாப் பகுதிகளையும் மீட்டு, மராத்திய அரசை நிறுவி, ஆண்டார். சத்ரபதி வீர சிவாஜியெனப் போற்றப்பட்டார்,
       மகமதிய அரசர்களைக் கண்டு நடுங்கி, அவர்களை எதிர்ப்பதா, கனவிலும் நடக்காத காரியம், பயந்த, கிராம இளைஞர்களை, அவர், எப்படி, நம் நாட்டின் வளத்தை, வலிமையை, மேற்கூறிய பொன்மொழிகளின் அடிப்படையில், உணர்ச்சி
பொங்க, வீராவேசத்துடனுரைத்து, எழுச்சியூட்டினார் என்பதை, பாரதியார்,தனது ‘சத்ரபதி சிவாஜி’ எனும் பாடலில் கூறியவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
         ‘பாரத பூமி பழம்பெரும் பூமி;
         நீரதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்’
  என்று இடையிடையே பலமுறை நினைவுறுத்திய பாரதி
        ’வானக முட்டும் இமயமால் வரையும்
         ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
         காத்திடு நாடு, கங்கையும் சிந்துவும்
         தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
         இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்


         உன்னத மலைகளும் ஓளிர்தரு நாடு’
 என இன்ன பிறவற்றையும் நீண்ட பட்டியலிட்டு, வஞசகத்தால் நாட்டையே கவர்ந்து, இழைத்த கொடுமைகளை,
         ‘ஆலயம் அழித்தலும், அருமறை பழித்தலும்
         மாதரைகற் பழித்தலும், பாலரை விருத்தரை ஒழித்தலும், என
         வேதனையுடன், விவரித்து, ஆவேசமாக,
         தாய்த்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
         மாய்த்திடவிரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
         மானமொன் றிலாது மாற்றலை தொழும்பராய்
         தாய்பிறன் கைப்பட சகிப்ப வனாகி
         நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ? கர்ஜித்து,
        மொக்குள்தான் தொன்றி முடிவது போல
        மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்’
        அதனால் சாவிற்கு அஞ்சாது
        ‘பேடிமை யகற்று நின் பெருமையை மறந்திடேல்
        ‘ஈடிலாப் புகழினாய் எழுகவோ எழுக’ என அக் கிராமமக்களை வீரர்களாய்        மாற்றி, எதிரிகளை அழித்து, சுதந்திர மராட்டியத்தைத் தோற்றுவித்தார்.
         கடல்சார் வாணிபத்தை தனது தனியுடைமையாக்கி; இந்திய வர்த்தகர்களை சுரண்டி வந்த ஆங்கிலேயருக்கு எதிராக, அத்துறையில் இறங்க எண்ணினார், விடுதலை வீரர் வ.உ. சி. அவர்கள்.
        அதற்கு முதல்படியாக, கப்பல் வாங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சுதேசி கப்பல் கம்பனி என்ற நிறுவனத்தை தொடங்கினார். கப்பல் வாங்குவதற்கு, பெரும் மூலதனம் தேவையானதால், தமிழகத்திலுள்ள பணக்காரர்களையும், வர்த்தகர்களையும் அணுகினார்.
         ‘பிள்ளைவாள், வெள்ளைக்காரனை எதித்து கப்பல் ஒட்றதா? இதெல்லாம் நடக்ற காரியமா? நீங்க புரிஞ்சுதான் பேசரீங்களான்னு சந்தேகமா இருக்கு. இது அவனுக்குத் தெரிஞ்சதுன்னா, நம்ம எல்லாரையும் உள்ள தள்ளி சித்ரவதை பண்ணி கொன்னேபுடுவான் ஓய்’ பயந்து மறுத்ததுமல்லாலல், அவரையும், இந்த எண்ணத்தை கைவிட வற்புறுத்தினார்கள்.
   ஆனால் அவர் எடுத்த முடிவில் பின்வாங்கவில்லை.
         பண்டைய காலத்திலேயே, தமிழர்கள் கடல்சார் வாணிபத்தில் தலைசிறந்து புகழ் ஈட்டியதையும், ராஜராஜ சோழன், அவர் மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர், கடற்படையை முன்னின்று நடத்தி, இலங்கை, கடாரம் என பல நாடுகளை கைப்பற்றிய வீர வரலாறுகளை, உணர்ச்சி பொங்க எடுத்துரைத்து, ‘அடிமேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என பாரதி பாடியதையும் சுட்டிக் காட்டி, அவர்களை மனம் மாறச்செய்தார்.
   தேவையான தொகையைத் திரட்டி, இரண்டு கப்பல்களையும் வாங்கினார்.
          தனது லட்சியமான கடல்சார் வாணிபத்தை நடத்தி, வரலாற்றில், ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற அழியாப்புகழையும் பெற்றார
    
          6. YOU HAVE TO DREAM, BEFORE YOUR DREAMS CAN COME TRUE.Dr.A.P.J.ABDUL    

           உங்கள் லட்சியம் மெய்ப்பட வேண்டுமானால், முதலில், அது   
குறித்து, நீங்கள் கனவு காணவேண்டும், முன்னாள் குடியரசு தலைவர், திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
           1882ஆம் ஆண்டு பிறந்து, 39 ஆண்டுகள் கூட முழுமையாக வாழாமல், மறைந்த நமது பாரதியார், இந்தியா ஆங்கிலேயரின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தபோதே, நாடு விடுதலை பெற்றதாகக் கனவு கண்டதோடு நிற்கவில்லை. விடுதலை பெற்றதாகவே, ‘ஆடுவோமே பள்ளுபாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’ எழுச்சியுட்டும் பாடலையும் கம்பீரமாகப் பாடி மக்களை சுதந்திர வேள்வியில் குதிக்க வைத்தார்,
          சுதந்திர இந்தியா சிறந்த வளமான நாடாக, என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதைக் கனவு கண்டு, அதனை ஒரு திட்ட நிபுணர் குழுவைப்போல், அன்றே, தனது ‘பாரத தேசம்’ பாடலில், விரிவாகத் தந்துள்ளார்.
                  பாரதி கண்ட, கனவுகள் நிறைவேறியதைக் காண்கிறோம்
            ’’காசி நகர் புலவர் பேசுமுரைதான்,காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி, பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்,, ஆலைகள், ஆயுதங்கள். அம்மட்டொ, சட்டங்கள் செய்யவும், பட்டங்கள் பெறும் பெண்கள் என எத்தனை, எத்தனை.    

7.  WHAT YOU GET BY ACHIEVING YOUR GOALS IS AS IMPORTANT AS WHAT YOU BECOME BY   ACHIEVING YOUR SUCH GOALS – THORAEU.
உங்களுள், எற்படும் முன்னேற்றந்தான், உங்கள் லட்சியம் வெற்றி பெற்றதற்கான உரைகல்.    ‘ தோரே’.
     புராண நூல்களில் ஓர் நிகழ்வு.
     கெளசிகன் எனும் அரசன், தன் பெரிய பரிவாரங்களுடன் காட்டிற்குச் சென்றான். அங்கு மனைவி அருந்ததியுடன் வசித்த வசிஷ்டரைத் தரிசித்தான்.
     அரசனை ஆசீர்வதித்த வசிஷ்டர், தங்களது விருந்தினராக, மதிய உணவு உண்ண அழைக்கிறார்.
   அரசன் ’முனிவரே, என்னுடன் ஆயிரக்கணக்கானவர் உள்ளனர். அவர்களை விட்டுவிட்டு, நான் மட்டும் உணவு அருந்துவது தவறு. அத்தனை பேர்களுக்கும் விருந்தளிக்க, காட்டில் வாழும் உங்களால் முடியாது.’ என  மறுத்தான்.
     அரசனால் மட்டுந்தான், எத்தனை பேர் வந்தாலும் உணவளிக்க முடியும் என்ற இறுமாப்பு, அவன் குரலில் தொனித்ததை உணர்ந்தார் முனிவர்.
 ‘அரசே, நீங்கள் மட்டுமல்ல, உங்களுடன் வந்துள்ள ஒவ்வொருவர் விருப்பதிற்கேற்ப உணவை, ஒரு நொடியில் அளிக்கிறேன். உண்ண அமருங்கள்’ என அழைத்தார்.
     அவன் நம்பாமல், பரிவாரங்களுடன் உண்ண உட்கார்ந்ததும்,  ஏதோ மாயா ஜாலம் போல, அவ்வளவு பேர்களுக்கும், அவரவர் விரும்பிய உணவு ’போதும் போதும்’ என்று சொல்லும் அளவிற்கு பரிமாறப்பட்டது.
     திகைத்த மன்னன், ‘முனிசிரேஷ்டரே, இந்த அதிசயத்தை உங்களால் எப்படி நிகழ்த்த முடிந்தது? கேட்டான்.
     தன்னிடமிருந்த காமதேனுவை அரசருக்கு அறிமுகம் செய்வித்து, ’மன்னா, இந்த தெய்வீக பசு காமதேனு கேட்டதெல்லாம் அருளும் சக்தி



படைத்தவர். நீங்கள் அருந்திய விருந்து, இந்த அன்னை அளித்ததுதான்’ என்றதும், அவன் மனதில் பொறாமை உண்டாயிற்று.
     ‘முனிவரே, இத்தைகைய சக்தியுள்ள பசு, நாட்டு அரசனான எனக்குத்தான் சொந்தம். அதனால், அதை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். இது மன்னனான என் கட்டளை’ ஆணையிட்டான்.
     வசிஷ்டர் மறுக்கவே, கோபத்துடன், ’அந்த மாட்டை கட்டி இழுத்து வாருங்கள்’ கட்டளையிட்டதும், படை வீரர்கள் அதனை நெருங்கினர். காமதேனு, முனிவரிடம் தஞ்சம் புகுந்தது.
     ரிஷி, கமண்டலத்தை, மண்ணில், தன் முன்னால் பொருத்தினார்.
    ஆத்திரமடைந்த மன்னன், முனிவரின் மீது போர் தொடுக்குமாறு, உத்தரவிடவே, படை வீரர்கள், கீழ்படிந்தனர்.
    என்ன அதிசயம்? அவர்களின் பாணங்கள், கமண்டலத்திடம் சரணடைவதைப்போல், அதன் காலடியில் விழுந்தன.
    அவமானமடைந்த அரசன், கடும் சினமுற்று, தன் வாளை ஓங்கியபடி, முனிவரின் மீது பாய்ந்தான், ஆனால், அவன் வாள் கையிலிருந்து நழுவியது. அவனும் சரணாகதியடவதைப்போல், வசிஷ்டரின் பாதங்களில் விழுந்தான்.
    அவருடைய, தவ வலிமைக்குமுன், தன்னால், எதுவும் செய்ய முடியாதென்பதைப் புரிந்துகொண்டவன், அவமானத்தால் தலை குனிந்தபடி படைகளுடன் நாடு திரும்பினான்.,
     மறு நாள், அமைச்சர்கள், படைத்தளபதிகளுடன், வசிஷ்டரை வெல்வதற்கு, ஆலோசனை செய்தான்.
     அனைவரும், ஒருமித்த குரலில், ‘அரசே, தயவுசெய்து, அந்த எண்ணத்தை கைவிடுங்கள். அவர் திருமாலின் பெயரர். மிகுந்த தவவலிமை
கொண்ட பிரும்ம ரிஷி. அவரை எதிர்கொள்ள யாராலும் முடியாது’ என்று அறிவுறுத்தினர்.
     அரசனைவிட, ரிஷிதான் ஆற்றல் மிக்கவர் என்பதை உணர்ந்த கெளசிகன், தன் அரச பதவியைத் துறந்தான், காட்டில், கடும் தவம் மேற்கொண்டான். ஈசனின் வரம் பெற்று தவவலிமை பெற்ற ராஜ ரிஷியானான்.
     லட்சியத்தில் வெற்றி பெற்றாலும், அவரை ராஜ ரிஷி என்று அழைத்தனரே அன்றி, பிரம்ம ரிஷியாக ஏற்க மறுத்தனர்.
    வசிஷடரால், பிரம்மரிஷி என அழைக்கப்பட்டால் தான், அவரை அப்படி அழைக்கமுடியும் என்றனர். அவர் பலமுறை வசிஷ்டரை வேண்டியும், அந்த பட்டத்தை அளிக்க வசிஷ்டர் இணங்கவில்லை.
     வசிஷ்டரைக் கொல்லவும் துணிந்த்தார்.
     அப்பதவிற்கேற்ப, பொறுமை, இரக்கம், அடக்கம் ஆகிய உயர் பண்புகளுடன் நடந்து கொள்ளத் தவறினார்.
    லட்சியத்தில் பெற்ற வெற்றி பெருமை இழந்தது.
           
    



8. THE ULTIMATE MEASURE OF A MAN IS NOT WHERE HE STANDS IN MOMENTS OF COMFORTS AND CONVENIENCE, BUT WHERE HE STANDS AT TIMES OF CHALLENGES AND CONTROVERSERIES- MARTIN LUTHER KING.Jr.
 ஒரு மனிதனின் குணம், அவன் சோதனைகளுக்கும், சவால்களுக்கும் உட்படும்போது, எப்படி அவற்றை எதிர் கொள்கிறான் என்பதை வைத்து தான்
கணிக்கப்படுகிறதேயன்றி, அவன் பக்கம் காற்று அடிக்கும்போதுள்ள நிலையை வைத்தல்ல.       ‘மார்டின் லூதர் கிங். ஜூனியர்’.

     இதனை நமது தமிழக வரலாற்று நிகழ்வு ஒன்று இயம்புகிறது.

குமணன் என்ற மன்னன் ‘உதவுங்கள்’ எனத் தன்னை அண்டியோருக்கு, அவர்கள் உள்ளம் குளிர, வாரி வாரி வழங்கும், வள்ளல். இது அவன் தம்பிக்குப் பிடிக்கவில்லை. தம்பி தடுத்தும், குமணன், பிறருக்கு உதவுவதை நிறுத்தவில்லை.
     ஆத்திரமுற்ற தம்பி, சமயம் பார்த்து, அண்ணனை துரத்திவிட்டு, அரசனான். அத்துடன் நில்லாமல், அண்ணனைக் கொல்ல எண்ணி, குமணனைக் கொன்று, அவன் தலயைத் தன்னிடம் கொண்டுவருவோற்கு, ஆயிரம் பொற்காசுகள் பரிசளிப்பதாகவும் அறிவித்தான்.
      மக்கள் அனைவரும் குமணனையே, கடவுளாகக் கருதி போற்றியதால், யாருமே முன்வரவில்லை.
      இதனை அறியாத ஒரு புலவன், காட்டிலிருந்த குமணனிடம். தன் வறுமை நிலையை கூறி, உதவிட வேண்டினான்.
      தன்னுடைய அப்போதைய நிலைமையைக் கூறி குமணன் கை விரித்திருக்கலாம். ஆனாலும் அப்படி செய்யவில்லை.
       ‘புலவரே, என் தலைக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக இப்போது
நாட்டையாளும் என் தம்பி முரசறைந்துள்ளான். என் தலையை நானே கொய்து தருகிறேன். அதனை அவனிடம் காட்டி, பரிசு பெற்று, வறுமை நீங்கி வாழுங்கள்’ என்று வாளால் தனது தலையைத் துண்டித்திட முனைந்தான்.
இதனைக் கேட்டு, துடிதுடித்த புலவர், குமணனைத் தடுத்து, ’அரசே,நடந்ததை நான் அறியேன். இப்பாதகச் செயலை, என் குடும்பமே வறுமையில் செத்தாலும், நான் செய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என வேண்டி அகன்றார்.
       புலவர், வெட்டப்பட்ட ரத்தம் சொட்டும் குமணன் தலைபோல் பொம்மையில் செய்து, சிம்மாதனத்தில் வீற்றிருந்த மன்னன் அமணனிடம் காட்டினார்,
       மகிழ்ந்தவன், அவரைப் பாராட்டி, பரிசை அளித்தபோது, வாங்க மறுத்து, நடந்ததைக் கூறி, குமணின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்தும், அமணனை இகழ்ந்தும் அவனை ஏசினார்.
      




தனது தீய எண்ணத்திற்கும், செயலுக்கும் வருந்திய அமணன் மனம் திருந்தினான். காட்டிலிருந்த அண்ணனத் தேடிச் சென்று, தன்னை மன்னிக்க வேண்டினான், ராஜ்யத்தையும், அண்ணனிடமே ஒப்புவித்தான்.

       9.THE KEY TO FAILURE IS TRYING TO PLEASE EVERYBODY-COBSEES.   

      எல்லோரையும் திருப்தி செய்ய முயற்சி செய்தால், தோல்வி தான் உனது ஆயுட்கால தோழன்.- காப்செஸ்
     
            வறுமை காரணமாக, தன்னிடமிருந்த ஒரே சொத்தான, கழுதையை, சந்தையில் விற்க தன் இருபது வயது மகனுடன், புறப்பட்டார், அந்த முதியவர். இருவரும் நடந்தபடி, கழுதையைக் கொண்டு செல்வதைப் பார்த்து, சாலையில் ஒருவர், ‘ பொதி சுமப்பதற்கென்றே கழுதையை ஆண்டவன் படைத்திருக்கும்போது, இவர்கள் ஏன் வீணே நடந்து செல்கிறார்கள்?’ என்று கேட்டதும், முதியவர், தனது மகனைக் கழுதையின் மீது ஏறச்செய்து, கூடவே, நடந்து வந்தார்.
          கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு முதிய மாது ‘இந்த காலத்து இளைஞர்களுக்கு, மரியாதை, இரக்கம் என்பது சுத்தமாக இல்லாமல் போச்சு.பாரேன், பாவம், கழுதைமேலே ஜாலியா சவாரி போற இந்த பையனுக்கு, இந்த கிழவர் நடக்கமுடியாமல் தள்ளாடறது தமாஷா இருக்கே.’ கோபத்துடன் சொன்னதும், மகன் கீழே இறங்கி, தந்தையை கழுதை மீதேறி வரச் செய்தான்.
         சிறிது தூரம் கடந்ததும், ஒருவர், மகன் நடந்து வர, முதியவர் கழுதைமீது சுகமாக பயணிப்பதை விமர்சிக்கவே, தந்தை, மகனையும், தன்னுடன் இருத்திக்கொண்டார்,  
   ஆனால், அதுவும் நீடிக்கவில்லை.  ஒரு வில\ங்கின ஆர்வலர், அவர்களை நிறுத்தி, ‘’ இந்த கழுதையும், உங்களை மாதிரி ஒரு ஜீவன் தான். அதிலும் வாயில்லா பிராணி உங்கள் இருவரையும் சுமக்க முடியாமல் தவிக்கிறதை உங்களால் உணரமுடியவில்லை என்றால், நீங்கள் மனிதப் பிறவி எடுத்ததே அர்த்தமற்றது’ என்று கடிந்து கொண்டார்.
    அவர்கள் கீழே இறங்கினர். முதியவர், நாங்கள் செய்தது தவறுதான்.  என அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.
     அதற்கு, ஆர்வலர்’ உங்களை கழுதை இவ்வளவு நேரம் சுமந்ததே, நீங்கள் இருவரும் கழுதையைச் சுமந்து செல்லுங்கள் அப்போதுதான் அது பட்ட கஷ்டத்தை நீங்கள் உணர்வீர்கள்’ என்றார்.
       அவரைத் திருப்திப்படுத்த, கழுதையின் கால்களைக் கட்டி, இருவரும், தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு நடந்தனர்.
       அவர்கள் ஓரு ஆற்றுப்பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்தபோது, சாலையிலிருந்த மக்கள், அவர்களைப் பார்த்து, கைகொட்டிச் சிரித்து பலத்த குரலில் ஏளனம் செய்தனர்.
       பயந்த கழுதை, அவர்கள் பிடியிலிருந்து, விடுவித்துக்கொண்டு தப்பிக்க முயன்று ஆற்றில் விழுந்து இறந்தது.
      


அனைவரையும் திருப்தி செய்த எடுத்த நடவடிக்கைகள், அவர்களின் ஒரே சொத்தையும் இழந்திட வைத்தது.

10. IF MONEY HELPS A MAN TO DO GOOD TO OTHERS, IT IS OF SOME VALUE.  THE MORE WE COME OUT AND DO GOOD TO OTHERS, THE MORE OUR HEARTS WILL BE PUREFURIED, AND GOD WILL BE IN THEM.- SWAMI VIVEKANANDA.      
           
            ஓருவர் ஈட்டிய செல்வம் மற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தினால், அச் செல்வம் மதிப்பைப் பெறுகிறது. இறைவனும் அவனை ஆசீர்வதிப்பார்.  ஸ்வாமி விவேகானந்தர்.
            ’ஈதல் இசைபட வாழ்தல்’
            ‘வறியார்க்குஒன்று ஈவதே ஈகை’
            ’மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று’
 எனவும், ஈகையின் அவசியத்தை வற்புறுத்துகிறார் வள்ளுவர், 
            இந்த சேவையில் மேலும் ஆர்வத்துடன் ஈடுபட்டால், நமது உள்ளம், இறைவன் உறையும் ஆலயமாக புனிதமடையும். –ஸ்வாமி விவேகானந்தர்.
            ROCKFELLER FOUNDATION, ராக் ஃபெல்லர் அறக்கட்டளை உலகெங்கிலுமுள்ள ஏழை மக்களின், உணவு, கல்வி, உறைவிடம், மருத்துவம் எனப் பலவிதத்திலும், அவர்கள் வாழ்வு மேம்பட, நிதி உதவி அளித்து வருவதை அறிவோம்.
 இந்த அறக்கட்டளை உருவான நிகழ்வு சுவையானது.
            ராக் ஃபெல்லர், சரியான ஊண் உறக்கமின்றி செல்வத்தைக் குவிப்பதிலேயே குறியாக இருநதார். தனது 44வது வயதிலே கடும் நோய்வாய்பட்டார். பிரபல மருத்துவ நிபுணர்கள், சிகிச்சையளித்தும் பலனில்லை.
        இந்நிலையில், தலைமை மருத்துவ நிபுணர், தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும், அவர் ஆறு மாதங்கள் உயிர் வாழ்வதே அதிசயம் என கை விரித்து விட்டனர்.
          ராக் ஃபெல்லர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
          உலகத்தின் பெரும் பகுதியை வென்ற மாமன்னன் அலெக்ஸாண்டர்,, இறக்கும்போது யாராலும், எதையும்தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது என்பதை மக்களுக்கு உணர்த்திட, தன் விரல்களை விரித்த கைகள் வெளியே தெரியுமாறு, சவ ஊர்வலத்தை நடத்திட ஆணையிட்ட நிகழ்வு, நினைவிற்க்கு வந்தது.
 ராக்ப்ஃபெல்லர் எனும் அறக்கட்டளையை நிறுவி,, ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கென பெரும் தொகையை அளித்தார். மருத்துவர்கள் குறித்த கெடு நெருங்க, நெருங்க, அறக்கட்டளைக்கான, நிதியை, மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போனார்.
        கெடு நாளும் கடந்தது.
        அவருக்கு எதுவுமே நேரவில்லை. மாறாக அவர் உடல்நிலை தேறியது
        இறை அருள், அவர் நிபுணர் குறித்த 44வது வயதில், மரணமடைவதற்குப் பதிலாக, மேலும் 48 ஆண்டுகள் வாழ்ந்து, தனது 92வது வயதில்தான் காலமானார்.
     


  நலிவுற்றொர்கு உதவுவோற்கு இறைவன் அருள்வான் எனும் இந்த பழமொழிக்குவேறு என்ன சான்று வேண்டும்?
        நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள், இஸ்லாமியருக்கு விதித்த ஐந்து கட்டளைகளில், நான்காவதான ஜகாத், ஒவ்வொரு இஸ்லாமியரும் ஈட்டிய வருவாயில், தனது தேவைக்குப் போக எஞ்சியதில், இரண்டரை விழுக்காட்டினை ஏழைகளுக்கு அளித்திட வேண்டுமென்று கூறியுள்ளார்.
       பைபிளிலும், நலிவுற்றோர்க்கு உதவுவோரை, ஏசு ஆசீர்வதிப்பார் என்கிறது.
       எனவே, இந்த பத்து பொன்மொழிகளையும் கடைபிடித்து வாழ்வோர், எல்லா வளங்களும் பெறுவர் என்பது உறுதி.

                              
                               6

        லட்சியத்தில் உறுதி, தளர்விலா உழைப்பு, அசைக்கமுடியாத தன்னம்பிக்கை, இம்மூன்றின் கூட்டணி,ஒருவரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்  என்பது நிச்சயம்.
      பாய்மரக் கப்பல் பயணத்தில், பாய்மரம் விரிக்கப்பட்டும், காற்றும் சாதகமாக வீசினாலும், செல்லும் திசை சரியானதுதானா என்பதை உறுதி செய்வது, எப்போதும் வடதிசையையே குறிக்கும் காம்பஸ் எனப்படும், திசை காட்டும் கருவியுலுள்ள
முள். இந்த முள், வடக்கு திசையையே நோக்கித்தான், எப்போதும் இருக்கும். அதை வைத்துக் கொண்டு மாலுமி, கப்பலைச் செலுத்த வேண்டிய திசையை அறிவர்.
      இந்த வெற்றிக் கூட்டணிக்குத் தேவை, அந்த திசை காட்டும் கருவியுலுள்ள முள் போல, லட்சியத்திலேயே நங்கூரமிடும், ஒரு முகக் குவிப்பு. கவனம், அணுவும் எக்கட்டத்திலும் சிதறாமல், ஆணியடித்தாற்போல் அந்த லட்சியப் புள்ளியிலேயே நிலைகுத்தி நிற்கவேண்டும்.
      தியானத்தில் ஈடுபவர்களுக்கு, இது தான் முதல் தேவை.
      மூச்சுப் பயிற்சியில், பூரகம், கும்பகம் ரேசகம் என மூன்று படித்தரங்கள் உள்ளன. அவை,
      மூச்சை உள்வாங்குதல், பூரகம்,
      உள்வாங்கிய மூச்சினை உள்ளே நிலை நிறுத்தல், கும்பகம், மற்றும்,
      அப்படி உள்ளே நிறுத்திய மூச்சினை வெளிவிடுதல், ரேசகம், ஆகும்.
      இப் பயிற்சியில் விருப்பமுள்ளவற்கு, ஆரம்ப கட்டமாக, ஓரிடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து ஆடாது, அசையாது, கண்களை இறுக மூடி, அவரவருடைய இஷ்ட தெய்வத்தை புருவ மத்தியிலோ, இதயக் கமலத்திலோ வைத்து, தனது கவனம் முழுவதையும், அதன்மீதே ஒருமுகப்படுத்தி, அந்நிலையிலியே சில வினாடிகளாவது லயித்திருக்கப் கற்றுத் தரப்படும்.
 சிலர், ஒரு தீபத்தை,தன் முன்னால் வைத்துக் கொண்டு, கண்களைத் திறந்தபடி, அந்த தீபத்தின், ஒளியின் மீது, கவனத்தை ஒருமுகப்படுத்தி, இப்
பயிற்சியில் ஈடுபடுவதும் உண்டு. பிறகு, கண்களைமூடி, அந்த தீபத்தை, மனதில் நிலை கொள்ளச் செய்யப் பயில்வார்கள்.


ஆரம்பத்தில், அப்படி நிலையுலுள்ள காலம் சில வினாடிகள் எனத் தொடங்கி, பின்னர் அந்த நிலையுள்ள காலம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
      இது தான் தியானம் செய்யும் முறையாகும்.
      இத்தகைய ஆழ்ந்த தியானம், நாள், மாதம், வருடம், எனக் கால வரையறைகளைத் தாண்டி, நீடிப்பதை, தவம் என்பர். இந் நிலயிலுள்ளோர், தன்னைச் சுற்றிலுமட்டுமல்ல, தனக்கே என்ன நேர்ந்தாலும் உணர மாட்டார்கள்.
      ரத்னாகரன், என்ற கொடிய வழிபறிக் கொள்ளைக்காரன் தான், நம் நாட்டிற்குப் பெரும் புகழைத் தந்த, ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, முனிவராக மலர்ந்தார், என்பதை, அனைவரும் அறிவர்.
      ரத்னாகரன், இந்நிலையை, எய்திட, பல்லாண்டுகள், தவமியற்றியபோது எறும்புகள், அவனுடலைச் சுற்றி, மறைத்து தாங்கள் வாழ்ந்திட பெரிய புற்றினை அமைத்தன. ஆயினும், அதனை அவன் உணரவில்லை. அதனால் தான், வால்மீகி என, அவன் அழைக்கப்படக் காரணமாயிற்று.
      சமய நூல்கள், இதே போன்று, தவத்தில், ஆழ்ந்திருந்த, அடியாரை கழுவிலேற்றியபோதும், அவர், எந்த துன்பத்தையும் உணராது, அதே ஒன்றிவிட்ட
நிலையில், தொடர்ந்திருந்ததை, வர்ணித்துள்ளன.
      தனது லட்சியத்தை அடைவதையே இலக்காகக் கொள்வோர், வேறு எதிலும் கவனத்தைச் செலுத்தாது, அதிலேயே, உறைந்து விடுவர், என்பதனைத்தான், இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

      மகாபாரத்தில், இதனை நன்கு சித்தரிக்கும் ஒரு காட்சி.
      ஆசாரியர் துரோணர், பஞ்ச பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும், வில் வித்தை கற்பித்தார். அவர்கள் தான் போதித்ததை நன்கு கற்றார்களா என்றறிய ஒரு தேர்வு நடத்தினார்.
      அவர்களை காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெரிய ஆலமரத்தின் ஒரு அடர்த்தியான ஒரு கிளையில் அமர்ந்திருந்த ஒரு சிறு சிட்டுக்குருவியைக் காட்டி, அதன் கழுத்திற்குக் குறி வைத்து, கணையை எய்யுமாறு பணித்தார்.
      முதலில் வந்த துரியோதனன், நாணேற்றி அம்பை விடத் தயாரானபோது, ‘நிறுத்து’ என்ற ஆசாரியார்,’ உன் கண்ணுக்கு என்னவெல்லாம் தெரிகின்றது? எனக் கேட்டார்.
      ’மரம், கிளைகள், விழுதுகள், விழுதுகள், இலைகள், ஏன் நீங்களெல்லோருமே தெரிகின்றன’ என்றான்.
      உடனே,அவனை, வெளியேறுமாறு, பணிக்கவே, அவன் முணுமுணுத்துக்கொண்டே அகன்றான்.
      அவனுக்குப் பின் வந்த அனைவருமே, அவனைப்போலவே, பதில் சொல்ல, அவர்களை, போட்டியிலிருந்து, ஆசாரியார் விலக்கினார்.  
      அர்ச்சுனனின் முறை வந்தது.
      அவன் இலக்கைக் குறிவைத்து, கணையை விட, ஆசாரியாரின் உத்தரவுக்குக் காத்திருந்தபோது, அவர், ‘உனக்கு குருவி தெரிகிறதா? கேட்டார்.
      ’இல்லை’
      கிளைகள், இலைகள்?’
     


’இல்லை’
      `விழுதுகள்?’
      ’இல்லை’
      மரமாவது தெரிகிறதா?’
      ’இல்லை’
      ’குருவியாவாது …?         
      ’இல்லை’
      ’குருவியும் தெரியவில்லையென்றால், பின் என்னதான் தெரிகிறது?’
      ’கழுத்து மட்டுந்தான்’
      ’விடு கணையை’ கட்டளையிட்டார்
      வில்லிலிருந்து அம்பு பறந்தது,
      குருவியின் கழுத்தும், உடலும் துண்டிக்கப்பட்டு, மண்ணில் விழுந்தன.
      அர்ச்சுனனின் கவனம் முழுதும், ஒருமுகக்குவிப்புடன், அவனது லட்சியமான, கழுத்தில், ஆணியடித்தாற்போல் ஒன்றிவிட்டதால், அவன் கண்களுக்கும், வேறு எதுவும் புலப்படவில்லை. எளிதில் வெற்றி பெற்றான்.
அதனால் தான், அர்ச்சுனனால், துருபதன், திரெளபதியின் கரம் பற்ற வைத்தப் போட்டியில் எளிதில் வெற்றி பெற முடிந்தது. அதிலும் அந்த போட்டி, மிகக் கடினமானது.
தலைக்கு மேலே, சுழலும், ஒரு மீன்.
      தரையில், தாம்பாளத்தில், நிரப்பப்பட்ட தண்ணீரில், மீனின் சுற்றும் உருவம்.
      அதனை மட்டுமே பார்த்து, மேலே சுழலும் மீனின் கண்ணைக் குறிவைத்து, அம்பு எய்து, மீனை விழ்த்த வேண்டும்.
     சுயம்வரத்திற்கு வந்திருந்த, எல்லா அரசர்களும் தோல்வியைத் தழுவுவதில் மட்டுமே, ஒருவரை ஒருவர் மிஞ்சுவதில் வெற்றி பெற்றனர்.
     அர்ச்சுனன் மட்டுமே, கண் இமைக்கும் நேரத்தில், அந்த மீனின் நிழலைப் பார்த்து வீழ்த்தி, சாதனையைப் புரிந்தான்.
     ஒரே காரணம், அவனுடைய ஒருமுகக்குவிப்புத் திறன் தான்.
இத் திறமை வாய்த்தவர்களுக்கு, எந்த செயலும், மிக எளிது என்பதற்கு, சான்றாக, ஸ்வாமி விவேகானந்தரின் அமெரிக்க விஜயத்தில், ஒரு நிகழ்வு.
நான்கு அமெரிக்க இளைஞர்கள்.
      அவர்களுக்கெதிரே ஒரு பெரிய மரப்பலகை தொங்கவிடப்பட்டிருந்தது. அதில், ஒரே அளவான இடைவெளியில் நான்கு முட்டைகள்., பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு இளைஞனும், அவனுக்கு எதிரே இருந்த முட்டையை, கைத் துப்பாக்கியால்,[PISTOL] சுட வேண்டும்.
அந் நால்வரும், பல முறை முயற்சித்தும்,  தோட்டாக்கள், முட்டையைச் சுற்றி சுற்றி தைத்தனவேயன்றி, இலக்கின் அருகில்கூட விழவில்லை. களைத்து அமர்ந்து விட்டனர்
அவர்களில் ஒருவன், தங்களை ,ஆரம்பத்திலிருந்து பார்த்தபடி நின்றிருந்த ஸ்வாமி விவேகானந்த்தர் அங்கேயே அகலாமல் இருப்பதைக் கவனித்தான்.



‘ஏ இந்தியத் துறவியே, ஏன் இன்னும் நிற்கிறாய். இந்த துப்பாக்கி போன்ற வீர விளையாட்டெல்லாம், அடிமை இந்தியருக்கெல்லாம், புரியாது, போய்விடு’ அவன் கேலி செய்ய, மற்றவர்களும், அவரைப் பரிகசித்து, கைகளைத் தட்டிச் சிரித்தனர்.
னால், ஸ்வாமி, புன்சிரிப்பையேப் பதிலாகத் தர, அவர்களில் ஒருவன், தன் கைத்துப்பாக்கியைக் காட்டி, ’இதை நீ எங்கே பார்த்திருக்கப் போகிறாய்? இதுக்கு பெயர் தான் பிஸ்டல். பார்’ அவரிடம் நீட்டினான்.
அதை வாங்கிய ஸ்வாமி, இலக்கான முட்டையைக் குறி பார்க்க, நால்வரும் பதறி, ‘ஏய், உனக்கு இதெல்லாம் வரவே வராது’ எனக் கண்டித்து, கைத்துப்பாக்கியை,அவரிடமிருந்து, பறித்துக் கொண்டனர்.
அப்போதும் அவர் பதில் சொல்லாமல், நகராமல் புன்சிரிப்புடன் அங்கேயே நிற்பதைக் கண்டு, வெகுண்ட ஒருவன் ’நீ முட்டையைச் சுடுவதென்பது கனவில் கூட நடக்காது. முதலில் அந்த மரத்தின் விழுதுகளில் ஒன்றயாவது குறி பார்த்து சுட முடியுமா, பார்க்கலாம்’ சவால் விட்டு, கைத் துப்பாக்கியை, அவர் மீது அலட்சியமாக எறிந்தான்.
அதனை, லாகவமாக வாங்கிக் கொண்ட ஸ்வாமி, ஒரு நிமிடம் உற்றுக் கவனித்தார். அந் நான்கு முட்டைகளும் ஒரே நேர் கோட்டில், அமைந்திருப்பதைக் கண்டார்,
கைத்துப்பாக்கியுடன், முட்டைகள், தான், தன் விழிகள், மற்றும் ,துப்பாக்கியின் தோட்டா பயணிக்கும் குழல், இவை அனைத்தும், ஒரே நேர்கோட்டில், வருமாறு பக்கவாட்டில் நின்று, அவர் குறி வைப்பதைக் கண்டு பயந்த இளைஞர்கள் எழுந்து,’ஏய், என்ன….’
அவர்கள் முடிக்கும் முன்னே, துப்பாக்கியிலிருந்து ‘விர்’ரென்று புறப்பட்ட ஒரே தோட்டா, நான்கு முட்டைகளையும், ஒரே நேரத்தில் தரையில் வீழ்த்தியது.
      ராமன், வில்லினை நிறுத்தி, நாணேற்றி, ஒடித்த வீரத்தின் மாண்பினை, கம்பன், தமிழுக்குப் புகழ் சேர்த்த தனது ராம காதையில், ‘எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர்’ என்று வரலாற்று சிறப்புமிக்க சொற்றொடர்களால்,
வர்ணித்ததைப்போல் அமைந்த, இத் தீரச் செயல், அந் நால்வரையும், வியப்பில் சிலைகளாக்கின.
      அவர்கள் இயல்பு நிலைக்குத்திரும்ப சில நிமிடங்கள் ஆயின.
      தங்கள் தவறை உணர்ந்து, முதல் முறையாக மரியாதையுடன் அவரை ‘ஸார்’ எனப் பணிவான குரலில் அழைத்து, ‘நீங்கள், துப்பாக்கிச் சுடுவதில் நிகரற்ற வீரர் என்பதை உணர்ந்து கொண்டோம். நாங்கள் நடந்து கொண்டமுறைக்கு வருந்துகிறோம், எங்களை மன்னித்து விடுங்கள்’ என வேண்டினர்.
      ஸ்வாமியும், அதே புன்சிரிப்புடன் தலை அசைக்கவே, அவர்கள், ‘ஸார், தாங்கள் எத்தனை காலம் பயிற்சி பெற்றீர்கள்? என்னென்ன வகையான துப்பாக்கிகளைத் தாங்கள் கையாள்வீர்கள்?   உலக அளவிலான போட்டிகளில் பெற்ற பரிசுகளென்ன? கேள்விகளை அடுக்கினர்.
      ஸ்வாமி, சிரித்தபடி, ‘இப்போதுதான் முதல் தடவையாக துப்பாக்கியையே நான் தொட்டேன்’ என்றதும் அவர்களால், தங்கள் செவிகளையே நம்பமுடியவில்லை.
     



’ஸார், நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது முதல் முறையிலியே, எந்த கொம்பனாலும், இப்படி கை சொடுக்கும் நேரத்தில், இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்த முடியாது’ மறுத்தனர்.
      அவர்’ என் அன்பார்ந்த இளைஞர்களே, எங்கள் பாரத நாடு, பழம் பெரும் நாடு. உலகுக்கே போதிக்கும் கலாசாரம் மிகுந்த நாடு. எங்கள் நாட்டில் தியானம் பயின்ற சிறுவர்கள் கூட, மிக எளிதாக நான் செய்ததை, ஒரு விளையாட்டு போலச் செய்வர்’ என்றார்.
      அவர்கள், ஆர்வத்துடன், தங்களுக்கு விரிவாக சொல்லுமாறு வேண்டினர். ஸ்வாமியும், தியானத்தைப் பற்றியும், வேதங்கள் உபநிடதங்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்.
      ’யத் பாவம் தத் பவதி’ என்கிறது உபநிடதம்.
      எப்படி நினைக்கிறாயோ, அப்படியே, நீ ஆகிறாய் என்பது தான் இதன் பொருள்.
      நினைப்பது போல் ஆகமுடியுமா?
      எள்ளத்தினை ஐயம் கூட வேண்டாம்.
      முடியும், நிச்சயம் முடியும், முடிந்த சான்றுகள் ஏராளம்.
      இரண்டினைக் காணலாம்.
      மஹாபாரதத்தில் ஓர் நிகழ்வு.
      துரோணாச்சாரியார், பாண்டவர்கள், கெளரவர்களுக்கு, வில்வித்தைகளைக் கற்பிப்பதை, தொலைவிலிருந்து ஆர்வத்துடன் பார்த்தபடி நின்ற வேட குல இளைஞன்,ஏகலைவனுக்கு, தானும் அந்த வித்தைகளைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்ற ஏக்கம் எழுந்தது, அதிலும், அர்சசுனனைப் போலச், வில் வித்தையில் நிகரற்றவனாகத் திகழ வேண்டுமென்று முடிவு செய்தான்.
      ஆர்வம், துணிவைத் தர, காட்டில் கிடைக்கும், கனிகளை, ஆச்சாரியர்
பாதங்களில், மிகுந்த பணிவுடன் வைத்து வணங்கி, தனக்கு வில் வித்தை கற்றுதருமாறு, பலமுறை இறைஞ்சினான்.
      ஆனால்,பீஷ்மர் கேட்டுக் கொண்டபடி, பாண்டவ, கெளரவ அரச குமாரர்களுக்கு வில் வித்தையைக், கற்பிக்கும் பொறுப்பை, ஆச்சாரியார் ஏற்றுக் கொண்டதால், தகுதியும், ஆர்வமும் உடையோருக்கு, அத்தகையோர் யாராயிருந்தாலும் தான் கற்றதைச் சொல்லித்தர வேண்டுமென்று, சாஸ்திரங்கள் விதித்திருந்தும், அவர் மறுக்க வேண்டியக் கட்டாயத்திற்குள்ளானார்.
      அவர் தன்னைச் சீடனாக ஏற்கும்வரை, அவ்விடத்தை விட்டு நகருவதில்லை, எனப் பிடிவாதமாக இருந்த ஏகலைவனை, அரச குமாரர்கள் விரட்டித் துரத்தினர்.
      ஆனாலும் ஏகலைவன் தனது முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.
      ஆச்சாரியாரை ஒரு பிம்பத்தில் வடித்து, தினமும் அவருக்கு வணங்கி, பயிற்சியைத் தொடங்கினான்.
      எத்தனை பெரிய மேதையானாலும்,குரு மூலமாகத்தான், கல்வி கற்க வேண்டுமென்பது சாஸ்திரம். இதற்கு, இறைவன் கூட விதி விலக்கல்ல.
      துவாபர யுகத்தில், கண்ணனாக அவதரித்த பகவான், நாராயணனே, சாந்தீப முனிவரிடம், தன்னை அவரது குருகுலத்தில் சீடனாக ஏற்று, கல்வி கற்றுத்தருமாறு




வேண்டினார். அவர் சாட்சாத், விஷ்ணுவேதான் என்பதை உணர்ந்த முனிவர், கண்ணனை வணங்கி, இறைவனுக்கே போதிக்கும் தகுதி தனக்கு இல்லை எனப் பணிவுடன் மறுத்தார்.
      தனது முந்தைய கிரேதாயுக ராமாவதாரத்தில், தான் தன் பெயரனான வசிஷ்டரிடம் மாணவனாகப் பயின்றதை நினைவுபடுத்தினார்.
      குரு பரம்பரையைக் குறிக்கும் சுலோகம், ‘நாராயணம், பத்மபுவம் வசிஷ்டம்.. என்கிறது. சுக முனிவர் பிரம்மச்சாரியானதால், அவர் காலம் வரை, குரு சீட பரம்பரை, தந்தை, மகன் என்றே தொடர்ந்து வந்தது. நாராயணனின் புதல்வர், பிரம்மன். அவரின் புதல்வர் தான் வசிஷ்டர். எனவே, வசிஷ்டர், பெயரன் முறையாகத்தான் ஆகிறார்  
      இதற்குப் பிறகுதான், சாந்த்தீப முனிவர், கண்ணனை, சீடனாக ஏற்றதாக பாகவதம் கூறுகிறது.
      தவிரவும், குருவின் அவசியத்தைவலியுறுத்தும் விதமாக, ஒரு கதை.
     
      தன்னைவிடக் கற்றவர் யாருமே இல்லை’ என்ற மமதை பிடித்த ஒரு புலவன்,அரசவைக் கவிஞர்களைத் தன்னுடன் வாதிட சவால் விடுக்கிறார்.
      தலைமை புலவர், அவருக்கு இருக்கை தந்து, மரியாதை செலுத்தி, ‘புலவரே, தங்களுடைய குரு யார்?’ பணிவாக வினவினார்.
      ’குருவா? எனக்கா? எதற்கு? எனக்கு எல்லாமே தெரியும்’ இறுமாப்புடன் அட்டகாசமாகச் சிரித்தார்.
      ’ஐயா, தங்களுக்கு என்ன வயதாகிறது?’
      ’ஏன்? ம்ம். நாற்பதாகிறது’
      ’புலவரே, தங்கள் முகம் தங்களுக்குத் தெரியுமா?’
       ‘என்ன விளையாடுகிறீர்களா. நான் பிறந்ததிலிருந்து இது வரை என்னிடமே உள்ள என் முகம் எனக்குத் தெரியாதா? ஏளனமாகச் சிரித்தார்.
      ’நல்லது. உங்கள் முகத்தை நீங்களே பாருங்கள்’
      ’கண்ணாடி கொடுங்கள்.’
      ’எதற்கு?’
      ’யாரால்தான் கண்ணாடி இல்லாமல், தன் முகத்தை பார்க்க இயலும்?’
      ’நீங்கள் பிறந்த வினாடியிலிருந்தே, நாற்பதாண்டுகள் உங்களுடனே ஒன்றிவிட்ட, உங்கள் முகத்தை, நீங்களே பார்க்க, கேவலமொரு சிறு கண்ணாடியில்லாமல், உங்களால் முடியவில்லையே ஏன்?. கல்விக்கே அதிபதியான சரஸ்வதி தேவியே, தான் கற்றது கை அளவே,கல்லாதது கடல் அளவு’ என்று சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, எல்லாம் தெரிந்தவராக ஒரு மனிதனால் எப்படி இருக்க முடியும், அதுவும் குருவின் உதவி இல்லாமல்?’
      தனது அறியாமையை உணர்ந்த அப்புலவர், தலமை புலவரின் பாதங்களில் விழுந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.
      இது, ஒருவர் கற்றிட குரு மிகவும் இன்றியமையாதவர் என்பதைப் புலப்படுத்துகிறது.




      அங்கு, ஆச்சாரியாரிடம் நேர்முகமாக அரச குமாரர்களும், வனத்தில், ஆச்சாரியாரின் பிம்பத்தை வைத்து, ஏகலைவனும், வில்வித்தை பயின்று வரும் கால கட்டத்தில்-
      ஓர் நாள்,
      ஒரு நாய் குரைக்கும் ஒலி கேட்டது.
      அரச குமாரர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த துரோணாச்சாரியர், ‘அர்ச்சுனா, உனக்குக் கற்பித்த சப்தவேதி கலையை, பரிட்சித்து பார்க்கும் நேரம் வந்துவிட்டது. அந்த நாயை, உன்னால் அழிக்கமுடிகிறதா பார்க்கலாம்.விடு கணையை’ உத்தரவிட்டார்.
      ’என் திறமையைக் கண்டு நீங்கள் நிச்சயம் என்னைப் பாரட்டத்தான் போகிறீர்கள்’ என உறுதியான குரலில் கூறிய அர்ச்சுனன், கணையை விடுத்தான்.
      கணை வில்லிலிருந்து விடுபட்ட அடுத்த கணமே, அந்த குரைக்கும் ஒலி ’டப்’பென்று நின்றது. ஆச்சாரியார், நம்பமுடியாமல் திகைக்க, அர்ச்சுனன், ‘ஆச்சாரியார் அவர்களே, என் கணை பாய்ந்த வேகம் உங்களை அசத்தி விட்டது அல்லவா. இந்த சப்தவேதி கலையில் என்னை வெல்ல உலகில் யாருமே கிடையாது’ கர்வத்துடன் கூறினான்.
      ’வா பார்ப்போம்’ சீடன்ன் பின்தொடரச் சென்றவர், அந்தக் காட்சியைக் கண்டதும், சிலையானார்.
      அர்ச்சுனனின் கணை தரையில் கிடக்க, நின்ற நிலையிலிருந்த நாயின் திறந்த வாயில் ஒரு கணை அழுத்தமாகத் தைத்திருந்தது., வாயிலிருந்து ரத்தம் பீறிட்டு பாய்ந்து கொண்டிருந்தது.
      யார் விடுத்த கணை இது? அர்ச்சுனனைத் தவிர வேறு யாருக்கும் இந்த கலயை சொல்லித் தரவில்லையே.
      ஆச்சாரியார் குழப்பத்தில்.
       அர்ச்சுனனோ, தன்னைவிட திறமைசாலி ஒருத்தன் இருக்கிறானே என்ற பொறாமை ஒருபுறமும், ஆச்சாரியார் தனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி, யாரோ ஒருவனுக்கு, இந்தகலையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று அவர் மீது ஐயமும் சினமும் பொங்க உள்ளம் கொந்தளிக்க, அவரை முறைத்துப் பார்த்தான்.
       இந்த சப்தவேதி என்பது என்ன?
      விற்போர்க் கலையில், ‘சப்தவேதி’ என்பது மிகவும் கடினமானது. மிகச் சிலரே இதில் பயிற்சி பெற, அடிப்படைத் தகுதிகள் பெற்றிருப்பார். அவர்களுள்ளும், இப் பிரபஞ்சத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மூவர் மட்டுமே.
      அந்த மூவரிலும், தசரதர், தன் கணிப்பில் செய்த தவறு தான், அவரது மரணத்துக்கே காரணமாயிற்று.
      ஒரு ஒலியைக் கேட்ட மாத்திரத்தில்,
1.       ஒலி வரும் திசை,
2ஒலியின் அளவு DECIBAL LEVEL,
      3.அந்த ஒலியை எழுப்பியது யார் அல்லது எது,
4.  ஒலியை பிறபித்தவர்  இருக்கும் இடம்,
5.  அந்த இடத்தின் தன்மை, சமவெளியா, நீர் நிலையா, மலையா, போன்றன,


6.  அந்த காரணகர்த்தா இருக்கும் நிலை, அதாவது, நின்றபடியா, படுத்த படியா, இல்லை நடந்தபடியா போன்ற விவரங்கள்,
      7. அது இருக்கும் தொலைவு,, இன்ன பிற, மிக நுணுக்காமானத் தகவல்களை, அந்த ஒலியை மட்டும் வைத்து, மிகத் துல்லியமாக கணித்து, அதற்கேற்ப கணக்கிட்டு கணையைச் செலுத்தி, வீழ்த்த வேண்டும். அதுவும், மிகக் குறைந்த கால அளவில்.

      நோயுற்றத் தன் தாய் தந்தையரை, காவடியில் சுமந்து, அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தான் சிரவணன், ஒரு சமயம், காட்டின் வழியாகச் செல்லும்போது, பெற்றோர்களின் தாகத்தைத் தணிக்க, காவடியை ஒரு மரத்தினடியில் வைத்து விட்டு, நீர் தேடிச் சென்றான். பானையில், ஆற்றின் நீரை நிரப்பிக் கொண்டிருந்தான்.
 பானையில் நீர் புகும் ஒலியை, தசரதன்,ஒரு யானை நீர் அருந்துவதாகத் தவறாகக் கணித்து, அதனைக் கொல்லத், தான் பயின்ற, சப்தவேதி முறையில் கணையை விட, சிரவணன் இறக்க நேரிடுகிறது. அதன் விளைவாக, சிரவணின் பெற்றோர்களின் சாபத்துக்குள்ளாகி, ராமனைப் பிரிந்த புத்திர சோகத்தால் தசரதன் உயிரிழந்தான்.

      இதிலிருந்து இக்கலை எவ்வளவு கடினமானது மட்டுமல்லாமல், சிறு தவறு கூட ஏற்படுத்தும், கொடும் விளைவுகளிலிருந்து, தப்பிக்க இயலாது என்பதும் விளங்கும்.
      தனது கோபத்தை அடக்கமுடியாமலும், அதே நேரத்தில், ஆச்சார்யார் மீது தனக்குள்ள ஐயத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென்று, அர்ச்சுனன், ‘ஆச்சார்யரர் அவர்களே, இந்த சப்தவேதி கலையைக் கற்பிக்கும் திறனுள்ளவர்கள், தங்களைத் தவிர, வேறு யாருமே கிடையாது. அதனால், தயவு செய்து, உங்களுடைய அந்த சீடன் யார்,  என்பதைத் தயவு செய்து, இப்பவாவது சொல்லுங்கள்’  பணிவுடன் கேட்டான்.
     அவனிருக்கும் மன நிலையில்தான் என்ன சொன்னாலும், அவன் நம்பமாட்டான் என்று ஆச்சார்யார் அமைதியாக இருந்தார்.
     அப்போது, வில்லுடன் ஒரு இளம் வேடன் வருவதை கண்டார். அவன் தான், தான் சீடனாக ஏற்கமறுத்த ஏகலைவன், என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால், அவனை அர்ச்சுனன் அறியமாட்டான். அவன் செய்வதை அறிய அர்ச்சுனனுடன், ஒரு மரத்தின் பின் நின்றார்.
      தான் விட்ட கணை, திட்டமிட்டபடி, நாயின் திறந்த வாயில், ஆழமாகச் சென்று, அதன் உயிரை பறித்ததை பார்த்து, வேடன் மகிழ்ந்தான். வேறு ஒரு கணை
 இலக்கு தவறி, கீழே விழுந்திருப்பதையும் கண்டு, சில விநாடிகள் சிந்தனையில் ஆழ்ந்தான்.
    , ’இது நிச்சயம் அர்ச்சுனன் விட்ட பாணந்தான். அவனை விட மிகத் துல்லியமாகக் கணித்து, இலக்கை மாய்க்கும் ஆற்றல் வேறு யாருக்கும் கிடையாது. இந்த அற்புத சப்தவேதி வித்தையைக் கற்றுக் கொடுத்த, துரோணாச்சார்யார் அவர்களே, உங்களுக்கு, இந்த சீடனனின் பணிவான வணக்கங்கள்;.
    


நன்றிப் பெருக்கில் கண்களில் நீர் தாரையாக வழிய, உரத்த குரலில் கூறி, அவனை அறியாமலே, ஆச்சாரியார் நின்றிருந்த மரமிருக்கும் திசையில், தரையில் விழுந்து வணங்கினான்.
    ஆச்சாரியாரின் மனதில், அவனுடைய திறமையைப் பார்த்ததும், இந்த சப்தவேதி கலை தனக்குப் பிறகும் உலகில் தொடரும், என்ற மகிழ்ச்சி தான், முதலில் ஏற்பட்டது.
    அப்போது, அர்ச்சுனன், அவரைப் பார்வையால் சுட்டதை உணர்ந்தவராக, ‘யாரப்பா நீ’ கேட்டார்.
    வியப்பும், ஆனந்தமும் அவனுள்ளத்தில் பொங்கித் ததும்ப,, ஏகலைவன், அவர் பாதங்களில், நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். கண்ணீரால் பாதங்களை முழுக்காட்டினான்.
    ‘ஆச்சார்யார் அவர்களே, விற் கலையிலுள்ள அனைத்தையும். இந்த ஏழை வேடனுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்கள் ஆசியினால் தான், சப்தவேதி போட்டியிலும், நான் வெற்றி பெற முடிந்தது.’ உணர்ச்சிப் பெருக்கில், நெஞ்சம் நெகிழ, தழுதழுத்தக் குரலில் சொன்னான்.
   ஆச்சார்யார் விழிகளில் முட்டிய நீரை அடக்கியபடி, சினத்துடன், ’உன்னை சீடனாக ஏற்கும்படி,சில வருஷங்களுக்குமுன் நீ என்னிடம் வந்தபோது முடியாதென்று துரத்தினதை மறந்து விட்டாயா? அதற்குப் பிறகு இப்போதுதான் உன்னை பார்க்கிறேன். பின் ஏன் பொய் சொல்கிறாய்? ’ வெடித்தார்.
   ‘கைகளைக் கட்டியபடி, குனிந்து, பணிவான குரலில், ‘நீங்கள் மறுத்ததும் அதற்குப் பிறகு, இப்போதுதான் என்னைப் பார்ப்பதும் உண்மை தான். ஆனால், அன்று முதல் இன்று வரை தினமும் நான் தங்களிடந்தான் பயிற்சி பெற்று வருகிறேன். சப்தவேதி உள்ளிட்ட அனைத்து வித்தைகளையும் தங்களிடமிருந்துதான் கற்றேன்’ கூறவே, இருவரும் திகைத்தனர்.
       ‘என்னுடன் வாருங்கள்’
 அழைத்த அவனைப் பின்தொடர்ந்தனார்.
      அடர்ந்த காட்டின் நடுவில், பெரிய ஆலமரத்தினடியில், ஆச்சாரியாரின் பெரிய பிம்பம், நெற்றியில் பளிச்சிடும் வெண்ணீர். கழுத்து நிறைய மாலைகள். பாதங்களில் கனிகள்.
        தன் தோளிலிருந்த வில்லையும், கணைகளடங்கிய கூடையையும், பிம்பத்தின் கால்களில் பக்தியுடன் வைத்தான்.
        ’ஆச்சார்யார் அவர்களே. தினமும், சூரியன் எழுமுன், நான் நீராடிவிட்டு, தங்களை மனதிலிருத்தி, தங்களின் புனித பாதங்களைத் தொட்டு
வணங்கிவிட்டுத்தான் பயிற்சியைத் துவங்குவேன். அப்படித்தான் அனைத்தையும் கற்றேன்’
      ஆச்சார்யாரின் கண்கள் பனித்தன.
           
      ‘THE ACHIEVEMENT OF YOUR GOAL IS ASSURED, THE MOMENT YOU COMMIT YOURSELF TO IT’
    


உன் இலக்கை அடைந்தே தீருவேன் என்ற முனைப்புடன் நீ செயலிலிறங்கிய கணமே நீ வெற்றியை அடைவது உறுதி செய்யப்பட்டு விட்டது.

      இது தொடர்பாக, நமக்கு மிகவும் தெரிந்த ஒரு மேதையின் வாழ்க்கையைக் காணலாம்.
      சிறைச்சாலையில் பணியாற்றுபவரின் ஒரே மகன் இந்தச் சிறுவன். இவனுக்கு நான்கு வயதாகும்போது, இவனது தந்தை மரணமடைகிறார். சுற்றத்தாரும் ஊராரும், இவனை ’பெத்த அப்பனையே விழுங்கிய பிள்ளை’ எனத் தூற்றுகின்றனர். தாய் மனம் வேதனையுறுகிறது. தந்தையின் மறைவைத் தொடர்ந்து, உடன்பிறப்பும் காலமாக, ஊரார், இவனை ’துக்கிரி’ என முத்திரை குத்தி பெற்றவளின் மனதை ரணமாக்கியதுடன் நிற்கவில்லை.
      ’இவனை தொலைச்சு தலைமுழுகு’ என்று வற்புறுத்தவும் செய்கின்றனர்.
      மனமுடைந்த தாய், மகனுடன் தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வது என்ற முடிவு செய்கிறார்.  ‘தன்னை எங்கு, எதற்கு அம்மா கைபிடித்து அழைத்துச் செல்கிறார் என்று தெரியாமல், சிறுவனும் சிரித்துபடி செல்கிறான்.
      இவனைக் கொண்டு, தமிழ் நாட்டிற்கு, பெரும் புகழை ஈட்டிதரவே, அதற்கேற்றத் திறமைகளுடன் படைத்த இறைவன் விடுவானா?
’என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’
 என்று திருமூலரையே நன்றியுடன் பாடிடப் படைத்தவனாயிற்றே.
 சிறுவனின் தாத்தா, தக்கத் தருணத்தில் வந்து, மகளையும், பெயரனையும் காப்பாற்றி அழைத்துச் சென்றார். 

      இவன் நாடகமொன்றில், சிறுவன் லோகிதாசனாக நடித்தது, பார்வையாளர்களை அசத்தியது. நிகழ்ச்சிக்கு தலமை தாங்கிய மாவட்ட ஆட்சியர், இவனது நடிப்பாற்றலை மிகவும் பாராட்டி, இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்த
நடிகனாக நிச்சயம் பிரகாசிப்பான் எனப் புகழவே, நடிகனாகும் ஆசை இவனுள்ளத்தில் துளிர்விட்டது.
      இவனை, திருப்பூரில் இருந்த ஜுபிடர் பிக்சர்ஸ் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில், ஆபீஸ் பையனாக்ச் சேர்த்தார், அங்கு குட்டி வேடங்களிலும் ,பிறகு ஒரு நாடகக் குழுவிலும் சேர்ந்து, நடித்தார். இந்த அனுபவந்தான் இவரை ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க உதவியது.
      பழைய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்தபின், அங்கு பிரபல இசை அமைப்பாளரின் ஆர்மோனியம் இவரை ஈர்த்தது. இசை அமைப்பாளர் இல்லாத
நேரங்களில், அதனைத் தொட்டு இசை எழுப்பி மகிழ்வார். தானும் ஒரு இசை அமைப்பாளராக வேண்டுமென்ற உறுதி எழுந்தது.
ஒருநாள் அந்த இசை அமைப்பாளர், ஒரு பாட்டுக்கு பொருத்தமான மெட்டை அமைக்க முயற்சித்து, எதுவுமே அவருக்குத் திருப்தியாக அமையவில்லை. இதைக் கவனித்த இவன், அவர் அகன்றதும் ஒரு மெட்டை அமைத்தான்.



அதுவே, தமிழ்  திரைப்படத் துறையையே, நாடே திரும்பிப் பார்க்க வைத்த திரை இசைப் பாடல்களைத் தந்த, திரு.எம். எஸ். விசுவநாதனை வழங்கியது.
      இது எப்படி சாத்தியமாயிற்று?
‘WE ARE WHAT OUR THOUGHTS MADE US’
      ‘IF YOU THINK YOU ARE STRONG, YOU WILL BECOME STRONG. IF YOU THINK YOU ARE WEAK, YOU WILL BECOME WEAK’
                                          SWAMII VIVEKKAANANDAR.

      ‘நமது எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன.’
      ’ நீ உன்னை பலசாலிதான் என்று எண்ணுவாயாகில், நிச்சயம் நீ அப்படியே பலசாலியாகத் திகழ்வாய்.  மாறாக, வலுவில்லாதவன், கோழை என, உன்னை நீயே தாழ்த்திக் கொண்டால், அப்படியே தான் வாழ்நாளைக் கழிக்க நேரும்’
                                          ஸ்வாமி விவேகானநந்தர்.

       ஒவ்வோருவரும், நன்கு சிந்தித்து, தனக்கென ஒரு லட்சியத்தை வகுத்து, அதனை அடைய,உழைப்பெனும் முதல் போட்டு, தன்னம்பிக்கையுடன் செயலில் இறங்கினால், வெற்றி வீட்டு வாயிலில் காத்திருக்கும். எள்ளத்தனை ஐயமும் வேண்டாம்.
       இது உண்மையா?
      ஆனாலும், சிலர், இந்த வழிகளைத் தான் பின்பற்றி, எவ்வளவோ, முயற்சித்தும், தோல்விதான் கண்ட பலனென்றும், அதற்கு,‘தலைவிதி, அதிர்ஷ்டம் இல்லை’  ஆகியவற்றைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, புலம்புவதையும் கண்டிருக்கிறோம்.
     அல்லது, இது  உண்மையா?

      வெற்றி. வெற்றி,
      எங்கும் வெற்றி
      எதிலும் வெற்றி
      எடுத்த காரியம் யாவினும் வெற்றி.
      பெற்றவர் எவருமிலர்.
      பிறரைத் துன்புறுத்தி, அவர் படும் சித்ரவதையைக் கண்டு ஆனந்திக்கும் வக்ர மனம் [SADIST] கொண்ட அடால்ப் ஹிட்லெர் போரிட்டு வென்ற நாடுகளும் உண்டு;
கோயபல்ஸ் என்ற அவனது அமைச்சரின் பொய் பிரசாத்திலியே பயந்து நடு நடுங்கி, வலிய வந்து, ஹிட்லரிடம் சரணடைந்த நாடுகளும் உண்டு.
      குழந்தை, பெண், முதியோர் என்ற ஈவிரக்கமில்லாமல், லட்சக்கணக்கான் யூதர்களைக் கொன்று குவித்தவன் இக் கொடியவன்.  இவனது வெறியினால் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி, உலகெங்குலுமுள்ள லட்சக்கணக்கான அப்பாவிகளின் உயிர்களைப் பறித்து, இவ்வையகத்தையே ஒரு கொடூர சுடுகாடாக்கிய, இவன் இறுதி வரை வெற்றி பெற்றானா?
      இல்லையே.
     


ஒரு பதுங்கு குழியில், ஒளிந்து வாழ்ந்து, கோழையைப் போல, தற்கொலை செய்து கொண்டான்.

      தோல்வி, தோல்வி,
      தொட்டதெல்லாம் தோல்வி
தலைஎடுக்க விடாமல்,
தரையில் வீழ்த்திய தோல்வி,
      தோல்வியன்றி வேறில்லை

      தோல்வியையே நிழலாகக் கொண்டவரும் எவருமிலர்.

      பதினேழு முறை தொடர்ந்து தோல்வியையே தழுவிய, முகமதிய அரசன்,  கஜினி முஹம்மது, தனது பதினெட்டாவது முறைப் போரில், எதிரியை வென்று, இந்தியாவின் சரித்திரத்தில்,ஒரு பெரும் திருப்பு முனை ஏற்பட வித்திட்டானே.
      எப்படி?
      தொடர்ந்து வெற்றி அவனது எட்டாக் கனியாகவே, காடுகளில் மறைந்து வாழ்ந்த ராபெர்ட் ப்ருஸ், ஒரு சிலந்தி, இருபத்தேழு முறைகள், வலை பின்னுவதில் தோல்வியே அடைந்தாமலும், நம்பிக்கை இழக்காமல்,  மறுபடியும் முயல, வெற்றி பெற்றான்.
      அவன் வாழ்க்கையே ஏற்றம் கண்டது.
      எனவே எதை நம்புவது?


                                    7

      ’வெற்றி’ இது என்ன?
      தான் எண்ணியதைச் சாதித்துவிட்டோம் என்ற பெருமிதம். அதனை, சாதனையாக வர்ணித்து, அகமகிழ்வது, துள்ளிக் குதித்துக் கொண்டாடுவது. இதன்
 தொடர்ச்சியாக, பிறரால் போற்றப்படுவது, சமுகத்தில், முக்கியப் புள்ளியாகத் திகழ்வது, ஆகியன நிகழ்கின்றன.

      ’தோல்வி’ இது என்ன?
      தனக்கென வகுத்துக் கொண்ட லட்சியத்தை அடைய எவ்வளவோ முயற்சித்தும், வெற்றி பெறாதது. அதனால் உருவாகும் தாழ்வு மனப்பான்மை, அதற்கு உரமிடுவதுபோல், உறவினர், மற்றும்  நண்பர்களால், உபரிகசிக்கப்படுவது,--அநேக நேரங்களில் அப்படி இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு துன்புறுவது—இந்த மன உளைச்சல்களால், முற்றிலும் நம்பிக்கையைத் தொலைத்தல்,
 இவைகளின் கூட்டு விளைவாக, வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைக்கு, தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனர்.
      தேர்வில் வெற்றி பெறாததற்காக, பள்ளி கல்லுரி மாணவர்கள், உயிரை மாய்த்துக் கொள்ளும் துயர நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன. இதற்கு



பெருமளவில், சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களும், ஒரளவு சமூகமுமே காரணமாகின்றனர்.
      வெற்றி, தோல்வி, இவை இரண்டுமே, வாழ்க்கை பயணத்தில், இரு தவிர்க்கமுடியாத, இரு நிலைகள் தான். இது ஒருவரின் வாழ்வில் எந்த காலக் கட்டத்திலும் நிகழலாம்.     
      வெற்றி ,தோல்வி, இவை இரண்டுமே, முடிவே இல்லாத தொடர்கதை அல்ல. சிலரது வாழ்வில், இது ஒரு கால் பக்கக் கதையாகவோ, சிறு கதையாகவோ
குறு நாவலாகவோ இருக்காலாமேத் தவிர, கண்டிப்பாக முடிவு உண்டு.
     தொலைக் காட்சி நாடகத் தொடர்கள், மக்களிடையே, எவ்வளவு தான் வரவேற்பு பெற்று, வருடக் கணக்கில், ஒளிபரப்பானாலும், ஒரு கட்டத்தில், ‘வணக்கம்’ என்ற சொல்லைத் தவிர்க்க முடிவதில்லை என்பதை அனைவருமே அறிவர்.

      இந்த அடிப்படை உண்மையை, நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோமானால் தோல்வியினால் துவண்டுபோவதோ, வெற்றி பெற்றதால் துள்ளுவதோ, இந்த இரண்டின் பாதிப்பு இல்லாமல், நமது லட்சியத்தை அடையும் முயற்சியைத் தொடருவது மிக எளிதாக இருக்கும்.

      ’SUCCESS IS NOT FINAL, FAILURE IS NOT FATAL. IRRESPECYTIVE OF SUCCESS AND \ OR FAILURE, WHAT COUNTS IS ONE’S COURAGE TO PROCEED AHEAD,’-
                                                WINSTON CHURCHILL.
      வெற்றியோ, தோல்வியோ, எதுவானாலும் அதனால் பாதிப்புக்குள்ளாகாமல், எடுத்த காரியத்தை மேலே நடத்திச் செல்லும் மன உறுதி தான், அவசியம்.
                                                 வின்ஸ்டன் சர்ச்சில்.
      உலகில் எந்த மனிதருடைய வாழ்க்கையும், சிறு இடருமின்றி, அமைந்ததாக வரலாறே கிடையாது. இருக்கவும் முடியாது.

            ‘REMEMBER THERE IS NO ONE HUMAN BEING IN THIS WORLD WHO HAD SMOOTH RIDING ALL THE TIIME’           ADAGE.

      இதற்குச் சான்றுகள், நமது இதிகாசங்கள் மட்டுமல்ல, ஏசு பிரான், புத்தார் போன்றோரின் வாழ்க்கை சரிதங்களுமாகும். 

      கீதையில், ’சுகதுக்கே சமே க்ருத்வா லாபாலாபெள ஜயாஜயெள’’,அதாவது, வாழ்க்கையில் ஏற்படும் சுகம் துக்கம், லாபம், நஷ்டம், வெற்றி தோல்வி, அவற்றைச் சமமாகக் கொள்ளுதல் வேண்டும் என்கிறார், கண்ணன்.
      இந்த மனநிலையை ஒருவர் அடைவது என்பதுமிகக் கடினம். இதை மக்களுக்கு உபதேசிப்பவர்களில், எத்தனை பேரால், தங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்கங்கள், லாப நஷ்டங்கள், வெற்றி, தோல்விகள், இவற்றால், பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறதென்று பார்த்தால், ஏமாற்றமடைவது நிச்சயம்.



 மெத்தப் படித்தவர்களாலேயே, இயலாத இம்மன நிலையை, சராசரி மனிதர்களிடம், எப்படி எதிர்பார்க்கமுடியும்?
      அதனால் நடைமுறைக்கு ஒத்துவரும் தீர்வைக் காண்பதுதான் அறிவுடமை.

      முதலில், வெற்றியை, ’பெருமிதம் கொள்ளச்செய்யும் சாதனை’ என்று கருதி அகமகிழ்வதும், தோல்வியை, ’ஒரு பின்னடைவு, இனி வாழ்க்கையே அவ்வளவு தான் எனக் கொண்டு நொறுங்கிப் போவதும்’, சரியா?
      இதற்கு விடை காண, சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.
       ரயில்வேத் துறையில் நீராவி என்ஞின்களே, புழக்கத்தில் இருந்த காலம்.
இவர் அந்த என்ஞின்களை பராமரிப்பக்கானத் துறையில் உரிய பயிற்சி பெற்று, ஒரு என்ஞின் பணிமனையில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
அந் நிலையத்திலுள்ள, என்ஞின் ஒவ்வொன்றையும் பயன்பாட்டிற்குத் தகுதியுள்ளது தானா என்று பரிசோதித்து, பழுதிருந்தால் சரி செய்து தர வேண்டிய மிகப் பொறுப்பான பதவி. இதற்காக, இவரின் மேற்பார்வையில் பணி செய்ய, இவருக்கு முப்பது ஊழியர்கள் தரப்பட்டனர்.
      இவர் தன் துறையில் திறமைசாலி மட்டுமல்ல, மிகுந்த ஈடுபாட்டுடன், நேரம் காலம் பார்க்காது, விசுவாசத்துடன் கடமையாற்றுபவரும் கூட.
தொழிலாளர் மேலாண்மை [LABOUR MANAGEMENI] என்பது ஒரு தனிக் கலை. கிராமங்களில், ‘ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடிக் கறக்கிற மாட்டைக் பாடிக் கறக்கனும்’ என்று சொல்வார்கள். இதன் பொருள், ஒவ்வொரு மாட்டின், தன்மைகேற்பச் செயல்பட்டால்தான் எதிர்பார்க்கும் பலன் கிட்டும் என்பது தான்.
      இதனைத்தான் வள்ளுவரும்,
      ’செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு
      எய்த உணர்ந்து செயல்’ என்றும்
      ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து
      அதனை அவன்கண் விடல்’ என்றும்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லித் தந்திருக்கிறார்.

      ஆனால், இதில் தான், இந்த மேற்பாற்வையாளர் படு தோல்வி கண்டார் இவரின் கீழ் பணியாற்றுபவர்களில் ஒரு சிலர் தான், இவரது உத்தரவிற்கேற்ப கடமையாற்றுவர். அவர்களைக் கொண்டு தான், இவரால் ஒரளவாவது செயலாற்றமுடிந்தது.
.
      ஒரு நாள், விரைவு வண்டித் தொடருக்கான என்ஞினில் ஒருபழுது சரி செய்யப்பட வேண்டியிருந்தது. இவருடன் ஒத்துழைக்கும் தொழிலாளர்கள் இல்லாத சூழல். அந்த என்ஞின் செல்ல வேண்டிய நேரம் நெருங்கிகொண்டிருந்தது. மற்ற ஊழியர்கள் வேண்டுமென்றே இவரை ஒருபுறம் காலை வர, மறுபுறம் இவரது மேலதிகாரி, இவரை வேலையை விரைந்து முடிக்க வற்புறுத்தினார்.
     


இவர் அந்த பழுதை சரிசெய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக, நீராவி செல்லும் குழாய் வெடித்தது. கொதிக்கும் நீர், இவர் முகத்திலும் கைகளிலும் பீறிட்டு அடிக்க, துடிதுடித்து, மயக்கமடைந்து கீழே விழுந்தார். 
      இவர் இந்த விபத்திலிருந்து உயிர் பிழைத்தாலும், ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருக்க நேரிட்டது. இவரது குடும்பத்தினர், இவரை மாற்று வேலைக்குச் செல்ல வற்புறுத்தினர். உடன் வேலை செய்பவர்களோ, இவரது பணியின் அத்தியாயமே முடிந்துவிட்டது என்று ஆரூடம் கூறினர்.
      ஆனால், இவருக்குக், கடமையிலுள்ள விசுவாசத்தையும் நேர்மையும் நன்கறிந்த, தலைமை அலுவகத்திலுள்ள உயர் அதிகாரி, இவரை இழக்க விரும்பவில்லை.

 இவருக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தவறினால், இவரைப் போன்ற உண்மை ஊழியர்கள் நம்பிக்கை இழப்பதுடன், உரிமைகளை மட்டும் வற்புறுத்திப் போராடி, கடமைகளைச் செய்ய மறுக்கும்  தொழிலாளர்களை ஊக்குவிப்பதாகி விடும் என்பதால், இவருக்குத் தன்னாலான உதவிகளைச் செய்திட எண்ணினார்.

      அச்சமயத்தில் தான், நீராவி எஞின்களைப் படிப்படியாக நீக்கி, திரவ எரிபொருளைக் கொண்டு இயங்கும் டீசல் என்ஞின்களைப் புகுத்துவது என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
      அதற்கான பயிற்சியைப் பெறத் தகுதியான  பொறியாளர்கள், மேற்பார்வையாளர்களைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் இவர் மேல் அக்கறை கொண்ட உயர் அதிகாரியும் இடம் பெறவே, இவர் பயிற்சிக்காக மேல் நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.
      இவர் வாழ்க்கையே ஒளி மயமானது.
      படிப்படியாக, குறிகிய கால இடைவெளியில் பல பதவி உயர்வுகளை, அடுத்தடுத்து பெற்றார். இவர் கனவிலும் நினைத்திராத மிக உயர்ந்த பதவியில் ஓய்வும் பெற்றார்.
      ஒரு கட்டத்தில் இவர் தோல்வியுற்ற நிகழ்வே, இவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்த மா பெரும் வெற்றியாக மலர்ந்தது.
      வேறு ஒரு நிகழ்வு.
     
      இவர் சிறு வயதிலிருந்தே திரைப்படத் துறையில் ஒரு சாதனையாளராக விளங்க வேண்டுமென்று கனவு கண்டார். இவரது பெற்றோர்களும் சம்மதிக்கவே, தனது கல்லூரி படிப்பு முடிந்ததும், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். தோல்வி மேல் தோல்விகளச் சந்தித்தாலும் இவர் நம்பிக்கை இழக்கவில்லை. இவருடைய ஆர்வத்தையும், தன்னம்பிக்கையும் கண்ட ஒரு பிரபல இயக்குநர், இவரைத் தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.
      இவருடைய திறமையையும், ஈடுபாட்டையும் பாராட்டிய ஒரு தயாரிப்பாளர், இவருக்கு தனது அடுத்த படத்திற்கான கதை, உரையாடல், இயக்கம் என்ற அனைத்துப் பொறுப்புகளையும் அளித்தார்.
     


இவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, அத் துறையில் முத்திரை பதிக்க விரும்பி, கடுமையாக உழைத்தார்.
      இவரது முதல் படமே வெள்ளி விழாக் கொண்டடாடியதுடன், பல விருதுகளையும் அள்ளியது. அனைத்து ஊடகங்களும் இவரை பாராட்டு மழையில் நனைத்தன.
      பல தயாரிப்பாளர்கள், இவரை தங்களுக்குப் படம் தயாரித்துக் கொடுக்க, பண மூட்டையுடன் இவர் வீட்டு வாயிலில் வரிசையில் காத்திருந்தனர். இவரும் நன்றி மறவாமல், தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கே முன்னுரிமை கொடுத்தார்.
      முதல் முயற்சியிலியே, வெள்ளிவிழாப் படம் தந்த இவரின் அடுத்த படம், நிச்சயம் அதைவிட மிகப் பெரிய வெற்றிகளை மட்டுமல்ல, ஆஸ்கார் விருதையும் என, ஊடகங்கள் ,ஒன்றை மிஞ்சி ஒன்று எதிர்பார்ப்புகளை, மக்களிடையேயும், விநியோகஸ்த்தர்களிடையேயும், உருவாக்கின. தயாரிப்பாளரும் தன் சக்திக்கு மீறி பணத்தைச் செலவழித்தார், இவரும் வஞ்சனையில்லாமல், உடலையும் மூளையும் வருத்தி உழைத்தார். நல்ல லாபம் ஈட்டலாம் என்ற எதிர்பார்ப்புகளுடன், விநியோகஸ்தர்களும், வரலாறு காணாத விலைக்கு வாங்கினர்.
      ஆனால், இவரிடமிருந்து, முதல் படத்தைவிட உயர்ந்த தரத்தை எதிர்பார்த்த மக்களை இந்த படம் திருப்தி செய்யவில்லை. மூன்றே வாரங்களில், திரைப் பட அரங்குகளிலிருந்து விரட்டப்பட, அனைவருக்கும் பெருத்த நஷ்டம். அதற்கு இவரை மட்டுமே குற்றவாளியாக்கினர்.
      இந்த படு தோல்வியிலிருந்து மீள முடியாமல் இவரும், அத் துறையை விட்டே விலகநேரிட்டது.


      இந் நிகழ்வுகள், தோல்வியே, மிகப் பெரிய வெற்றியாகவும், வரலாறு கண்ட வெற்றி கூட, மீள முடியாதத் தோல்வியாகவும் மாறலாம், மாறும் என்ற படிப்பனைத் தருகிறது.
      மனிதரது வாழ்க்கையில், குழந்தைப் பருவம், இளஞன், நடுத்தர வயதினன், முதியவர், என்ற கட்டங்கள், எப்படி தவிர்க்கமுடியாததோ, அதைப் போன்றுதான், வாழ்வில், வெற்றி, தோல்விகளும்.
      இயற்கையில் ஒவ்வொரு ஆண்டும், நிகழும், பருவ மாற்றங்களை, வடமொழி நூல், ஆறு ருதுக்களாகப் பிரித்து, அவற்றை, வசந்த ருது, கிரீஷ்ம ருது, வருஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, மற்றும் சிசிர ருது என அழைத்தனர்.
      நமது நாட்டில் ஏற்படும் இம்மாற்றங்களை, இளவேனில் காலம், வெய்யில் காலம், கார்காலம் மற்றும், பனிக்காலம்என்கிறோம்.
 மேல்நாடுகளில், இவற்றையே, ‘SUMMER, WINTER, AUTUMN AND MONSOON SEASONS’,      என வகைப் படுத்தியுள்ளனர்.
      இத்தகைய பருவ மாற்றங்களை உலக மக்கள் அனைவருமே, இயற்கையான நிகழ்வுகளாக, ஏற்கின்றனரே அன்றி, ஒன்றை உயர்வாகவும்,மற்றொன்றைத் தாழ்வாகவும் கொள்வதில்லை.
      வெய்யிலை சமாளிக்க, வசதியுள்ளவர்கள், ஊட்டி, சிம்லா என சுற்றுலா தலங்களுக்குச் செனறு மகிழ்கின்றனர். இயலாதவர்கள், தங்களால் முடிந்த,



வழிகளில், கோடையின் தாக்கத்தை, வெளியில் செல்ல நேரிடும் போது, குடை கொண்டும்,  நா வறட்சியை, தர்பூசனி, கீரணிப் பழங்களை உண்டும், குளிர் பானங்களை அருந்தியும், குறைத்துக் கொள்கின்றனர். அதே போன்று, குளிர் காலங்களில் கம்பளி உடைகள் அணிந்தும் என, காலத்திற்ப பாதுகாப்புகளை, மேற்கொள்கின்றனர்.
    இந்த பருவ மாற்றங்கள் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அவசியமானதும் கூட என்பதை உணர்ந்துள்ளனர்.
      அதே போன்றுதான், வாழ்வில் சந்திக்கும் வெற்றி, தோல்விகளை, ஏற்கவேண்டும்.
      இந்த வெற்றி, தோல்விகளை, இயல்பானதாக ஏற்கும் மனப்பக்குவம், அனுபவம் மிக்க அரசியல்வாதிகளிடமும்,  விளையாட்டு வீரர்களிடமும், குறிப்பாக, கிரிக்கட் மற்றும் டென்னிஸ் வீரர்களிடமும் காணலாம்.
அனுபவம் மிக்க அரசியல்வாதிகள், தேர்தல்களில் எத்தனைமுறைத் தோற்றாலும், தொண்டர்களை ஊக்குவிக்க, அடுத்த தேர்தலில், ஆட்சியைப் பிடிப்போமென சூளுரைக்கின்றனர்.

அத்தோடுமட்டுமல்லாமல்,, தேர்தலில், சில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதனை, ‘வரலாறு காணாத வெற்றி’ என வர்ணிக்கின்றனர். லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டாலும், அதனை,வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதாக, சொற்சிலம்பமாடி, மூளைச் சலவை செய்து சமாளிக்கின்றனர்.
 கிரிக்கெட் வீரர்களோ, பந்தயத் தொடரில், ஒன்றில் கூட வெற்றி பெறாவிட்டலும், ஊடகங்களுக்கு அளிக்கும் போட்டியில், ‘சென்ற போட்டிகள், எங்கள் தவறுகளை உணர்த்தியுள்ளன. இப்போது எங்கள் முழுக் கவனமும், அத் தவறுகளைக் களைந்து, வரும் போட்டிகளில் வெற்றி பெறுவதில் தான் உள்ளன’ எனக் கம்பீரமாகக் கூறுவர்.
ஆனால், இறைவனைகூட, இரண்டாம் பட்சமாக்கி, கிரிக்கெட் வீரர்களை தெய்வமாக வழிபடும் நம் நாட்டு, ரசிகர்களோ-
வெற்றிக் கோப்பையுடன் வந்தால், விமான நிலையத்திற்கே சென்று மாலைகள் அணிவித்து வரவேற்று, மேள தாளங்கள் முழங்கி, பட்டாசுகள் வெடித்து கோலாகலமாகக் கொண்டாடுவர்.
 தோற்றாலோ, முட்டைகளை வீசியும், வசைமாரிகள் பொழிந்து அவமானப்படுத்துவர்.
வெற்றிகள் யாருடையத் தனிஉடைமையாக தொடர்ந்து இருந்ததாக வரலாறே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த உளவியல் பாங்கு தான், வெற்றிபெற்றால், தலைகால் தெரியாமல் துள்ளுவதும்,தோல்வியடைந்தால், துவண்டு முடங்குவதும் வாடிக்கையாக்கிவிட்டது.

BEING DEFEATED IS OFTEN A TEMPORARY CONDITION. GIVING UP IS WHAT MAKES IT PERMANENT’         MARLYN VAS SAVANT. JOURNALIST.



தோல்விக்கு மிகக் குறைந்த ஆயுட்காலந்தான். ஆனால், அதற்கே பயந்து, முயற்சியைக் கவிட்டு பின்வாங்குவது தான், தோல்வியை சிரஞ்ஜீவீ ஆக்குகிறது. …      பத்திரிகையாளர், மார்லின் வாஸ் ஸாவன்ந்த்.

இதைத்தான் கீதையில் கிருஷ்ணர்,
‘கர்மென்யேவ அதிகாரஸ்தே, மா பலேஷு கதாசன’ என்கிறார்.
உனது கடமையைசெய்யத்தான் உனக்கு அதிகாரம் உள்ளது, அதன் விளைவுகள் நீ எதிர்பார்த்தமாதிரியே அமைய வேண்டுமென்று கோரும் உரிமை உனக்குக் கிடையாது. என்று அறிவுறுத்துகிறார்,
மார்டின் லூதர் கிங்,ஜூனியர், என்பவர், அரசியல் காரணங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்டவர். அவர் சமூக ஆர்வலர் மட்டுமல்ல, சிறந்த சிந்தையாளாராவும் ஆவார்.
அவர் தான் கொலை செய்யப்படும் சில மாதங்களுக்கு முன்’EVEN IF I KNEWTHAT WORLD WOULD GO PIECES, I WOULD STILL PLANT MY APPLE TREE’ என்றார்.
’உலகம் நாளைக்கே அழிந்துவிடுமென்றாலும் கூட, நான் இன்று என்னுடைய ஆப்பிள் செடியைக் கண்டிப்பாக நட்டேத் தீருவேன்’
இதுதான் கீதையின் ‘கடமையைச் செய்வதைப் பற்றிய, கண்ணனின் உபதேசத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டு.         
இதனைப் புரிந்துகொண்டோமானால், நாம் தடுமாற்றம் அடைய மாட்டோம்.
வாழ்க்கையில் முன்னேற/
1, உழைப்பு,
2. தன்னம்பிக்கை, மற்றும்,
3, வெற்றி, தோல்விகளால் பாதிக்காத உளவியல் பாங்கு, அவசியம் என்பதனைக் கண்டோம்.
இவை போதுமா?
இல்லை.
இவற்றுடன்,மேலும் தேவவையானவற்றை சிந்திப்போம்.
                       
                             
                               8
     
 தமிழ்நாடு அரசின் சின்னமாக, ஆலய கோபுரமும், அதன் கீழ்,’சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழிச் சொற்றொடரும், முதலில் இருந்தன.
 இச் சொற்றொடர், பின்னர், ‘உண்மையே வெல்லும்’ எனத் தமிழாக்கம், செய்யப்பட்டது. அதுவும் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ‘உண்மை’ என்ற தமிழ் சொல் நீக்கப்பட்டு, ‘ வாய்மை’ என்ற சொல், பயன்படுத்தப்பட்டது.
இந்த,
‘சத்தியம்’ என்ற வடமொழிச் சொல்,
‘உண்மை’ மற்றும்,


‘வாய்மை’ எனும், இரண்டு, தமிழ் சொற்கள், ஆகிய மூன்றும், ஒரே பொருள் கொண்டதுதாமா?
சத்தியம்- இதற்கு ’நிலையானது, என்றுமே மாற்றத்திற்குட்படாதது’ என்றுதான் பொருள். சான்றாக, ‘ இறைவன்’ இருக்கின்றான் என்பது சத்தியம்
உண்மை- இது, ஒன்றை, ஒரு நிலையில் ’உண்மை’ என உறுதிப்படுத்தி, பின்னர், அதனையே, வேறொரு நிலையில், ‘உண்மை’ அல்ல எனவும், நிருபிக்கிறது.
 சிறு வயதிலியே, ‘சூரியன், தினமும் காலையில் கிழக்கில் உதித்து, மாலையில் மேற்கில் மறைகிறான் என்று கற்கிறோம். கன்னியாகுமரி, சென்றால், ஆதவன், காலையில் கிழக்கேத் தோன்றி, மாலையில் மேற்கில் மறைவதைக் கண்டதும், கற்றது உண்மைதான், என்பது எள்ளத்தனை ஐயத்திற்குமிடமன்றி அறிகிறோம்.
 ஆயினும், விஞ்ஞானம், இது உண்மை அல்ல. சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை என்கிறது.
 பூமி, சூரியனைச் சுற்றுவதால், பூமியில் இரவும் பகலும் நிகழ்கிறது. அப்போது  நிகழும் தோற்றந்தான், இந்த சூரிய உதயமும், அஸ்தமனமுமே அன்றி, இது ‘உண்மை’ அல்ல என்று தக்கச் சான்றுகளுடன் நிருபணம் செய்கிறது.
வாய்மை-
      குறள், இதற்கு,
‘வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொல்’ என்கிறது.
வாய்மை எனும் இச்சொல்லை, பகு பதம் செய்தால், வாய்+மை=என இரு சொற்களாகின்றன..
‘வாய்’ உண்ணுவதற்கும், பேசுவதற்கும் என இரு செயல்களுக்கும் பயன் படுத்துகிறது.
ஆயினும், ‘வாய்ச்சொல்லில் வீரனடி’ என பாரதி. பாடியதிலும், பேசும் திறனற்ற விலங்குகளை, வாயில்லா ஜீவன்கள் என்று அழைப்பதிலும்,, இச் சொல், பேசுதலை .குறிக்கிறதை அறியலாம்.
‘மை’ – இது எழுத்தைக் குறிப்பிடுகிறது.
இரு நாடுகளுக்கிடையே, கையெழுத்தாகும்,ஒப்பந்தத்தை, ஆங்கிலத்தில், THE AGREEMENT WAS INKED BY BOTH THE NATIONS’என்பர்.
வாய்- நாவன்மை,,
மை= எழுத்தாற்றல்,
      இவை இரண்டுமே, பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை மிக்கவை. பல புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கியதை வரலாறு பதிவு செய்துள்ளது. இவற்றினிடையே, போட்டிவைத்தால், நாவன்மை தான் முதலிடத்தைபெறும்.
      ஏனெனில், புத்தகங்கள், படிப்பறிவுள்ளவர்களிடம் மட்டுமே, தாக்கத்தை உண்டாக்கும். அத் தாக்கமும், அநேக நேரங்களில், சிந்திக்கத் தொடங்கினால், வலுவிழந்து, காணாமற்போகிறது.
     ஆனால்,நாவன்மையோ, அவையினரின் உளப்பாங்கினைத் துல்லியமாகக் கணித்து. உணர்ச்சியுடன், குரலில் தக்க ஏற்ற இறக்கங்களை, நடிப்பாற்றலுடன், பின்னிப் பிணைத்து, எதுகை,மோனைகளைக் கவர்ச்சிகரமான சொற்களுக்கு,


ஒப்பனை செய்து, கேட்போரிடம் கொண்டு சேர்க்கும்போது, அவர்களுக்கு எழுச்சியூட்டி,   விளைவுகளைப் பற்றிச் சிந்தித்து சீர்தூக்கும் வாய்ப்பினுக்கு இடமில்லாமல்செய்து, பொங்கி எழ வைத்து அப்போதே, செயல்களில்,- பெரும்பாலும் வன்முறை செயல்களில்- இறங்கிட தூண்டியுள்ள வரலாற்றினைத் தமிழகமே கண்டுள்ளது.
      இந்தி மொழிக்கு எதிரானப் போரட்டத்தின் போது, சொற்பொழிவாளரின் உணர்ச்சி நரம்புகளை சூடேற்றிய ஆவேசப் பேச்சு ஏற்படுத்தியத் தாக்கம், பாதுகாப்புப்  பணியிலிருந்த ஒரு காவலரை, தனது துப்பாக்கியால், எதிரே இருந்த இந்தி விளம்பரப் பலகையைச் சுட்டு, எரிக்க வைத்ததை, அப்போதைய பத்திரிகைகளைப் பார்த்தால், இப்போதும் காணலாம். இதனால் சம்பந்தப்பட்ட காவலரின் வாழ்க்கையே சூன்யயமானது வேறு கதை.
      வாழ்க்கையில் முன்னேற்றம் பெற, தகவல் தொடர்பு [COMMUNICATION] இன்றியமையாததாகும். இது, வாய் மற்றும் எழுத்துமூலம் நடைபெறுகிறது.      எனவே, இந்த தகவல் தொடர்பில், ஒருவரது தேவை, கட்டளை, கருத்து, என எதுவானாலும், உரியவரிடம், தாக்கமேற்படுத்தும் விதத்தில், தெளிவாகக் கொண்டு சேர்த்திட, ஒருவரது பேச்சாற்றல், மற்றும் எழுத்தாற்றல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
      இவற்றில் திறமை மிக்கவர்கள்தான், வரலாற்றில் இடம் பெறுகின்றனர் என்பது கண்கூடு.

மேலாண்மை பதவிகளுக்கான, [MANAGEMENT CADRE] தேர்வுகளில், விண்ணப்பதாரர்களின் ஆற்றலை அளவிட, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இவற்றுடன், இப்போது, அனேக நிறுவனங்கள், [GROUP DISCUSSION] குழு விவாதம் முறையை நடத்துகின்றன.
நிர்வாகத்தில் எழுகின்ற, தொழிலாளர் பிரச்சினை, உற்பத்தியில் பின்னடைவு சந்தைப் படுத்ததிலுள்ள இடர்பாடுகள் என்பன போன்றவற்றைக் கொடுத்து, அவற்றிக்குத், தீர்வு கண்டிடச் சொல்கின்றன.     
      இதன் மூலம், ஒருவரின்,
      1. பிரச்சினையை, துல்லியமாகப் புரிந்து கொள்ளும், திறன்,
      2. அதன் காரணங்களை, அலசி ஆராய்ந்து, தீர்வு காணும் திறமை, மற்றும்,
      3. அவற்றை, நிர்வாகத்தின் மேலிடமும், சம்பந்த்தப் பட்டவர்களிடம், ஏற்றுக்கொள்ளும் வகையில்,எடுத்துரைக்கும் ஆற்றல், ஆகியவை எடை போடப்படுகின்றன.
             தான் வெற்றி பெறுவதோ,அல்லது, தான் மற்றவர்களைவிடப் புத்திசாலி என்பதைப் புலப்படுத்துவதோ, எந்த விவாதத்தின் குறிக்கோள் அல்ல. முன்னேற்றமே அதன் முழு நோக்கம்.
      THE AIM OF ANY DISCUSSION IS NOT FOR WINNING OR ONEUPMANSHIP, BUT PROGRESS.      
      இதனால் தான், எலினார் ரூஸ்வெல்ட்,
      GREAT MINDS DISCUSS IDEAS
      AVARAGE MINDS DISCUSS EVENTS
     

SMALL MINDS DISCUSS PEOPLE,

      மேதைகள் கருத்துக்களை ஆராய்ந்திட விவாதிக்கின்றனர்.
      சராசரி மனிதர்கள் நிகழ்வுகளை விமர்சிக்கின்றனர்,
      பண்பற்றவர்கள் பிறரைப் பற்றிய வீண் அரட்டையில் மூழ்குகின்றனர்,        என்றார்.
     
      எநத மனிதனும் ஒரு தீவு அல்ல. அவன், தன் குடும்பம், சமுகம், அலுவலகம், என எல்லா இடங்களிலும், பல நிலைகளிலுள்ள மக்களோடு, தன் வாழ்நாள் முடியும் வரையில், விருப்பத்துடனும், அநேக சமயங்களில் விருப்பமில்லாமலும், கலந்து வாழ்ந்துதான் தீர வேண்டியிருக்கிறது.
இச் சூழலில்,உரசல்களும், அவற்றின் விளைவாக, விரிசல்களும், மன வேதனைகளும் அனுபவிக்கத் தான் நேரிடுகிறது. முற்றிலும் தவிர்க்க முடியாது. ஏனென்றால், ஒரு தனிப்பட்டவனின் ஆளுமைக்குள் மட்டும் இது அடங்கியதல்ல; சம்பந்தப்பட்ட மற்றவர்களின் குணாதிசயங்களையும் பொருத்தது.
      ஆயினும், மட்டுப் படுத்த முடியும். அதற்கு அடிப்படையாக,மனித மனதின் இயல்புகளைப் பற்றி ஒரளவாவது, தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
      உளவியல் நூல்கள் ,ஒரு குழந்தை, பெற்றோர்களின் சில மரபணுக்களை பிறப்பிலியேக் கொண்டுள்ளன. இவை, ‘அது வளரும் சூழல், பெறும் கல்வி, மூளையின் வளர்ச்சி போன்றவற்றினைப் பொறுத்து, நல்ல பண்புகளாக மேன்மையுறுவதோ, இல்லை, தீய விளைவுகளை ஏற்பத்துமளவிற்குக் கீழ்மையுறுவதாகவோ, அல்லது, இவை இரண்டிற்குமிடப்பட்ட நிலைமையிலிருப்பது, என  வேறுபடுகிறது’ என்று விவரிக்கிறது.
 தவிரவும் ஒரே மனிதனின் மன நிலை, எல்லா நேரங்களிலும் மாற்றமில்லாமல் இருப்பதுமில்லை. பல்வேறு காரணங்களால். இயல்பாக அமைதியான சுபாவமுள்ளவர், சில சமயங்களில், எல்லோர் மீதும் சீறி விழுவதும், அதேபோல், முன்கோப சுபாவமுடையவர்கள், பெரிய தவறு செய்தாலும், பொறுமையுடன் இருப்பதையும் கண்டுள்ளோம்.
 இந்த விசித்திர நிலைகள்தான், வாழ்க்கைக்கே, பல சமயங்களில் சுவை கூட்டுகிறது என்பது தான் விந்தை.
     
      அந்த மேற்பார்வையாளர், தன் கீழ் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும், இனிமையாகப் பழகுவார். அவர்களும் அவரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
      ஒரு நாள், அவர் ஒரு முக்கியமான வேலையை, அன்றுக்குள் முடிக்கும்படி, கீழ்படிதலுக்கு ஒரு எடுத்துக் காட்டாகத் திகழும் ‘அ’ என்பவரிடம் விட்டிருந்தார். ‘அ’ வும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை,சிறப்பாக, குறித்த கால அளவுக்குள் செய்து முடிப்பதில் திறமைமிக்கவர் எனப் பாராட்டப்பட்டவர்தான்.
     



அன்று பணி நேரம் முடியுமுன்பு, மேற்பார்வையாளர், ‘அ’ கொடுத்த பொறுப்பைச் சிறப்பாகச் செய்து முடித்திருப்பார், என்ற நம்பிக்கையுடன் வர, பெருத்த ஏமாற்றம்.பணியும் முடியவில்லை; ‘அ’வையும் காணவில்லை.
      விசாரித்ததில், ‘அ’ அவர் வீட்டிலிருந்து ஏதோ தகவல் வந்ததையடுத்து, யாரிடமும்சொல்லாமல் சென்றதாக, உடன் பணியாற்றுபவர்கள் கூறினர்.    மேற்பார்வையாளர், இதனை,‘அ’ தன்னை அவமதிதுவிட்டதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகவும், பொருள் கொண்டு கோபத்தில், மறுநாள், ‘அ’ வுக்கு தக்கத் தண்டனை கொடுக்கத் தீர்மானித்தார்.
      மறு நாள் காலை பணிக்கு வந்த ‘அ’விடம் ‘மனசுல என்னடா நினைச்சுட்டிருக்கே. கொடுத்த வேலையயும் செய்யல;  எங்கிட்ட பெர்மிஷன் வாங்காம உன் இஷ்டப்படி போயிட்டே. இது என்ன உன் மாமியார் வீடா? எனக் கண்டபடி ஊழியர்கள் முன் திட்டினார்.
      ’அ’ வோ, ‘டேய், நீயும் என்ன மாதிரி  முதலாளிகிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கறவந்தான். மற்ந்துடாதே. எதோ நீ தான் இந்த கம்பனி சொந்ததக்காரன் மாதிரி திட்றே’ என்று வெடித்ததுடன், அவரை அடிக்க கையில் ஒரு சுத்தியை சுழற்றபடியே பாயவும். மற்ற ஊழியர்கள் குறுக்கீட்டால், மேற்பார்வையாளர் உயிர் தப்பினார்.
      இவ்வளவு விபரீதத்திற்கும் காரணம், பின்னர் தான் விளங்கியது.

      ’அ’ விற்கு, வீட்டில் நிம்மதி என்பதே கிடையாது. சிறு வயதிலியே ஒரு விபத்தில், பெற்றோர்களை இழக்க நேரிட்டது. அனாதையான ‘அ’ வை, விதவை சித்திதான் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து, ஆளாக்கினார். அதனால், ‘அ’ வுக்கு சித்தியின் மீது நன்றி உணர்வும், சித்தியின் கடைசீக் காலம்வரை தன்னுடனே வைத்துக் காப்பாற்றவும் முடிவு செய்தார்.
 ஆனால், வந்த மனைவியோ, ‘பெத்த அம்மாவா, சித்தி தானே, கையிலே நாலு காசக் கொடுத்து துரத்துங்க’ என வற்புறுத்தினாள். ஆனால் ‘அ’ சம்மதிக்கவில்லை.
      இதனால், தினமும் வீட்டில் ரகளை. அன்று சித்திக்கும் மனைவிக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட, கைகளில் அரிவாளையும், உலக்கையையும் ஏந்தி, துரத்துவதாகத் தகவல் வந்ததால், ‘அ’ அதிகாரியிடம் கூட சொல்லிக் கொண்டு செல்லமுடியாத நிலை.
      ஒரு வழியாக, ஊரார் தலையீட்டால், நிலமையை சமாளிப்பதிற்குள்,, இரவுத் தூக்கமே இல்லாமல் போயிற்று. இதற்கு என்னதான் தீர்வு’ என்ற குழப்பம்.
     அந் நிலையிலும், தன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும்  மேற்பார்வையாளரிடம், ’அனுமதி பெறாமல் வந்தது தவறு, நிலமையைச் சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும்’ பொறுப்பு உணர்ந்து, வேலைக்கு முன்னாதாகவே வந்தார்.
 ஆனால் அதிகாரி, தான் இத்தனை ஆண்டுகள் விசுவாசத்துடன் பணியாற்றியதையும் மறந்து, மற்ற ஊழியர்கள் முன் கேவலமாகப் பேசவும், ஏற்கனவே வீட்டு நிலைமையால், மன உளைச்சலில், நிம்மதியை இழந்து, தவிக்கும் ‘அ’ வால், இந்த அவமானத்தைப் பொறுக்கமுடியவில்லை.




தன் மனைவி, சித்தி ஆகியோரைத் திருத்த முடியாத தன் இயலாமையைனால், தன் மீதே எழுந்த கோபத்தை, மேலதிகாரியிடம் திருப்பி வடிகால் கண்டார்.
      மேற்பார்வையாளரும், இத்தனை ஆண்டுகள் தன் கட்டளைகளுக்கெல்லாம், சிறு முணுமுணுப்புமின்றி சிறப்பாக பணியாற்றிய ‘அ’, தன்னிடம் சொல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் இருக்கவேண்டும் என்பதை புரிந்து கொண்டு, ‘அ’ விடம் கனிவாக விசாரிக்கத் தவறினார்.
      பெரும்பாலான தொழிலாளர்களுக்கு, போதிய வருமானமின்மை, வீட்டிலிலுள்ளோருக்கு, உடல் நலமின்மை, மனைவி தாயார் சண்டை  போன்ற பல்வேறு சூழல்களால், நிம்மதியே இல்லாத குடும்பச் சூழல்.
 இதனால் தான் பலர் குடிப் பழக்கத்திற்குப் பலியாக நேருகிறது. அதே மன நிலையில், பணிக்கு வரும்போது, ஏற்படும் சிறு உரசல் கூட, விரும்பத்தகாத விளைவுகளுக்கு வித்தாகின்றன.
      இதுபோன்ற நிலைமைகள் உருவாவதைத் தடுக்க, சில நிறுவனங்கள், [NEUTRALISATION],  சமனப் படுத்தல் என்ற முறையை அறிமுகப் படுத்தியுள்ளன.
      பணிக்கு தொழிலாளர்கள் வந்ததும், மேற்பார்வையாளர்கள் தொழிலாளர்களை முதலில் சில நிமிடங்கள், முந்தைய நாள் தொலைக் காட்சி சீரியல்கள், சர்ச்சைக்குள்ளாகாத ஊடகச் செய்திகள், திரைப்படங்கள் போன்றவற்றைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுத்தி,  அவர்களது மன நிலைமையை அமைதிகுள்ளாக்கிப் பின்னர் தான், அவர்களுக்கான பணிகளைத் தர வேண்டும், என்பது தான் இம்முறை
     இதனால், சம்பந்த்ப்பட்ட அனைவரின் மனநிலை லேசாகி, ஒரு தோழமை சூழல் உருவாகும்.
      பல நிறுவனங்கள் அதிகாரி,தொழிலாளர், என்ற வேற்றுமை சுழலை, நீக்கி, ஒரே லட்சியத்துடன், பல்வேறு பணிகளை, ஒரு குழுவாக பணியாற்றுகிறோம் என்ற உணர்வை, அவர்களிடையே ஏற்படுத்தத்தான், அனைவருக்கும், ஒரே சீருடை, ஒரே உணவருந்துமிடம், பேதமின்றி வரிசையில் நிற்பது போன்ற ஆரோக்கியமான நடைமுறைகளைப் புகுத்தியுள்ளனர்.
      குறள்,
      ’குறிப்பின் குறிப்பு உணராயின் உறுப்பினுள்
      என்ன பயத்தவோ கண்? ,
      ஒருவனது கண்கள் முகம் ஆகியவற்றைப் பார்த்தே, அவரது, மனதை அறிந்து கொள்ளமுடியாதவனுக்கு கண்கள் எதற்கு? என சாடுகிறது.
      இது, எல்லா இடத்திற்கும் பொருந்தும்.
 அனேக குடும்பங்களில், மனைவி, வெளியிலிருந்து திரும்பும், தன் கணவரின் முகத்தைப் பார்த்தே, அதற்கேற்ப நடந்துகொள்வது கண்கூடு தவிரவும், கணவர் கோபமாகவோ, வருத்தத்துடனோ இருப்பதை, உணர்ந்ததும், குழந்தைகளையும், ‘ அப்பா கோபமா. இருக்கார், கிட்ட போகாதீங்க’ என எச்சரிக்கவும் செய்வர்.
      கூட்டாக இணந்து செயலாற்ற நேரிடும்பொதேல்லாம், சம்பந்தபட்டவர்கள் வெவ்வேறு மன இயல்புகளையும், ஆற்றலும் உள்ளவர்களாய் இருப்பது சகஜம்.



அந்நிலையில் அப்பணி, வெற்றி அடைந்திட, பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து, ஒரு வல்லுநரின் நூல்,
      ‘TEAMWORK MEANS THAT WE SHARE A COMMON IDEAL AND EMBRACE A COMMON GOAL.
      REGARDLESS OF OUR DIFFERENCES, WE SERVE SHOULDER TO SHOULDER, CONFIDENT IN ONE ANOTHER’S FAITH, TRUST, COMMITMENT IN THE END.

      TEAMWORK CAN BE SUMMED UP IN FIVE SHORT WORDS,
      WE
      BELIEVE
      IN
      EACH
      OTHER.

      பணிக்குழுவின் நோக்கமே,
      நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளை புறந்தள்ளி, ஒவ்வொருவரும் மற்றவரின் ஈடுபாட்டிலும், திறைமையிலும் முழு நம்பிக்கை வைத்து, தோளோடு தோளோடு நின்று , லட்சியத்தை அடைந்தே தீருவோம், என்ற மன உறுதியுடன் இணைந்து உழைப்பதே ஆகும்.
      பரஸ்பர நம்பிக்கையே, பணிக் குழுவின் தாரக மந்திரமாகும்.

      இக்கட்டத்தில், நம்மிடையே ஊன்றிவிட்ட மிகப் பெரியத் தவறினைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
      குடும்பத்தில், பெரியவர்களே,  குழந்தையை, அதன் ஒத்த வயதுள்ள மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு, ‘நீ எதுக்குமே லாயக்கில்லை, தண்டம்’ என்று அடிக்கடி ஏசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர். இதனால் அக் குழந்தையின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார்கள், என்பதை ஏனோ உணர்வதில்லை.
      இந்த விஷ வித்து, குடும்ப பெரியவர்களிடம் வெறுப்பையும், அவர்கள் ஒப்பிட்ட குழந்தைகள் மீது பொறாமையும், அதன் விளைவாக பழி வாங்கும் மனப்பான்மையையும் உருவாக்குகின்றன. பின்னர் இதுவே சமுகத்தையே வெறுக்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டு செல்கிறது.
      நாட்டையே உலுக்கிய பல கொலைகளுகளுக்கே, பெரியவர்களின் இந்த தவறான செயல்களே காரணமென்பது புலனாகியது. 
      பணியிடங்களிலும், சில அதிகாரிகள், தங்கள் கீழ் வேலை செய்பவர்களில், சிலரை, ‘எந்த வேலைக்கும் லாயிகில்லை, சோம்பேறி’ என முத்திரை குத்தி அவமதிக்கின்றனர்.
 பல இடங்களில் நேர்ந்த விபத்துகளை ஆராய்ந்ததில். இம்மாதிரி அவமதிக்கப்பட்டவர்களின் பழி வாங்கும் போக்கே பின்னணியில் இருந்தது தெரிய வந்தது.
      ஒரு அடிப்படை உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம்.
     


இறைவனின் படைப்பினில், ’தகுதி அற்றது, வீண்’ என எதுவுமே இல்லை.

 இது மனிதனுள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொன்றின் திறன், பயன்பாடு விழுக்காடு அளவுகளில் வேறுபடலாமேத் தவிர, அனைத்துமே தேவையானதே.
      நமது அன்றாட செயல்களை, கவனித்தோமானால், இதனை நன்கு அறியலாம்.
      சமையலுக்கு, கறிகாய்களை, நறுக்கும்போது, ஒதுக்கப்படும் காய்த் தோல்கள், அழுகிய பகுதிகளை, மாடுகளுக்குத் தீவனமாகவும்,  தாவரங்களுக்கு உரமாகவும், பயன்படுத்தப்படுகின்றன.
      கிராமங்களில், அறுவடை செய்யப்பட்ட வயல்களில், ‘கிடை’ அடைப்பார்கள். ஒரு வேலியைச் சுற்றிலும் அமைத்து, அதனுள்ளே, இரவு நேரங்களில், ஆடு மாடுகளை அடைத்து வைப்பர். அவற்றின் கழிவுகள், வயலுக்கு உரமாக்குவர்.
      நீர் நிலைகளிலுள்ள அழுக்குகள், மீன்களுக்கு உணவாகுதுடன், நீரையும் சுத்தீகரிக்கிறது.
 வாழை மரத்தின், இலை, பூ, காய், பழம், மட்டை, தண்டு , நார் என அனைத்தையுமே பலவிதங்களில் உபயோகப்படுத்துகிறோம்.
 தூக்கி எறியப்படும், பிளாஸ்டிக் பொருட்கள்கூட, இப்போது, சாலைகள் அமைத்திட உதவுகின்றன.
      திட, திரவ மேலாண்மைக்கென்றே, அமைப்புகள், தோற்றுவிக்கப்பட்டிருப்பதே, தகுதியற்ற பொருள் என்று எதுவுமே இல்லை என்பதை உணர்த்தும்போது, உயர்திணையான, மனித இனத்தில் மட்டும், ஒரு சிலரை, ‘தண்டம்,’ என ஒதுக்குவது, அவ்வாறு, முத்திரை குத்துபவர்களின் அறிவுக்கே இழுக்கு தேடித் தருகிறது, என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
      மேலாண்மைத் துறையிலுள்ளவர்களுக்கு, குறிப்பாக, மனித வளத்தில், [MANAGEMENT OF HUMAN RESOURCES], நம் வள்ளுவர், கற்பிக்கும் குறளில்
      ’இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
      அதனை அவன்கண் விடல்’
 வழிகாட்டலைக் காணலாம்..இக் குறலிலுள்ள ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் கொண்டது.
      ஒரு சான்றுடன் இதனை அறிவோம்.
      உற்பத்தித்துறை மேலாளருக்கு [PRODUCTION MANAGER] உற்பத்திக்குத் தேவையான கச்சா பொருளை [RAW MATERIAL] அண்டை மாநிலத்திலிருந்து இரண்டொரு நாட்களில் கொண்டுவர வேண்டியக் கட்டாயம்.
இப்போது,குறளைப் பின்பற்றி,இப் பணியை எப்படிவெற்றிகரமாக செய்து முடிப்பது, என்பதனைக் காண்போம்.
     
      இதனை = பணி [கச்சாப் பொருளத் தருவித்தல்]
      இதனால் = [இப் பணியை  வெற்றிகரமாக முடிக்க தேவையானவை]                          உடனேயே பயணிக்கவும், ஆங்கிலத்துடன், அண்டை மாநில மொழியில் சரளமாக உரையாடும் ஆற்றலுடன், சரக்குப் போக்குவரத்து துறை பற்றிய அனுபவமும், இடையில் சந்த்திக்க நேரும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் சமயோஜித புத்தியும்,திறனும், மிக அவசியம்.



அத்துடன், அதிகாரியின் திட்டத்தில், நடைமுறைக்கு ஒத்து வராதது ஏதேனுமிருப்பின், அதனை பக்குவமாகச் சுட்டிக் காட்டும் துணிவும் திறமையும் விரும்பத் தக்க கூடுதல் அம்சங்களாகும்.
இவற்றுடன், உடல் வலிவும் பெற்றிருத்தல் வேண்டும்.
                      ,
      இவன் முடிக்கும் என்றுஆய்ந்து=தன்னிடம் பணியாற்றுபவர்களின் நிறை,    குறைகளைத்  துல்லியமாக அறிந்து வைத்திருந்து, அவர்களுள், யார், இப் பணியை, வெற்றிகரமாகக், கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கும், இவ்வாற்றல்கள் உள்ளவன் என்பதனை ஆராய்ந்து, அவன், ’இவன் தான்,’ என ஒருவரை அடையாளம் கண்டு, ஒருவேளை எதிர்பாராத சூழலில், ‘இவன்’ செல்ல முடியாத நிலை ஏற்படுமானால். மாற்றாக, தகுதியான வேறு ஒருவனையும், தேர்வு செய்து, தயார் நிலையில் வைத்து,[ராணுவப் போர்த் திட்டங்களில் பின்பற்றப்படும் முறையில்]
அதனை= அப் பணியினை
அவன் கண்=அவனிடமே
விடல்= ஒப்படைத்தல்.
இத்தனைச் சொற்களுள் ‘விடல்’ என்பது, மிக ஆழ்ந்த தனித்துவத்துடன் கூடிய பொருள் பொருந்தியது.
அவனிடம், தன் தேவைகளை, என்ன பொருள், பொருளின் அளவு, எத்தனை நாட்களுக்குள் கொண்டுவந்து சேர்த்திட வேண்டும், என்ற விவரங்களைத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் சொல்லுவதுடன், அவற்றை சரியாகப் புரிந்து கொண்டுள்ளானா என்பதனையும், தன் திட்டத்தில், தவறிருந்தால், தயங்காமல் சொல்ல அனுமதியையும் தந்து, உறுதி செய்து கொண்டபின் தான், ‘அப் பணியை நிறைவேற்றுவது அவன்  முழு பொறுப்பு என்று ‘விட்டு விட வேண்டும்’.
ஆங்கிலத்தில், இதனை, ‘LEAVE THE EXECUTION OFTHIS OPERATION TO HIM’ என்பர்.
 அப்போது தான் அவனுக்கு, அதிகாரி தன்னிடம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றி அவரின் பாராட்டைப் பெற்றே தீருவது என்ற உறுதியுடன், ஆர்வத்துடனும், துடிப்புடனும் செய்து முடிப்பான்.  
       அதனை விடுத்து, சில அதிகாரிகள், அடிக்கடி,அவனிடம் எவ்வளவு தூரம் வேலை நடந்திருக்கிறது என விசாரணை செய்வதும், நடந்த வேலை குறித்து அதிருப்தியை வெளிப் படுத்துவதும், குறித்த காலத்திற்குள், எஞ்சிய வேலைகளைச் செய்ய முடியுமா என ஐயத்தை எழுப்புவதும், அவனுடையத் தன்னம்பிக்கையைக் குலைத்து, அவனைத் தளர்வடையச் செய்யும் என்பதனை உணர்வதில்லை.
 இது மிகவும் தவறானது. 
       இதற்கும் வழிகாட்டிட வள்ளுவர் மேலும்,   
      ’தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
      தீரா இடும்பை தரும்’



என்ற குறளினையும் அருளியுள்ளார்.
      ஒருவரை பற்றி நன்கு ஆராய்ந்து தெரிந்து புரிந்து கொண்டபின் தான், அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நம்பியவர் மேது சந்தேகம் கொள்வது கூடாது. இல்லையேல் துன்பந்தான் நேரும்.

      இதனையே, அமெரிக்காவின் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன்,
      ‘BE COURTEOUS TO ALL, BUT INTIMATE WITH VERY FEW, AND LET THOSE BE ALSO WELL TRIED BEFORE YOUGIVE THEM YOUR CONFIDENCE.’
 ’ எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்து கொள். ஆனால் அவர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கை வைக்காதே, அவர்களுள், நம்பிக்கைகுரியச் மிகச் சிலரை* மட்டும் அடையாளம் காண், அவர்களும் உன் நம்பிக்கைகுரியவர் தானா என்பதை நன்கு சோதித்து, பின் தான் அவர்களிடம் நீ மனம் திறக்கலாம்’ என எச்சரிக்கிறார்.
வள்ளுவனின், ‘இதனை இவன் முடிக்கும்….’ குறள் மெய்பட்டிருப்பதை, வரலாற்றில், நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்த நிகழ்வுகள் இரண்டினைக் காணலாம்.
1971ல் ‘பங்களா தேஷ்’ எனும் ஒரு புதிய நாட்டையே உருவாக்கி, உலகத்தையேஉலகையபிரமிக்க வைத்தார், நமது முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள்.
     கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி, பிரதமரை மனமாரப் பாராட்டிய, அப்போதைய, பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான, திரு, அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், ‘PRIME MINISTERJI, THIS WORLD HAS SEEN MANY LEADERS, WHO HAVE CREATED HISTORY. BUT THIS THE  FIRST TIME, IT IS SEEING, A GREAT LEADER, WHO CREATED GEOGRAPHY, IN YOU’ என, அச் சாதனையை வர்ணித்தார்.
‘பிரதமர் அவர்களே. இந்த உலகம் வரலாறு படைத்த, பல தலைவர்களைக் கண்டுள்ளது. ஆனால், இப்பொதுதான் முதல் முறையாக, புதிய பூகோளத்தை உருவாக்கிய தலைவரை காண்கிறது.’

இம் மாபெரும் வெற்றிக்கு, ஒரு சுவையான பின்னணி உள்ளது.
1947ல்,மத அடிப்படையில் உருவான பாகிஸ்தான், பூகோள ரீதியாக, தொடர்ச்சியான ஒரே நிலப்பரப்பினைக் கொண்டதல்ல.
 இரண்டு பகுதிகளாக. கிழக்கில், ஒரு துண்டு கிழக்கு பாகிஸ்தான் என்றும், ஆயிரக் கணக்கான கிலோமீட்டருள்ள இந்திய நிலப் பரப்பினைத் தாண்டி, மேற்கில் இருந்த வங்காளத்தை இரண்டாகத் துண்டித்துத் தோற்றுவிக்கப்பட்ட பகுதியை, மேற்கு பாகிஸ்தானாகவும் உள்ளடக்கியது.
இந்த இரு பகுதிகளைப் பிரித்தது, இவற்றிடையே இருந்த இந்திய நிலப் பரப்பு மட்டுமல்ல. மொழி, இலக்கியம், சிந்தனை கலாசாரம் என முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளுந்தான்.
 இந்த அடிப்படை முரண்பாடுகள், இரு பகுதினிரிடையேயும், பிளவிற்கு வித்திட்டன. கிழக்கிலிருந்து, இரு பகுதிகளையும் ஆண்ட, மத்திய அரசு, மேற்கு



பாகிஸ்தான் மக்களை, இரண்டாந்தர குடிகளாக நடத்தியது., இப் பிளவிற்கு உரமூட்டியது.
அப்போது, ஆட்சியிலிருந்த ஜனநாயக அரசிடமிருந்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
 ராணுவம், மேற்கு பாகிஸ்தானியரைக் கொடுமையாகத் துன்புறுத்தவே, அம் மக்கள், புரட்சியில் இறங்கினர். அவர்களுக்கு, முஜ்பிர் ரஹ்மான், தலைமை தாங்கி, ‘ஸோனார் பங்களாதேஷ், [பொன் பங்களா தேசம்] உருவாக்கிட விடுதலை போரை நடத்தினார். இந்த விடுதலை போருக்கு, இந்தியாவும் மறைமுகமாக, ராணுவ பயிற்சி அளித்தும், ஆயுதங்கள் தந்தும் உதவியது
 பாகிஸ்தானை ஆண்ட யாஹ்யா கான் என்ற ராணுவ அதிகாரி, முஜிபிர் ரஹ்மானை சிறையிலடைத்து, அவரை, சித்ரவதைக்குமுள்ளாக்கினான். அவருக்கு மரண தண்டனை விதித்து, அவரையே, அவரது  சவக்குழியையும் தோண்ட வைத்தான்.
மக்கள் எரிமலையாகப் பொங்கி எழ, அவர்களை அடக்க ராணுவ உதவியுடன், இரக்கமற்ற முறைகளில், அப்பாவி மக்களக் கொன்று குவித்தான். மக்கள் உயிர் பிழைக்க, கூட்டம் கூட்டமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இந்த அகதிகளின் வருகை லட்சக்கணக்காகப் பெருகவே, இந்தியா பலவிதங்களிலும், அளவு மீறிய பாதிப்புகளுக்குள்ளாகி, பல முனைகளிகளும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்திரா காந்தி, உலகின் வல்லரசுகளை, நேரில் சந்தித்து, பாகிஸ்தானை, அமைதியான வழியில் தீர்வு காண வற்புறுத்த மன்றாடினார். ரஷ்யாவைத் தவிர மற்றநாடுகள் மறுத்தன.
வெளிப் படையாகவே, ராணுவத்தின் துணை கொண்டு, மேற்கு பாகிஸ்தானை விடுவித்து, பங்களா தேஷ் எனும் புதிய நாட்டை அமைத்திட, இந்திரா திட்டமிட்டார்.
அப்போது, இந்தியாவின் ராணுவத் தளபதியாக இருந்த ஸாம் மானக்‌ஷாவை அழைத்து,  மிகக் குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள், மேற்கு பாகிஸ்தானை, இஸ்லாமாபாத்தின் பிடியிலிருந்து விடுவித்திட ஆணையிட்டார்.
மானக்‌ஷா, பாகிஸ்தானுக்கு அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகளின் ராணுவ ஆதரவு இருப்பதால்,  அவைகளின் வான், கடல், மற்றும் தரை வழி எதிர்ப்புகளை வெற்றிகரமாக முறியடிக்க, வான்படை, கடற்படை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பல முனைகளில் தாக்குதல் நடத்தவேண்டும். அதற்கேற்ற, ஒரு திட்டம் வகுக்க வேண்டும். பிறகு தேவையான படைகளையும், திட்டமிட்ட இடங்களில் கொண்டு சேர்ப்பது போன்ற  ஏற்பாடுகளைச்   செய்து முடிக்க
 வேண்டும். இவற்றையெல்லாம் செய்திட, பிரதமர் தந்த கால அவகாசம் போதாது என்றும் விரிவாக எடுத்துக் கூறி, தேவையான கால அவகாசத்தையும், பிற உதவிகளையும் முன்வைத்தார்.
பிரதமர் மறுத்ததும், அவர் இருக்கையிலிருந்து எழுந்து, மிடுக்குடன் ஒரு ராணுவ ‘சல்யுட்’ செய்து,மிகப் பணிவுடன், ‘மாண்புமிகு பிரதமர் அவர்களே, இந்தியாவிற்கு,ஒரு புதிய ராணுவ தளபதியை நியமித்திட வேண்டுகிறேன்’ எனக் கம்பீரமாக பதிலளித்துவிட்டு, அறையை விட்டு வெளியேறினார்.


முதலில் திகைத்த பிரதமர், அவரது துணிவை வியந்து, அழைத்தார்.
அவருடன் கைகுலுக்கிப் பாராட்டி,அவர் கேட்ட கால அவகாசத்தையும் பிற உதவிகளையும் வழங்கிடச் சம்மத்தித்தார்.
தன் மீது பிரதமர் வைத்த நம்பிக்கைதான், மானக்‌ஷாவை, வெற்றியை  அடைந்தே தீருவது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, இறங்கத் தூண்டியது
அமெரிக்கா, தனது போர்கப்பலை இந்தியாவின் எல்லைக்கருகில் நிறுத்தி ஒரு பக்கம் மிரட்டியது, வேறு சில எதிரி நாடுகள் அசாம் ,திபேத், போன்ற இடங்களில் தங்களது பெரும் ராணுவத்தை குவித்து உறுமின. இவை போதாதென்று, உள்நாட்டிலியே, சிலர் சதிவேலையில் இறங்கி, காலை வாருவதில்முழு முனைப்புடன் இறங்கினர்,
 எதற்கும் அஞ்சாமல் மானக்‌ஷா, தனது திறைமையான திட்டத்தினால், மேற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியைத் தனது லட்சக்கணக்கானப் படைகளுடன் சரணடைய வைத்து, உலகையே வியப்பிலாழ்த்தினார்.
தங்க பங்களா தேசம் உருவானது.
பிரதமர் இந்திராவை உலகமே பாராட்டியது.
இந்தியாவின் முதல் FIELD MAARSHALL ஆக ஸாம் மானக்‌ஷா பதவி உயர்வு பெற்றார்.    

      இந்திராதான், 18-05-1974 அன்று, ’புன்னகைக்கும் புத்தர்’ என பெயரிடப்பட்ட ரகசிய பாதுகாப்பு திட்டப்படி,[OPERATION SMILING BUDDHA], பொக்ரானில், இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி, உலகையேஇந்தியாவின் பக்கம் திரும்ப  வைத்தார்.
      இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியாவின் அனைத்து ரகசியச் செயல்களையும் கண்காணிப்பதில் தீவிரமாக இறங்கியது.
      24மணி நேரமும், விண்வெளியிலிருந்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் உளவு பார்த்திட, சக்தி வாய்ந்த நுண்ணிய புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்ட விண்கலத்தை ஏவியது. அதன் விஞ்ஞானப் பார்வையிலிருந்து, உலகின் எந்த முலையில் எது நடந்தாலும், தப்பாமல், அமெரிக்காவிலுள்ள ராணுவ தளத்தில் அதே விநாடியில் பதிவாகின.
      இப்படி அனைத்து நடவடிக்கைகள் செய்தும்---
      ’எப்படி நமக்குத் தெரியாமல், இந்தியாவால் வெற்றிகரமாக நடத்த முடிந்தது?’
என்று அமெரிக்கா முடியை பிய்த்துக் கொள்ள,
      அண்டை எதிரி நாடுகள், பொறாமையால் குமுற,
      நம் நட்டிற்குப் போட்டி வல்லரசாக முன்னேறி வரும் நாடுகள், இந்தியாவின் ஆற்றலைக் கண்டு கலங்க,
      இத்தகைய அரும் பெரும் சாதனைய நிகழ்த்தி, தாய்நாட்டையும்,குறிப்பாக, உலகத் தமிழர்கள் அனைவரையுமே, பெருமிதத்துடன், தலைநிமிர்த்தி, கம்பீரமாக  ராஜ நடை போட வைத்தவர், தான் பிறந்த ராமேசுவரத்திற்கு, வான் புகழ் ஈட்டித் தந்த, எளிமையே உருவான, மக்களின் பேரன்பையும் பெற்ற, திரு. அப்துல் கலாம் அவர்கள் தான்.
     


நாட்டின் மூலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்த இவரால் மட்டும் எப்படி உலக விஞ்ஞானிகளே வியக்குமளவுக்கு உயர முடிந்தது?
      தன்னிடம் படிக்கும் மாணவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார், தன் கடமையில் அர்ப்பணிப்பு உணர்வும், மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திலும் அக்கறையுள்ள ஆசிரியர் திரு சுப்ரமணியர்.
 அங்கு பறவை பறந்திட அதன் உடலின் உறுப்புகள் எப்படி உதவுகின்றன என்பதை விரிவாகவும் தெளிவாகவும் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்லி, ரைட் சகோதரர்கள், விமானத்தை வடிவமைக்கும் கனவிற்கு வித்திட்டது, பறவைதான், என்றதும், சிறுவன் அப்துல் கலாம், தான் ‘ எதிர்காலத்தில், விமான இயல் துறையில், [AERO NAUTICAL] பயின்று, சாதனை நிகழ்த்த வேண்டும், எனக் கனவு கண்டான்.
 அக் கனவிற்குத், அவனுள் இருந்த தன்னம்பிக்கை துணை நிற்க, கடுமையாக உழைத்தான். படிப்பில் தீவிரக் கவனம் செலுத்தினான். செலவைச் சரிகட்ட, பொழுது புலருமுன்பே விழித்து, நாளிதழ்களை வீடுகளில் போடும் பணியை மேற்கொண்டான்.
      குரோம்பெட்டையிலிருந்த M.I.T. பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும், சேர, பணம் கிடைக்கவில்லை. அவரின் சகோதரி, தன் கை வளையல்களைத் தந்து உதவினார்.   
      கொண்ட லட்சியத்தை அடைந்திட, ஊண் உறக்கத்தினைத் துறந்து, கருமமே கண்ணாயினார்.
      பாபா அணுசக்தி மையத்தில் சேர்ந்தார். எல்லா இளைஞர்களைப் போல, நல்ல வேலையில் கணிசமான சம்பளம் கிடைத்ததும், திருமணம் செய்து கொள்ளாமல், ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிடக் கனவு கண்டார். உழைத்தார்.
      ஏவு கணைகள், விண்கலங்கள், அணு ஆயுதங்கள், என நாட்டின் பாதுகாப்பிற்கான அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தார். அத்துடன் தன் கீழ் பணியாற்றுபவர்களையும் ஊக்குவித்தார். அவர்களின் சாதனைகளப் பாராட்டி, வெளியுலகத்திற்கும் அவர்களை அறிமுகம் செய்வித்தார்.
      அவருடைய ‘அக்கனி சிறகுகள்’ எனும் நூலில், அவர்களி ஆற்றலைப் புகழ்ந்துள்ளதைக் காணலாம்.
தான் நிகழ்த்திய சாதனைகளைக் குறித்து பெருமையுறுவதை விட, தன் கீழ் பணியாற்றுபவர்களின் சாதனைகளையே பாராட்டி ஊக்குவிப்பவனே ஒரு சிறந்த தலைவன்’ என்ற கூற்றிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
      தவிரவும், தனக்கென ஒரு தொண்டர் படையை அமைத்துக் கொள்வதில் ஈடுபடாமல், தனக்குப் பிறகுத் திறமையுடன் நடத்திட, தகுதியுள்ளவர்களை அடையாளம் கண்டு உரிய பயிற்சி அளித்து இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்குகிறாரோ, அவர் தான் நல்ல தலைவராவர், என்று தலைமைப் பண்புக்கான நூல் கூறுகின்றது.   
      நாட்டின் உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ அவரைத் தேடி வந்தது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் அவரைக்  குடியரசு தலைவர் இருக்கையில் அமர்த்தின. நாடே பயனுற்றது.  
     


2020ல் நம் நாடு அனைத்து துறைகளிலும், ஒரு வல்லரசாகத் திகழ்ந்திட திட்டம் வகுத்தார். அதனை நிறைவேற்றும் பொறுப்பினை, ஏற்றிட இளஞர்களிடையே உரையாற்றி எழுச்சியூட்டி, அவர்களைக் கனவு காணவும், அதனை மெய்ப்படுத்திட கடுமையாக உழைத்திடவும், வலியுறுத்தினார்.

      இன்றும் அயராது, நாடு முழுவதிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று, மாணவர்களிடையே உரையாற்றி, வளமான இந்தியாவை உருவாக்கிடும் பொறுப்பினை அவர்களிடையேத்  தோற்றுவிக்கிறார்.
      நம் நாட்டு இளைய தலைமுறைக்குக் கலங்கரை ஒளி விளக்காகத் திகழ்கிறார்.
      மனிதனின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவைகள்.
1.       தன்னம்பிக்கை,
2.       கடுமையான உழைப்பு,
3.       ஒருவரிடம் ஒளிந்திருக்கும் ஆற்றலை இனம் கண்டு, அதன் ஒளிர்ந்திடச் செய்யும்  தலைமையேற்கும் பண்புகள்  [LEADAESHIP QUALITIES]
ஆகியன இருந்தால் போதுமா?

      ஆராய்வோம்.

                                       9

            முன்னேற்றம் என்றால் என்ன?
            நாட்டில், முந்தைய ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 1000 மாக இருந்து, நடப்பு ஆண்டில், இறப்பு 1100 ஆக உயர்ந்திருந்தால், அதனை, முன்னேற்றமாகக் கருத முடியாதல்லவா.
            எண்ணிக்கையில் ஏற்றம், ஒரு தனிப்பட்ட மனிதனின், நாட்டின் வளர்ச்சியைக் காட்டுவதாக இருந்தால் மட்டுந்தான், அதனை வரவேற்கலாம்.
            ஆயினும்,
            ஒருவன், தனது லட்சியத்தை அடைந்தே தீருவது என்ற உறுதியுடன், தோல்விகளுக்குத் தலை வணங்காது, தளரா தன்னம்பிக்கையுடன், எதிர்த்துப் போராடி வென்று, கடுமையாக உழைத்து, வாழ்க்கையில், கல்வி, பொருளீட்டுதல், பதவி, புகழ், என  அனைத்துத் முனைகளிலும் முன்னேற்றம் அடைந்து, ஒரு முக்கிய புள்ளியாக, சமுகத்தால் கருதப் பட்டால், அதனை முன்னேற்றமாகக் கொள்வது பொருத்தமுடையதா?
           
            இத்தகையோரைக் கணிசமான அளவில் கொண்ட நாட்டை ஒரு முன்னேறிய நாடெனக் கூறுவது ஏற்புடையதா?
            கண்டிப்பாக இல்லை.
            அல்லது,    
                  ’இன்றும் வருவது கொல்லோ, நெருநலும்
           


கொன்றது போலும் நிரப்பு?’

             வறுமையினால், நேற்று சாப்பாடு கிடைக்காமல், பட்டினியில் பரிதவித்தது போல், இன்றும் பட்டினி கிடக்கவேண்டி வருமோ’ என அஞ்சி, அஞ்சி வேதனைபடும், நிலை மறைந்து,
            ’எல்லாரும் எல்லாமும் பெற்று, இல்லாதாரே இல்லை என நிலையுற்று,
            ’பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டான்
            ஆற்ற விளைவது நாடு’
 என வள்ளுவர் வகுத்த இலக்கணப்படி அமைந்துள்ள நாட்டைத் தான் முன்னேறியதாகக் கொள்ளலாமா?
           
            இன்றைய சூழலில், ஒருவன், அவனது செல்வம், கல்வி, பதவி, புகழ் இவற்றை வைத்துதான், எடை போடப்பட்டு, தர வரிசைப் பட்டியலில், கணிக்கப்படுகிறான். இவற்றிலும் செல்வத்தை மையப்படுத்தி, கல்வியைக் கூட பின்னுக்குத் தள்ளி, மதிக்கப் படுகிறான் என்பதை  மறுக்க முடியாது.
           
             ஆனால், சான்றோர்களால் இது ஏற்கப்படுவதில்லை.
            இந்த உலகம், குழந்தை, முதியோர், மகளிர் என பார்க்காமல், லட்சக் கணக்கான மக்களை, விழுங்கிய,  இயற்கைச் சீற்றங்களையும், போர்களையும், காலரா, புற்று நோய் போன்ற நோய்களையும் மீறி, இன்னும் அழியாமல் இருப்பதற்கானக் காரணத்தை, வள்ளுவர் கண்டுபிடித்துத் தந்துள்ளார்.
            ’கண்ணோட்டம் என்னும் கழிபெரு காரிகை
            உண்மையான் உண்டுஇவ் வுலகு’
            இரக்கம் என்னும் சிறப்பு மிக்க அழகு, இருக்கிறக் காரணத்தால் தான், உலகம் இன்னும் தொடர்கிறது என்கிறார்.
            ’வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடினேன்’ என்று கண்ணீர் உகுத்த வள்ளலார் வாழ்ந்த நாட்டில் தான், சாண் வயிற்றுக்குப் பிடி சோறு கூட கிடைக்காமல், உயிரிழக்கும் ஏழைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
            வாழ்வாங்கு வாழ்ந்திடத் தகுதியை, இவ்வையம் பெற்றிட, பெள்தீக பொருட்களாகிய செல்வமோ, பட்டமோ, பதவியோ புகழோ இவற்றை விட, உள்ளத்தில்,
            1, இரக்கம்,
            2. பணிவு, மற்றும்,
            3. நேர்மை ஆகிய பண்புகள் அவசியம்.
இவை இல்லாமல்,மற்ற செல்வங்களை மட்டுமே உள்ளடக்கிய முன்னேற்றம், சவத்திற்கு ஒப்பனை செய்து, விலையுயர்ந்த அணிகலன்களால், அலங்கரித்து, சிங்காரிப்பதற்கு ஒப்பாகும்.
                       இரக்கம் எனும்  அடிப்படை மனித பண்பு பெரும்பாலான மக்களிடம் காணப்படுவதில்லையே.
           

இரக்கம் இலாதவர் பூமிக்கு சுமை ; அஃதுஇலார் உண்மைநிலக்கு பொறை’ எனக் கடுமையாக சாடியுள்ளார்.
            பிறர் படும் துயர் கண்டு, இரங்கி, இயன்ற உதவிகளைச் செய்யாதவரையில், ஒருவன் என்னதான் வாழ்வில் வெற்றி பெற்றிருந்தாலும்
அவனை முன்னேறியவனாக, ஏன், ஒரு மனிதனாகவே கருத முடியாது.
            அவர் ஒரு தொழில் சாம்ராஜ்யத்திற்கே அதிபதி. ஆனாலும், அவர் தொடர்ந்து, செய்யும் தொழில்களை விரிவு படுத்தியும், புதியத் தொழில்களைத் தொடங்கியும்,மேலும் மேலும் கோடிகளைக் குவிப்பதிலியே குறியாக வாழ்ந்தார்.
            அவருக்கு இருந்ததோ ஒரே மகள், அவளையும் ஒரு கோடீசுவரக் குடும்பத்தில் மருமகளாக்கி, எவ்விதக் குறையுமில்லாமல் வாழ்ந்திட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார்.
            இருந்தும், அவர் வசித்ததோ, மூன்று விருந்தினர்களுக்கான படுக்கை அறைகளுடன், கூடிய ஒரு இரண்டு மாடிக் கட்டிடத்தில் தான்.  பயணிப்பதோ, குளிர்சாதனவசதி கூட இல்லாத ஒரு பழைய நாலு சக்கர வாகனத்தில்தான். உடையும் மிக எளிமை. கையில் கட்டியிருந்ததோ, தோல்பட்டையுடன் கூடிய ஒரு சாதாரண சிறிய கடிகாரம். மோதிரம், சங்கிலி என குந்துமணி தஙகம் கூட அவரிடம் பார்க்கமுடியாது
            சிறிய செல்வந்தர்கள்கூட, ஆடம்பர வசதிகளுடன் கூடிய பெரிய மாளிகை, இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு கார் என பகட்டாகப் பவனி வரும்போது, இவருடைய எளிமை, பலவிதமான கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாயிற்று.
      
            ’கஞ்சன், வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத முட்டாள், புதையலை காக்கும் பூதம்’ இப்படி கொச்சைப்படுத்தினர். அவருக்கு இவை தெரியவந்தாலும் பொருட்படுத்தாது, தனது கொள்கையில் பிடிவாதமாகவே இருந்தார்.
            இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் மனம் திறந்தார்.
            ’இதோ பாருங்கள், எனது வங்கி புத்தகத்தை’ காட்டினார்.
            சேமிப்புக் கணக்கில், வெறும் ஏழு லட்சம் ரூபாய்கள்தான் இருந்தது.
அவர் வசிக்கும் அந்த மாடி கட்டிடமும் காருந்தான் அவரது சொத்து.
            அப்படியென்றால், மீதியுள்ள ஆயிரக் கணக்கான கோடிகள் எங்கே?       ’எனது தேவைகள் மிகவும் குறைவு தான், இருப்பதை வைத்துக் கொண்டு எஞ்சிய காலத்தை சுகமாக கழிக்கமுடியும். அப்படியிருந்தும் நான், ஏன் இன்னும் பணத்தை சம்பாதிப்பதில் ஆவலாக இருக்கேன்னுதான் கேள்வி. இதையும் பாருங்கள்’ ஆவணங்கள் பலவற்றைக் காட்டினார்.
            அனைத்துமே, ஒரு பெண்மணியின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட அறக் கட்டளைகளுக்கானவை.
            மருத்துவம், கல்வி, முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருமணம் எனப் பல காரணங்களுக்காக நிறுவப் பட்டதாக அறிவித்தது. ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவற்றிலிருந்து வரும் வட்டியிலிருந்து மேலே குறிப்பட்ட உதவிகளுக்காகச் சிலவிடப்படவேண்டும் என காட்டியிருந்தது.
     


     ஆனால், அவற்றை நிர்வகிக்கும் குழுக்களில்  ஒன்றில் கூட இவர் பெயர் இல்லை.
            வியப்பில் குழம்பியபடி விழித்தவரிடம், தொடர்ந்தார்.
      ’போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ இந்த பழமொழிக்கு, நான் காணும்  உண்மையான பொருள், இதுதான்.’ நிறுத்தி மேலும் தொடர்ந்தார்.
              ‘ஒரளவு வசதியுடன் நீயும் உன் குடும்பமும் வாழத் தேவையான செல்வம் சேர்ந்ததும், போதுமென்று நின்று விடாதே. ஆனால், அதே நேரத்தில் பேராசையினால், உனக்கு  உள்ளதிற்கு மேலே சொத்துகளைக் குவித்துக் கொள்ளாதே. அதற்காக உனது எஞ்சிய காலத்தை,கடவுள் உனக்கு அருளிய திறமையை பயன்படுத்தாமல் வீணடிக்கவும் கூடாது.. மேலும் சம்பாதி. அவற்றை, ஏழைகள், பணமில்லாத காரணத்தால், படிக்க முடியாதவர்கள், மருத்துவ வசதி பெற முடியாதவர்கள் போன்ற பிறரது வாழ்க்கையை மேம்படுத்தத் திருப்பிவிடு.’
நண்பர் வியப்புடன் பார்க்க, அவர் ’நான்ஆரம்பித்த புதியத் தொழில்களால், ஆயிரக்கணக்கான இளஞர்களுக்கு வேலை, அவர்களின் குடும்பத்திற்கு ஒரு நிலையான வருவாய் கிடைத்ததல்லவா. இதனால் நாட்டின்  தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. அது மட்டுமில்லை, இத் தொழில்களால் கிடைக்கும் லாபத்தை இன்னும் பல சமுகத்திற்கான, கீழ் மட்டத்திலுள்ளவர்கள் வீடு கட்டிக் கொள்ள, தொழில் தொடங்க, என
 பலவற்றிற்காக அறக் கட்டளைகளை நிறுவி உதவலாமே..அந்த அறக்கட்டளைகளில் குறிப்பிடப்பட்ட பெண்மணி என் தாயார்தான்,’ முடித்தார்.
             நண்பர் உள்ளம் நெகிழ்ந்து, கண்களில் நீர் மல்க அவரை இறுககட்டித் தழுவி பாராட்டினார்.
            இது கற்பனை அல்ல.
            ஆனால், இந்த உயர்ந்த மனம் ஏன்,  எல்லா செல்வந்தர்களிடம் காணப் படுவதில்லை? ஏழேழு தலைமுறைக்கு, சொத்துக்களைக் குவிப்பதில்தானே கவனம் செலுத்துகிறார்கள். அல்லது, உள்ளதே போதும் என்று முடங்கி விடுகிறார்கள்.
            ஏன்?
            ’உள்ளம் பெரும்கோயில், ஊன் உடம்பு ஆலயம்’ என்ற திருமூலர், அந்த உள்ளத்தில் உறையும் ‘சீவன்தான் சிவலிங்கம்’ ஆண்டவன் எனத் தெளிவு படுத்துகிறார். இதன் மூலம் நம்முள் இறைவனே குடிகொண்டுள்ளான் என்பதை நாம் உணரவேண்டும். 
            கீதையிலும், ‘மமை வாம்சோ ஜீவலோக ஜீவபூத சனதனஹ’ இந்த பிரபஞத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் என் அம்சம் தான்’ என்றும்,
‘சமோஹம் சர்வ பூதேஷு,’ எல்லா உயிர்களிலும் நான் சமமாக இருக்கிறேன்’என பல இடங்களில், தான் எல்ல உயிர்களிலுள்ளும் உறைந்திருக்கிறேன் என எள்ளத்தனை ஐயத்திற்குமிடமின்றி தெளிவாக விளக்கியுள்ளார்.

           


உபநிடதங்களிலும், ‘அஹம் பிரம்மாஸ்மி’, தத்வமஸி’ நானும் பிரம்மம், நீயும் பிரம்மம் என்கின்றன.
            ஸ்வாமி விவேகாநந்தரும், உன்னுள் குடிகொண்டுள்ள,இறைவன் தான், நீ பார்க்கும் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான் என்பதை மறவாதே’ என்கிறார்.
             ’நீ பிறருக்கு செய்யும் சேவை தான் ஈசனுக்கு மிகவும் உவப்பை அளிக்கும் உண்மையான வழிபாடு’ என்றுரைத்து, ஒருவன் பட்டினியால் வாடுவதை கண்டும் உதவாமல், கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை இறைவன் ஏற்கமாட்டான், என்றும் வலியுறுத்தி, மக்கள் சேவையே முக்கியம் என்கிறார்.
            இதனையே திருமூலரும்,
            ’நலமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
            படமாடக் கோயில் பகவற்கு அதாமே’
என்கிறார். ஈசன் தனக்கு நிவேதனம் செய்யப்படும் சுவையுள்ள பலவித ஆகாரங்களை விட, பசியினால் தவிக்கும் ஒரு ஏழைக்கு இரங்கி, அளிக்கப்படும் ஒரு பிடி சோற்றைதான், ஏற்கிறார், என்கிறார்.
            அகத்தியரிடம் யோகம் பயில,வடநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர் தான், சுந்தரநாதன்.
            தமிழகத்திலுள்ள திருஆவடுதுறையை அடுத்த சாத்தனுர் எனும் கிராமம், சுந்தரநாதனின் உள்ளத்தை மாற்றி, உடலையும் உரு மாற்றி, கற்க வந்தவரை, ஆண்டிற்கு ஒரு பாடலாக, உலகத்திற்கே இன்றும் கற்பிக்கும், 3000
 பாடல்களை, திருமந்திரம் எனும் ஒப்பற்ற வாழ்க்கை முறை நூலாக அருளச் செய்தது.
            இத்தைகைய, அதிசயம் நிகழக் காரணம், சுந்தரநாதனின் இரக்கம், பிற ஜீவராசிகளின் துயர் கண்டு  துடைத்திடச் செய்யும் இரக்கம் தான்
            தாங்கள் இஷ்டம் போல் திரிந்து, மேய்ந்து, வயிறார உண்டு மகிழ்ந்திட,
நாள் தோறும் பசுமையான புற்கள் மண்டிகிடக்கும், மேய்ச்ச்சல் திடல்களைத்  தேர்ந்தெடுத்து, அழைத்துச் சென்று, தாங்கள் குதித்து விளயாடி மேய்வதை ரசித்தபடி, தங்களைத் தட்டியும் தழுவியும் கொடுத்து, மகிழ்விக்கும், ஆ பாலன், மூலன், இறந்ததைக் கண்டு, மனிதர்களைப் போல், வாய் விட்டுக் கதறி, வார்த்தைகளால் வேதனையை வெளிப்படுத்தி அழமுடியாமல், ‘அம்மா, அம்மா,’ எனத்  தங்கள் மொழியில் கத்தித் துடித்து, கண்களில் நீர் அருவியென வழிந்தோட,  மூலனின் உடலை சுற்றி சுற்றி வந்து, தவிப்பதைக் கண்டார், சுந்தரநாதன்.
            நன்றி கொன்ற ஆறறிவு மக்களே நிறைந்த உலகில், ஐந்தறிவு,பசுக்கள் அவனிடன் கொண்ட அன்பு, அவர் நெஞ்சை உருக்கியது. பசுக்களின் கண்ணீர் துடைக்க விழைந்தார்.
            எட்டு சித்திகளில் ஒன்றான, தன் உடல் உகுத்து, பிற உடல் புகும் கலையைப் பயன்படுத்தி, மூலனின் உயிறற்ற உடலில் பிரவேசித்தார்.
            திருமூலர் பிறந்தார். பசுக்கள் மகிழ்ந்தன. பூலகத்திற்கு திரு மந்திரோபதேசமும் கிட்டியது.
            திருமூலர், பிறர்க்கு உதவ, மிக எளிய வழிகளை நமக்கு,  தந்துள்ளார்.
           


’யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
            யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
            யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
            யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே
பசுவிற்கு ஒரு பிடி புல்லும், ஏழைக்கு ஒரு பிடி சோறு வழங்கமுடியாவிட்டலும், ஆறுதலாக, கனிவாகப் பேசுவது கூடவா நம்மால் முடியாது?
            ’மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாரை’ உலகமே கைதூக்கி தொழும்’.

3.       பணிவு. பணிவுடன் வாழ்வது எல்லோர்க்கும் பெருமை தரும். அதிலும், செலவந்தரிடம் இந்த பண்பு அமைந்திருந்தால், அது தான் ,அவர்களுடைய மாபெரும் செல்வம் என்கிறார் வள்ளுவர்.
’எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து’
            திரு ராமகிருஷ்ண ராவ் அவர்கள் ஓர் மாநில ஆளுனர். குள்ளமான உருவம். எளிமையானத் தோற்றம்.  அந்த பதவிக்கான பகட்டை முற்றிலும் விரும்பாதவர். அவர் நன்கு படித்தவர் மட்டுமல்ல பல மொழிகள் அறிந்தவர்.
     அவர் எப்போதும்,  யாரிடமும் தான் யார் என்பதை விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார். மற்றவர்களைப் போல், வரிசையில் நிற்பது, போன்ற  அந்தந்த இடத்திலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றித்தான் நடப்பார்.
            ஒருமுறை அவர், புட்டபர்த்தியுலுள்ள பகவான் பாபா அவர்களைத் தரிசிக்க வந்தார். இப்போதுள்ளது போன்ற உணவு வசதிகள் இலாத காலம். உணவு வேண்டுவோர், முன்கூட்டியே, உணவக பொறுப்பாளரிடம் சொல்லி, அதற்கான கட்டணத்தையும் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் உணவு கிடைக்காது.
            திரு ராமகிருஷ்ண ராவ் அவர்கள் பாபாவைத் தரிசித்துவிட்டு,உணவகத்திற்குச் சென்று பொறுப்பாளரிடம், தனக்கு உணவு வேண்டுமென்று மிகப் பணிவுடன் கேட்டார்.
            அந்த பொறுப்பாளர் இயற்கையாகவே, முன்கோபத்துடன் முரட்டு சுபாவமும் கொண்டவர். அதுவும், திரு ராமகிருஷ்ண ராவ் அவர்களின் குள்ளமான உருவமும், எளிமையானத் தோற்றமும், பணிவான வேண்டுகோளும், பொறுப்பாளரை, வந்தவரைத் தவறாக எடைபோட வைத்தது.
            ஆத்திரமுற்று, ‘ நீ என்ன கவர்னரா. நீ கேட்ட நேரத்திலே நீ கேக்கற சாப்பாட்டை போட. ஒரு பருக்கை சோறு கூட கிடைக்காது. போ, போ’ என, மரியாதையில்லாமல் ஒருமையில் திட்டி விரட்டிவிட்டார்,
             ராவ் அவர்களும் எதுவும் சொல்லாது வெளியேறினார்.
            ஆளுனரை தேடி அலைந்து கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரி, அங்கு வந்தார். நடந்ததை  அறிந்து, பொறுப்பாளரிடம், ‘அவரை நீ என்ன கவர்னரான்னு கேட்டீர்களே, அவர்தான் கவர்னர்  திரு. ராமகிருஷ்ண ராவ் அவர்கள். அவரை மரியாதை இல்லாமல் நடத்தி சாப்பாடு போடாமல் விரட்டி விட்டீர்களே.’ எனக் கடிந்து கொண்டார்.
           


பொறுப்பாளர் பயத்தில், உள்ளமும் உடலும் நடுநடுங்க, ஆளுனரைத் தேடி ஓடிவந்தார். கூப்பிய கைகளுடன் ஆளுநரிடம் தன்னை மன்னித்து விடும்படி வேண்டினார்.
            ஆளுனரோ அமைதியாக’ நீங்கள் ஓரு தவறும் செய்யவில்லை’ என்று சொல்லி, அவரது பயத்தை தெளிவித்தார்.
            முன்னாள் குடியரசு தலைவர், திஉ. அப்துல் கலாம் அவர்கள், பணிவிற்கு இலக்கணமாக விளங்கியதை இந் நாடே கண்டுள்ளது.
           
4.       நேர்மை.

இவர் பரம்பரையாகவே செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ரயில்வேத் துறையில், ஏ பிரிவு  அதிகாரியாக சேர்ந்து, அத் துறையின் நிர்வாக வாரியத்தின் தலவைராக ஓய்வு பெற்றார்.
            ஒல்லியான உருவம். இரைந்து பேச மாட்டார். எளிமையான உடை, அமைதியான சுபாவம். உடன் பணியாற்றிய அதிகாரிகள், மற்றும் கீழ் வேலை
 செய்யும் ஊழியர்கள் என அனைவரின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர். அரசு அளித்த எந்த வசதிகளையும் தவறாகப் பயன்படுத்த மாட்டார்.
            அலுவகம் வந்த பிறகு, விடுப்பு எடுக்க வேண்டி வந்தால், விடு திரும்ப அரசு வாகனத்தை உபயோகப்படுத்தமாட்டார். அவரே வெளியே வந்து, ஒரு ஆட்டோவை ஏற்ப்பாடு செய்துகொள்வார். இவருடைய சேவைக்காக அரசு வழங்கியுள்ள நான்காம் நிலை சிப்பந்தி உதவ முன்வந்தாலும் தடுத்து விடுவார். அனைவரையும் பன்மையிலே அழைப்பார். வேலையில் கண்டிப்பு காட்டினாலும், கண்ணியம் தவறமாட்டார்.
            இவர் வாரியத்தலவைராக இருந்தபோது ஒரு நிகழ்வு.
            தனது மகளின் திருமணத்தை நடத்திட தனது சொந்த ஊருக்கு, விடுப்பில் வந்திருந்தார். ரயிலில் வரும்  விருந்தினர்களை வரவேற்க ரயில் நிலையத்திற்கு வந்தார். இவரை நிலைய அதிகாரி வரவேற்று தனது அறைக்கு அழைத்தார்.
            இவர் ‘நான் இப்ப ஒரு பப்ளிக். நீங்கள் நிலையத்திற்கு வரும் அவர்களில் ஒருவராகத் தான் என்னை கருத வேண்டும் என மறுத்தார். நிலையத்திற்குள் நுழையத் தேவையான நடைமேடை சீட்டு வாங்க, தானே வரிசையில் நின்று, பெற்றுக் கொண்டுதான் நிலையதினுள்ளே சென்றார்.
            ரயில்வே அமைச்சராக இருந்த அமரர் திரு லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள், அரியலூர் ரயில் விபத்தையடுத்து, அதற்குப் பொறுபேற்று, தானாகவே முன்வந்து, அமைச்சர் பதவியை விட்டு விலகினார். வீடு திரும்ப, தானே ஒரு வாடகை காரை அமர்த்திக் கொண்டார்.
            இவர் காலமானதும், ஊடகங்கள், பிரதமராக பதவி வகித்த, இவருக்கு சொந்த வீடு கூட கிடையாது என்பதை வெளிபடுத்தி, நாட்டையே அதிசயிக்க வைத்தன.
           


இன்றும் கூட, ஒரு சில நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனக்களில், பயணிகள், விட்டுச் சென்ற, பணப்பைகள், ஆபரணங்கள், பிற
விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை, காவல் துறையினரிடம், ஒப்படைப்பதை பத்திரிகைகள் வாயிலாக அறிகிறோம்.             
            அமரர், திரு ப. ஜீவாநந்தம் அவர்கள், தமிழக சட்டப் பேரவை  உறுப்பினராக இருந்தவர். அவர் எளிமை, நேர்மை இவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
            சொந்த வீடு இல்லாத அவர் ஒரு குடிசையில் வாழ்வதைக் கண்டு, திகைத்து வருந்திய அப்போதைய முதல்வர் அமரர் திரு காமராஜர் அவர்கள், திரு ஜீவாநந்ததிற்கு ஒரு வீடு தருவதாகக் கூறினார்.
            அதற்கு, ‘முதல்வர் அவர்களே, தமிழகத்திலுள்ள வீடில்லாத அனைவருக்கும் இருக்க சொந்த வீடு அமைத்துக் கொடுங்கள். அப்போது நானும் தாங்கள் கொடுக்கும் வீட்டினை கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறேன்’ எனப் பணிவாகக் கூறி, மறுத்து விட்டார்.
            இந்த நேர்மைப் பண்புள்ளவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், அவர்களின் எண்ணிக்கை, மிக மிகக் குறைவாகத்தான் உள்ளது.
            இதில் வேதனையூட்டும் அம்சம், அத்தகைய நேர்மையாளர்களை, சமூகம், ‘இளிச்சவாயர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள்’ என ஏளனம் செய்வதுடன் திருப்தி அடைவதில்லை. அவர்களின் நேர்மையை, ‘கோழைகள்’ எனக் கொச்சைப் படுத்தவும் செய்து ஆனந்திக்கின்றனர்.
            மொத்தத்தில், அதிசயப் பிறவிகளாக உள்ள, இத்தைகைய உயர் பண்பாளர்கள், ‘ வியப்பிற்குரிய விதிவிலக்குகளாகவேக் கருததப்படுகின்றனறே அன்றி, பின்பற்றத்தக்க முன்னுதாரணங்களாகக் கொள்வதிற்கில்லை’ என்ற நிலைப்பாடே, சமூகத்தில் காணப்படுகிறது.
            காரணம், இரக்கம், பணிவு, நேர்மை, ஆகிய உயர் பண்புகள், இன்றையச் சூழலில், நடைமுறைக்கு ஒத்து வராது, என்ற நம்பிக்கை, மக்கள் மனங்களில் ஆழமாக வேருன்றிவிட்டதுதான்.     
            இதனைக் களைந்திட, ஆன்மிக அறிவு மிகவும் இன்றியமையாதது.
            வாழ்க்கையில் முன்னேறத் தேவைகளான, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆகியவற்றை வலியுறுத்தும் இந் நூல், பாதை தவறி, ஆன்மிகத்திற்குத் தடம் புரண்டதாக ஒரு ஐயம் எழலாம்.
            ஆன்மிக அடிப்படையற்ற எந்த முன்னேற்றமும், மின்மினி பூச்சிகளின் வெளிச்சந்தான். எதற்கும் இந்த ஒளி பயன்படாது.
             இதற்கு மேலை நாடுகளே சான்று.
            அதனால்தான், பொருளாதாரத்தில் மிகவும் முனேறிய நாடுகளிலுள்ள பெரும் செல்வந்தர்கள்கூட, நிம்மதி இழந்து, அதனைப் பெற, ஆன்மிகத்தில் வழிகாட்டியாகத் திகழும் நாடான பாரத்திற்கு வருகின்றனர்.             
            ‘EVERYONE MUST REALIZE THAT GOD IS SITTING IN THE TEMPLE OF EVERY HUMAN BODY, AND REVERE AND SERVE THEM.’
           




THE GREAT SECRET OF TRUE SUCCESS, OF TRUE HAPPINESS IS THIS; THE MAN OR WOMAN WHO ASKS FOR NO RETURN, THE PERFECTLY UNSELFISH IS MOST SUCCESSFUL’
                                          SWAMI VIVEKANANDAR.
            ’ஒவ்வொரு மனிதனையும் இறைவன் உறையும் ஆலயமாக கருதி, அவருக்கு தொண்டாற்ற வேண்டும்’
            எந்த பிரதி பலனையும் எதிர்பாராது, சிறிதும் சுயநலமே இல்லாது, பணியாற்றுபவர் அடையும் வெற்றியும் ஆனந்தமுந்தான், உண்மையானது.
                                          ஸ்வாமி விவேகாநந்தர்.                    
            தான் சந்திக்கும் எந்த மனிதரையும், தன்னப்போல் கருதி, மரியாதை செலுத்தி நடந்து கொள்பவனே மனிதன் என அழைக்கப்படத் தகுதியுள்ளவன்.
            ’பிறர் உன்னிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களிடம் நடந்து கொள்’ என்கிறது பைபிள்          ஒவ்வொரு ஜீவராசியையும், இறைவனின் அம்சமாகவே மதித்து, இயன்ற உதவிகளை செய்யும், படிக்காத, பணமில்லாத, ஒரு ஏழையைத்தான் வாழ்க்கையில் முன்னேறியவனாகக் கொள்ளவேண்டும்.
            அத்தகைய உயர்ந்த பண்பாளர்கள் உள்ள நாடு தான், முன்னேறிய நாடாக தன்னைச் சொல்லிக் கொள்ளும் தகுதியுள்ளது.
            குறைவற்ற செல்வம், அனுமன் வால் போல் நீளும் கல்வித் தகுதிகள், உலகே போற்றும் புகழ், பிற நாடுகளைப் பயமுறுத்தும் பதவி ஆகியவற்றைமட்டும், தனது முகவரிகளாக் கொண்டு, ஏழை எளியோர்களுக்கு  உதவும் உள்ளமில்லாதவனை உயிருள்ளவனாகவே கருதக்கூடாது.
 இத்தகையோரைக் கொண்ட நாட்டை, முன்னேறிய நாடாக, கருதுவது மடமை.  
 இரக்கம்,
 பணிவு, மற்றும்,
 நேர்மை,
இவற்றினை உள்ளடக்கி,                
             தளரா உழைப்பு,
             எந்நிலையிலும் தடுமாற்றமடையாத தன்னம்பிக்கை, மற்றும்           
             ’’ஒம்பலற்ற’ விடா முயற்சி,
ஆகியவைகளே, முன்னேற்றத்தின் முத்திரையைப் பதிக்க விழைவோரின் நிரந்திர             முகவரியாகும்.
      அதுவே,
      சாதனையாளர்களின் பதிப்புரையாக என்றென்றும், சரித்திரத்தில்

 பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment